உங்களுக்கு ‘செல்ஃபி’ நிச்சயமாக தெரியும். ‘ஹெல்ஃபி’ தெரியுமா? மொபைல் ஃபோனில் ஒருவர் தன்னத்தானே படம் எடுத்துக்கொள்வதை செல்ஃபி எனும் சுயபடமாக கொள்கிறோம். இதேபோல ஒருவர் தனது தலைமுடியை முக்கியமாக கொண்டு எடுத்துக்கொள்ளும் படத்தை ஹெல்ஃபி (HELFIE) என்கின்றனர். தமிழில் தலைமுடி படம் அல்லது தலைப்படம் என்று வைத்துக்கொள்ளலாம்.

செல்ஃபி பழக்கமே விமர்சனத்திற்கு உரியது என நினைப்பவர்கள், இதில் ஹெல்ஃபி வேறா என நொந்துக்கொள்ளலாம். ஆனால், இணைய உலகில் ஹெல்ஃபியை, செல்ஃபியின் முக்கியமான துணைப்பிரிவு என்று கருதுகின்றனர். இதில் பிரபலங்களின் ஹெல்ஃபி என்றெல்லாம் கூட தனிப்பிரிவு உண்டாகியிருக்கிறது.

image

இதேபோல அழகிய புத்தக அலமாரிகள் ஷெல்ஃபி (shelfie) என குறிப்பிடப்படுகின்றன என்றால், பண்ணை விலங்குகளின் படங்கள் ஃபெல்ஃபி (felfie) என குறிப்பிடப்படுகின்றன. இவைத் தவிர இங்கே குறிப்பிடுவதற்கு சற்று சங்கடமான பொருள் கொண்ட இன்னொரு துணைப்பிரிவும் இருக்கிறது.

சொற்கள் புதிது: இப்படி எல்லாம் சொற்கள் இருக்கின்றனவா என அதற்குள் வியந்து போகவேண்டாம். ஏனெனில், இந்தச் சொற்கள் சொற்பமான உதாரணம்தான். இணைய மொழிக்கு இன்னும் அநேக சொற்கள் இருக்கின்றன. நாள்தோறும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.

image

இணையத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் இதுபோன்ற சொற்களை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இதற்காக என்றே ஓர் இணையதளம் இருக்கிறது தெரியுமா? ‘நெட்லிங்கோ’ (Netlingo) எனும் அந்தத் தளம் வெறும் இணையதளம் அல்ல; நவீன இணைய மொழிக்கான அகராதி. இந்த இணைய அகராதியை உருவாக்கிய எரின் ஜேன்சன் (Erin Jansen) பற்றிதான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

இணையத்தில் எத்தனையோ அகராதிகள் இருக்கின்றன. பெரும்பாலான இணைய அகராதிகள் ஆங்கில மொழி சார்ந்தவை என்றால், தமிழ் உள்ளிட்ட மொழிகளுகான பிரத்யேக இணைய அகராதிகளும் பல இருக்கின்றன. ஆனால், ‘நெட்லிங்கோ’ இணைய மொழிக்கான அகராதியாக திகழ்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இணைய யுகத்தில் அகராதிகளை அணுகுவது எளிதாக இருந்தாலும், அகராதி உருவாக்கம் என்பது இன்னமும் மொழி வல்லுனர்களின் கோட்டையாக இருக்கிறது. மொழி வளர்ச்சிக்கு ஏற்ப அகராதிகள் ஈடுகொடுத்து ஆண்டுதோறும் புதிய சொற்களை அங்கீகரித்து அகராதியில் இடம் அளித்து வந்தாலும், இதற்கான வரையறைகளும், வரம்புகளும் இல்லாமல் இல்லை.

இணைய அகராதி: இணையவாசிகள் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்கள் ஆன்லைன் பரிமாற்றத்தில் புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி பழக்கத்திற்கு கொண்டு வருகின்றனர். இணைய யுகத்து சொற்கள் தவிர, இணைய சுருக்கெழுத்துகளும் அநேகம் உருவாக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது ‘ஒஎம்ஜி’ – OMG (Oh My God) என குறைப்பட்டுகொள்ளத் தோன்றும்.

இதுபோன்ற இணைய வார்த்தைகள் எல்லாம் இணைய பரிச்சயம் மிக்கவர்களையே கூட குழப்பத்தில் ஆழ்த்தலாம். எனில், மற்றவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அப்படியிருக்க, இணையத்தின் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள். 1990களின் துவக்கத்தில் இணையம் என்பதே புதிய தொழில்நுட்பமாக மக்கள் மத்தியில் மெள்ள பிரபலமாகிக் கொண்டிருந்த நிலையில், அதில் புழங்குபவர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த இணைய வார்த்தைகளும், அரட்டை அறை சுருகெழுத்துகளும், பெரும்பாலானோருக்கு புரியாத தனிமொழியாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?

