ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது.

இந்த போட்டியை ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றிருக்கிறது. வீழ்ச்சியிலிருந்து சிறப்பாக மீண்டு வந்த இங்கிலாந்து அணி மீண்டும் சொதப்பி தோல்வியடைந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைவிட 278 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்த 278 ரன்களை அடித்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதே இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் டேவிட் மலானும் மிகச்சிறப்பாக கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 159 ரன்களை அடித்திருந்தனர். நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து 220-2 என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து 58 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருந்தது. இன்னும் ஸ்டோக்ஸ், போப், பட்லர் என முக்கியமான பேட்ஸ்மேன்களும் ஆட வேண்டி இருந்ததால் இந்த போட்டியை இங்கிலாந்து அவ்வளவு எளிதாக விட்டுவிடாது என்றே தோன்றியது. ஆனால், நான்காவது நாளின் முதல் 20 நிமிடத்திலேயே இந்த எண்ணம் பொய்த்து போனது. இங்கிலாந்து அணி மீண்டும் சொதப்ப தொடங்கியது. இன்றைய நாளின் 4 வது ஓவரிலேயே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டேவிட் மலான் நேதன் லயனின் பந்தில் க்ரீஸை விட்டு இறங்கி ஆட முயன்று சில்லி பாய்ண்ட்டில் கேட்ச் ஆனார்.

நீண்ட காலமாக காத்திருந்து தனது 400 வது விக்கெட்டை லயன் வீழ்த்தியிருந்தார்.

நேதன் லயன்

82 ரன்களுக்கு மலான் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே ஜோ ரூட்டும் அவுட் ஆனார். க்றிஸ் க்ரீன் வீசிய 7 வது ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ஒரு பந்துக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். இங்கிலாந்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டிருந்த கூட்டணி வெளியேறியவுடன், மீண்டும் லூப் மோடில் வீழ்ச்சியடைய தொடங்கியது. ஸ்டோக்ஸ், பட்லர், போப் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களும் வேகவேகமாக லயன், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரின் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அங்கேயே ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அது இன்னிங்ஸ் வெற்றியாக அமையுமா என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால், க்றிஸ் வோக்ஸ் கொஞ்சம் நின்று உருட்டி இங்கிலாந்தின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்துவிட்டார். இங்கிலாந்து 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 77 ரன்களுக்குள் மட்டும் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ஆஸ்திரேலியாவிற்கு 20 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என முன்னிலையும் பெற்றிருக்கிறது.

ஜோ ரூட் – பேட் கம்மின்ஸ்

இந்தப் போட்டியின் டாஸிலிருந்தே இங்கிலாந்து அணி சொதப்பலை தொடங்கியிருந்தது. நல்ல மழைப்பொழிவுக்கு மத்தியில் அதிகமான புற்களை கொண்டிருந்த பிட்சில் டாஸை வென்று ஜோ ரூட் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது பல முன்னாள் வீரர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பிரிஸ்பேனில் 2002 ஆஷஸில் நாஸீர் ஹுசைன் டாஸில் எடுத்த முடிவு இன்று வரை கேலியாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையான மோசமான டாஸ் முடிவை ஜோ ரூட் எடுத்திருக்கிறார் என வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த விமர்சனங்களுக்கு மேலும் தீனி போடும் வகையிலேயே முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பேட்டிங் அமைந்திருந்தது. 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தனர். பர்ன்ஸ், மலான், ரூட், ஸ்டோக்ஸ் என முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லாருமே கடுமையாக சொதப்பியிருந்தனர்.அடுத்ததாக அடிலெய்டில் நடக்க இருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியை மனதில் வைத்து ஸ்டூவர்ட் ப்ராட், ஆண்டர்சன் இருவருக்குமே இங்கிலாந்து அணி ஓய்வு கொடுத்திருந்தது. இதனால் முழுக்க முழுக்க இரண்டாம்கட்ட பௌலர்களை நம்பியே இங்கிலாந்து களமிறங்கியிருந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ப்ராட், ஆண்டர்சன் இருவரில் ஒருவரை ஆட வைத்திருந்தால்கூட இங்கிலாந்து இன்னும் கொஞ்சம் போராடியிருக்க முடியும்.

சுமாரான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 278 ரன்கள் முன்னிலை பெற வைத்தனர். ஏறக்குறைய அங்கேயே இங்கிலாந்து இந்த போட்டியை இழந்துவிட்டது.

பேட்டிங், பௌலிங் இரண்டையும் தாண்டி ஃபீல்டிங்கிலும் எக்கச்சக்க சொதப்பல்களை செய்திருந்தனர். 94 ரன்களை அடித்திருந்த வார்னருக்கு மட்டும் ரன் அவுட், கேட்ச் டிராப், நோபால் அவுட் என மூன்று விக்கெட் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தனர். நோ-பால், மிஸ் ஃபீல்ட், ஓவர் த்ரோ என ஆஸ்திரேலியா அதிக முன்னிலையை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருந்தனர்.

ஜோ ரூட்

இந்த சொதப்பல்களையெல்லாம் கடந்து சில இடங்களில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி ஆட்டத்திற்குள் வரும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்திருந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் ஸ்மித், வார்னர், க்ரீன் என மூன்று விக்கெட்டுகளை வரிசையாக வீழ்ந்திருந்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா 48 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. அந்த சமயத்தில் நியுபாலை மனதில் கொண்டு லீச், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஓவர்களை வீசி டிராவிஸ் ஹெட்டை சதமடிக்க வைத்திருப்பர். அந்த சமயத்தில் மெயின் பௌலர்களை வைத்து தொடர்ச்சியாக அக்ரசிவ்வாக அட்டாக் செய்திருந்தால் போட்டி இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகியிருக்கும். அதேமாதிரி, ஜோ ரூட் – மலான் கூட்டணியும் ரொம்பவே சௌகரியமாக சிறப்பாக ஆடி இங்கிலாந்தை மீட்டுக் கொண்டிருந்தனர். திடீரென இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி சொதபியிருந்தனர். இந்த இரண்டு இடங்களிலும் இங்கிலாந்து இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஆஸ்திரேலியா இவ்வளவு எளிதில் வென்றிருக்காது.

ஸ்டார்க் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துக் கொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சிறப்பாக ஆஷஸை தொடங்கி கொடுத்தார். ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக ஆடி முதல் போட்டியை வென்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. கேப்டனாக பேட் கம்மின்ஸும் வெற்றியோடு தொடங்க கலக்கியிருக்கிறார்.

அடுத்த போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கிறது. ப்ராடும் ஆண்டர்சனும் இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவனுக்குள் வரப்போகிறார்கள். முதல் போட்டியின் தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு சாம்பலிலிருந்து இங்கிலாந்து மீண்டெழுமா? காத்திருப்போம்!!!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.