ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை, தீவிரமாக எடுத்து கண்காணிக்கப் போவதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும், தந்தம், பல், முடிக்காக யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவதால், தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சி.பி.ஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

image

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில்தான் யானைகள் அதிக அளவில் உள்ளதாகவும், ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் செய்திகள் சமீபத்தில் வருகின்றன எனவும், இந்தியாவில் 29 ஆயிரம் யானைகள் இருந்த நிலையில், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும் அதிர்ச்சி தெரிவித்தனர்.

அப்போது மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 61 யானைகளும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளது என்று மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, யானைகள் இறப்பு தொடர்பாக குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டும் பெறப்படுவதாகவும், அந்த பரிந்துரைகள் காகித அளவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலை படுவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், யானை வழித்தடங்களில் ரயில்களை மெதுவாக இயக்கினால் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

image

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், யானைகள் வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தான் ரயில் இயக்கப்படுகிறது என்றும், 5 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கினாலும் யானை மீது மோதினால் அவை இறக்கத்தான் செய்யும் என்றும், இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக எச்சரித்த நீதிபதிகள், ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க தடுப்பு சுவர்களை எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களை கடக்கும் சூழல் ஏற்படுவதாகவும், யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.