இத்தகைய குழப்பம் யாருக்கும் ஏற்படாமல், இணைய மொழியின் புதிய சொற்களுக்கு எல்லாம் பொருள் தெரிந்துகொள்ளும் வகையில் எரின் ஜேன்சன் ‘நெட்லிங்கோ’ இணையதளத்தை உருவாக்கினார். இந்த இணையதளம் 1995-ல் அறிமுகமானது என்பதை பொருத்தமானது என்றே சொல்ல வேண்டும்.

image

மைல்கல் இணையதளம்: ஏனெனில், 1995 – இணைய வரலாற்றில் மைல்கல் ஆண்டு. இணையத்தின் வளர்ச்சிப் போக்கை தீர்மானித்த அமேசான் (இ-காமர்ஸ் முன்னோடி), இபே (இணைய ஏல முன்னோடி) , அல்டாவிஸ்டா (இணையத்தின் முதல் முழு தேடியந்திரம்), மேட்ச்.காம் (இணைய டேட்டிங் முன்னோடி), கிரேக்லிஸ்ட் ( இணைய வரிவிளம்பர முன்னோடி), கிளாஸ்மேட்ஸ் (சமூக ஊடக முன்னோடி) என மைல்கல் இணையதளங்கள் இந்த ஆண்டில்தான் உருவாயின. மேலும், விண்டோஸ் 95 அறிமுகமானது என்பதும், இணையதள உருவாக்கத்திற்கான ஜாவா மொழி அறிமுகமானதும் 95-ல்தான்.

ஆக, இணையத்தின் மைல்கல் தளங்களில் ஒன்றாக திகழும் ‘நெட்லிங்கோ’வும் 1995-ல் அறிமுகமானது என்பதை பொருத்தமானதாக கருத வேண்டும். இணைய அகராதியாக மட்டும் அல்லாமல், இணையத்திற்கான அகராதியாகவும் விளங்கும் இந்தத் தளத்தை எரின் ஜேன்சன் இணையத்தின் அதிகம் அறியப்படாத முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

‘நெட்லிங்கோ’வை இணையத்தின் பேசுமொழிக்கான அகராதி என புரிந்துகொள்ளலாம். இணையத்தின் கொச்சையான மொழி என்றும் புரிந்துகொள்ளலாம். இவற்றில் காதை பொத்திக்கொள்ளும் வகையிலான சொற்களும் உண்டு. இந்தச் சொற்களையும், இன்னும் பிற இணைய மொழி சார்ந்த சங்கதிகளையும் ‘நெட்லிங்கோ’ பட்டியலிட்டு தேடிப்பொருள் கொள்ள வழி செய்கிறது.

‘நெட்லிங்கோ’வை பயன்படுத்தும் எவரும் இப்படி ஓர் இணைய அகராதி தேவை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அதேநேரத்தில் இந்த தளத்தில் கொஞ்சம் பொறுமையாக நேரத்தை செலவிட்டால், இத்தனை ஆண்டுகளில் இந்தத் தளம் எத்தனை செழுமையாக வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் உணர்வார்கள். அதோடு புதிய சொற்கள், புதிய சேர்க்கைகள், புதிய பகுதிகள் என இந்தத் தளம் எத்தனை துடிப்பாக இருக்கிறது என்பதையும் உணர்ந்து பாராட்டுவார்கள்.

ஒருவிதத்தில் ‘நெட்லிங்கோ’வை இணயத்தின் வெகுமக்கள் அகராதி எனலாம். ஏனெனில், இணையம் சார்ந்து உருவாகும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த சொற்களையும், கருத்தாக்கங்களையும் விளக்குவதற்கு வெப்போபீடியா, டெக்டார்கெட் போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப ஆர்வம் கொண்டவர்களுக்கானவை என்றால், இணையம் சார்ந்த சொற்களில் ஆர்வம் உள்ள எல்லோருக்குமான இணையதளமாக ‘நெட்லிங்கோ’ விளங்குகிறது.

image

இணைய கலாசாரம்: ‘நெட்லிங்கோ’ தளம் உண்மையில், இணைய கலாசாரம் மற்றும் வரலாற்றை ஆவணப்படுத்தும் தளம் என்கிறார் எரின். இணையப் பேச்சு வழக்குகள், சுருக்கெழுத்துகள், சங்கேத சொற்கள், புதிய தொழில்நுட்ப வார்த்தைகள் என எல்லாவற்றையும் இந்தத் தளம் ஆவணப்படுத்தி பொருள் சொல்கிறது. இணையத்தின் பேச்சு அல்லது சைபர் பேச்சு என்று இந்தத் தளத்தை எரின் வர்ணிக்கிறார்.

