ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே சிலரின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமையக்கூடும். `பாண்டவர் பூமி’ படத்தின் மூலம் அத்தகைய அடையாளத்தைப் பெற்றார் ஷமிதா ஶ்ரீகுமார். அதன்பிறகு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாத நிலையில், சின்னத்திரையில் களமிறங்கினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் `பேரன்பு’ சீரியலில் நடிக்கும் ஷமிதாவிடம் பேசினோம். சரியான சினிமா வாய்ப்புகள் அமையாத ஏக்கத்தை, அவரின் பேச்சு அழுத்தமாகக் காட்டிக்கொடுக்கிறது.

ஷமிதா – ஶ்ரீகுமார்

“என் கூடப்பிறந்த அக்கா ராஜேஸ்வரி, `பொற்காலம்’ படத்துல முரளி சாருக்கு தங்கையா நடிச்சாங்க. `புன்னகை தேசம்’ ஹீரோ தருண் என் தம்பிதான். அவரின் அம்மாவும் என் சித்தியுமான ரோஜா ரமணி தெலுங்குல நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க. இப்படி சினிமாத்துறையைச் சேர்ந்த குடும்பமா இருந்தாலும், எனக்கு ஆக்டிங் ஆசையெல்லாம் பெரிசா இல்லை. எதேச்சையா ஒருமுறை என்னைப் பார்த்த டைரக்டர் சேரன் சார், அவரின் `விண்ணோடும் முகிலோடும்’ படத்துல என்னை ஹீரோயினா அறிமுகப்படுத்தினார். அதுல பிரசாந்த் சாருக்கு ஜோடியா நடிச்சேன்.

சில காரணங்களால அந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆகிடுச்சு. உண்மையைச் சொல்லணும்னா, அந்த முதல் பட வாய்ப்பு நிறைவேறாம போனதுல எனக்குப் பெரிய ஏமாற்றம். காலேஜ் படிப்புல மட்டும் கவனம் செலுத்தலாம்னு நினைச்சப்போ, `உன் திறமைக்குச் சரியான வாய்ப்பு கொடுக்கிறேன்’னு சொல்லி, `பாண்டவர் பூமி’யில என்னை ஹீரோயினா நடிக்க வெச்சார் சேரன் சார். அந்தப் படத்தோட வெற்றியால, `தமிழ் சினிமாவுல உனக்குப் பெரிய எதிர்காலம் உண்டு’ன்னு பலரும் சொன்னாங்க.

‘பாண்டவர் பூமி’ படத்தில்…

அதன்படியே, அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ராஜு சுந்தரம் சாருக்கு ஜோடியாவும் ஒரு படத்துல நடிச்சேன். ஆனா, அடுத்தடுத்து நான் நடிச்ச நாலு படங்களும் ரிலீஸாகல. சினிமாதான் என் கரியரா இருக்கும்னு நினைச்சிருந்த நேரத்துல, அடுத்தடுத்து ஏமாற்றமே கிடைச்சா யாருக்குத்தான் வருத்தம் இருக்காது? ரொம்ப காலம் காத்திருந்த நிலையில, இனியும் சினிமாவையே நம்பிட்டிருந்தா சரிப்பட்டு வராதுன்னு தோணுச்சு.

அந்த நேரத்துலதான் சன் டிவி-யில `சிவசக்தி’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல் முடியுறதுக்குள்ள, அதுல என்கூட நடிச்ச ஶ்ரீகுமார் என் வாழ்க்கைத் துணையா கிடைச்சார்” என்று சிரிப்பவர், சினிமா ரீ-என்ட்ரிக்காக 20 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார். பல்வேறு படங்களில் தோன்றியிருக்கும் ஷமிதாவின் கணவர் ஶ்ரீகுமார், சின்னத்திரையில் பிரபலமான நாயகன்.

Shamitha – Sreekumar

“சினிமா, சின்னத்திரையில ஜெயிக்க திறமை மட்டும் இருந்தா போதாது. அதிர்ஷ்டமும் இருக்கணும்னு பலரும் சொல்லுவாங்க. அதை நானும் நம்புறேன். என் விஷயத்துல மட்டுமல்ல, என் கணவர் விஷயத்துலயும் இதே சிக்கல்தான். என் மாமனார் கணேஷ் (சங்கர் – கணேஷ் இணையர்களில் ஒருவர்) ஒரு காலத்துல பிரபலமான மியூசிக் டைரக்டரா இருந்தவர். அதன் தாக்கமாகூட இருந்திருக்கலாம். சினிமாத்துறையில அதிக ஆர்வம் கொண்ட என் கணவர், சினிமாவுல நடிக்க ரொம்பவே முயற்சி செஞ்சார். அதுக்காக தன்னை பல வகையிலும் அவர் தயார்படுத்திகிட்டார்.

