”‘மாநாடு’ தயாரிப்பாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”டி. ராஜேந்தர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வெளியான மாநாடு திரைப்படம் சம்மந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் நாங்கள் பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே. படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். ’மாநாடு’ வெளியீட்டுக்கு முந்தையநாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது. இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.

படத்தின் தொலை்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்திரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரியமனதுடன் ஒத்துக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்திரவாதம் தர முனவந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைகாட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனை திரும்பி தருகிறார்.

image

ஆனால், திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன்உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?

ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?
இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டூ உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்? வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக,

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. ஆனால், அந்தப் படத்தை வெளியிடுவதில் இறுதி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாததால், படத்திற்கு வாங்கிய கடனில் 5 கோடியை தயாரிப்பாளர் திருப்பி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த படம் வெளியீட்டுக்கு பிறகு தயாரிப்பாளர் கொடுக்காவிட்டால் நாங்கள் பொறுப்பு என சிலம்பரசனின் பெற்றோர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா ஆகியோர் கடிதம் வழங்கியிருந்தனர்.ஆனால் படம் வெளியான முதல்நாள் காலை பத்து மணிக்கே அந்த கடிதத்தை பைனான்சியரிடம் திரும்பபெற்று அவர்களிடமே வழங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கூறுகிறார். மேலும் நிலுவையில் இருந்த கடனையும் அடைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் தான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனக்கு தெரியாமலேயே தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்துள்ளனர் என டி.ராஜேந்தர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.