நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டபோது அவரும் அவரின் நண்பர்களும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அக்டோபர் இறுதியில் மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆர்யன் கான் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே ஆர்யன் கானை விடுவிக்க பண பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆர்யன்கான்

இதனால் இவ்வழக்கு விசாரணையில் இருந்து சமீர் வாங்கடே விடுவிக்கப்பட்டதோடு, இவ்வழக்கு விசாரணை சிறப்பு விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்யன் கான் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தவேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புபிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். விசாரணை தற்போது சிறப்பு விசாரணைக்குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தவேண்டும். ஒவ்வொரு முறையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக செல்லும் போது போலீஸாரும் உடன் வரவேண்டியிருக்கிறது. இதனால் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் கூடுகின்றனர் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதில் நிபந்தனை தளர்த்தப்பட்டுவிட்டால் அடுத்தகட்டமாக ஆர்யன் கான் வெளிநாடு செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரி புதிய மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.