சொல்லிக்கிற மாதிரியான பெரிய வாய்ப்புகள் அவருக்கும் அமையாததால, சின்னத்திரையில நடிச்சுகிட்டிருக்கார். நடக்கிறது நடக்கட்டும்னு எங்களைப் பக்குவப்படுத்திகிட்டோம். இப்போ என் கதைக்கு வர்றேன். சன் டிவி `திருமகள்’ சீரியல்ல கடைசியா நடிச்சேன். அதுல என் வயசுக்கு மீறின அம்மா ரோல் எனக்கு. `கொஞ்சம் வெயிட் பண்ணு. இப்பவே அம்மா, மாமியார் ரோல்ல நடிச்சா, அதுக்கப்புறம் அது மாதிரியான ரோல்கள்தான் வரும்’னு சிலர் சொன்னாங்க.

ஷமிதா – ஶ்ரீகுமார் இருவரும் மகளுடன்…

Also Read: “பா.ஜ.க முதல்வர் வேட்பாளரா என் சாய்ஸ் அண்ணாமலைதான்!” – குஷ்பு ஷேரிங்ஸ்

இப்போ சின்னத்திரை டிரெண்டு ரொம்பவே மாறிட்டதால, கிடைச்ச ரோல்ல நல்லபடியா நடிக்கலாம்னுதான் `திருமகள்’ சீரியல்ல கமிட்டானேன். ஆனா, அந்த சீரியல் தரப்புல என்கிட்ட சொன்னது ஒண்ணு; நிஜத்துல நடந்தது ஒண்ணு. நான் நடிச்ச கேரக்டர் நகர்வுல போகப் போக எனக்கு உடன்பாடில்ல. அதனால, அந்த சீரியல்லேருந்து விலகிட்டேன். இப்போ புதுசா நான் கமிட்டாகியிருக்கிற `பேரன்பு’ சீரியல்ல பாசமான அம்மா – மாமியார் ரோல் எனக்கு. இந்த சீரியல்ல எனக்கு ஏமாற்றம் ஏற்படாதுனு உறுதியா நம்புறேன்” என்பவருக்கு, தற்போதைய சின்னத்திரையின் போக்கில் பெரிய அதிருப்தி.

“நான் சின்னத்திரைக்கு நடிக்க வந்தபோதும், அதுக்கு முன்னாடியும், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் நடிகர்களைத் தேர்வு செய்வாங்க. கதையின் போக்கு எப்படி இருந்தாலும், நடிகர்களோட நடிப்புக்கான ஸ்கோப்ல பெரிசா சிக்கல் வராது. ஆனா, இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு? பெரும்பாலான சீரியல்கள்ல ஹீரோ – ஹீரோயினுக்கு இடையேயான ரொமான்ஸுக்குத்தான் இப்போ அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுது. நடிப்புக்கான ஸ்கோப் ரொம்பவே கம்மியாதான் இருக்கு. இந்தப் போக்கை எங்களாலயெல்லாம் மாத்திட முடியாது. அதனால, நம்ம கொள்கையில சில தளர்வுகளை ஏற்படுத்திகிட்டு, வர்ற வாய்ப்புகள்ல நல்ல வாய்ப்பைத் தேடிக்கிறது மட்டும்தான் எங்க கையில இருக்கு. அதைத்தான் இப்போ நானும் பண்ணியிருக்கேன்.

ஷமிதா – ஶ்ரீகுமார்

Also Read: காய்கறி, கரும்பு, பேரீச்சை… ‘கல்லுக்குள் ஈரம்’ அருணாவின் கடற்கரைத் தோட்டம்!

நிறைய சீரியல்கள்ல நடிச்சிருந்தாலும், இப்பவரை `பாண்டவர் பூமி’ படம்தான் எனக்கு முதல் அடையாளமா இருக்கு. அதுல நடிச்சிருந்த ரஞ்சித் சாரை, ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒருமுறை வெளியிடத்துல பார்த்துப் பேசினேன். `ஆட்டோகிராப்’ படத்தோட ப்ரிவியூ ஷோவுல என்னைக் கூப்பிட்டிருந்தார் சேரன் சார். அதுக்கப்புறம் அவரையும், அந்தப் படத்தின் டீம்ல வேற யாரையும் இதுவரை நான் சந்திக்கல. கல்யாணமானதுமே என் அக்கா ராஜேஸ்வரி அமெரிக்காவுல செட்டிலாகிட்டாங்க. வருஷத்துக்கு ஒருமுறை சென்னை வந்துட்டுப் போவாங்க. சினிமாவிலிருந்து முழுமையா விலகிட்டு, குடும்ப வாழ்க்கையில மட்டும் கவனம் செலுத்துறாங்க. கோவிட் சிக்கலால ரெண்டு வருஷமா அவங்க இந்தியா வரல. ஆனா, போன்ல அடிக்கடி பேசிப்போம். என் உலகம் இப்போதைக்கு இவ்வளவுதான்…” என்று கலகல சிரிப்புடன் முடித்தார் ஷமிதா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.