தொழில்நுட்ப நோக்கிலும், படைப்பூக்க நோக்கிலும் இணையத்தில் ஆர்வம் கொண்டவர் என தன்னை வர்ணித்துக்கொள்ளும் எரின், இணையதள வடிவமைப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார். 1990-களில் இணைய நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், இணையத்தின் பேச்சு மொழியால் ஈர்க்கப்பட்டு ‘நெட்லிங்கோ’ இணையதளத்தை துவக்கினார்.

1990-களில் இணைய உலகில் அரட்டை வசதி பிரபலமாக இருந்த நிலையில், அந்தக் காலத்து பிள்ளைகள் அரட்டை அரங்கில் தங்களுக்கான தனி மொழியில் பேசிக்கொண்டனர். உரையாடலில் அவர்கள் பயன்படுத்திய பல சொற்கள் அவர்களின் உருவாக்கமாக இருந்தன. பல சொற்கள் தொழில்நுட்ப தேவைக்காக உருவானவை என்றால், இன்னும் பல சொற்கள் பெற்றோர்களுக்கு புரியாத வகையில் பேசுவதற்கான சுருக்கெழுத்துகளாகும். பி.ஓ.எஸ் (POS: Parent over shoulder) எனும் பெற்றோர் எட்டிப் பார்க்கின்றனர், பி.ஐ.ஆர் (PIR: Parent in room) பெற்றோர் அறையில் இருக்கின்றனர் என்பது போன்ற இணைய ரகசிய வார்த்தைகளை உதாரணமாக சொல்லலாம்.

அரட்டை உலகம்: இதனால் இணைய மொழி சார்ந்த உரையாடலில் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடைவெளி உண்டாவதை கவனித்த எரின், பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் இணைய மொழியை புரியவைப்பதற்காக ‘நெட்லிங்கோ’ தளத்தை துவக்கினார்.

image

இணைய மொழி இளம் பிள்ளைகளுக்கு புதிய அதிகாரத்தை கொடுத்து வருகிறது. இவற்றில் பல சொற்களை அவர்கள் உருவாக்குகின்றனர். பெற்றோர்கள் இதைப் பார்த்து கோபம் கொள்வதற்கு பதில், அவர்களுடன் இணைந்து இந்த மொழியில் பேச வேண்டும் என அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ‘நெட்லிங்கோ’ இதைத்தான் செய்து வருகிறது. இணைய மொழி தொடர்பான தலைமுறை இடைவெளியை இட்டு நிரப்பும் பணியை இந்தத் தளம் செய்து வருகிறது.

காலப்போக்கில், இணைய மொழியின் வரலாற்று ஆவணமாகவும் இந்தத் தளம் உருவாகியிருக்கிறது. இணைய அரட்டை அறை சொற்களும், சங்கேத குறிப்புகளும் புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில், அவற்றிக்கு பொருள் விளக்கம் அளித்த ‘நெட்லிங்கோ’ இணையவாசிகள் மத்தியில் பிரபலமானது. தொடர்ந்து பல ஆண்டுகள் சிறந்த தளமாக ‘நெட்லிங்கோ’ பட்டியலிடப்பட்டு முன்னிறுத்தப்பட்டு வந்தது. இணைய சுருக்கெழுத்து தொடர்பான பெரும்பாலான கட்டுரைகள் ‘நெட்லிங்கோ’ துணையுடனே எழுதப்பட்டன.

புதிய தகவல் தொடர்பு: ‘நெட்லிங்கோ’வில் பட்டியலிடப்படும் பெரும்பாலான சொற்கள் இணைய தகவல் தொடர்பிற்காக உருவாக்கப்பட்ட சுருக்கெழுத்துக்கள். இவைத் தவிர, இணைய யுகத்து தொழில்நுட்ப சொற்களும் இந்தத் தளத்தில் இடம்பெறுகின்றன. உலகில் உள்ள பலருக்கு இணையம் என்பது புதிய தகவல் தொடர்பு வழி என்பதால், பல இணைய சொற்கள் புதியவை என்பதாலும், இணைய பயனாளிகளில் பலர் புதியவர்கள் என்பதாலும் ‘நெட்லிங்கோ’ போன்ற தளம் தேவை என எரின் கருதுகிறார்.

அதற்கேற்ப ஆரம்ப கால புதுமைக்கு பிறகும், இணைய மொழியின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தத் தளத்தை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகிறார். சும்மாயில்லை… இதை ஒரு வலுவான வர்த்தகமாக (NetLingo Inc) தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

இதனிடையே, இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்ட சொற்களை ‘நெட்லிங்கோ’ எனும் பெயரில் அச்சு வடிவிலான புத்தகமாகவும் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். தொடர்ந்து இணைய சுருக்கெழுத்து சார்ந்த புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இணைய மொழி சார்ந்த விஷயங்களை வாராந்திர தலையங்க பத்திகளாகவும் எழுதி வருகிறார்.

”என்னுடைய பணி மக்களை மகிழ்விப்பது; கற்றுத் தருவது” என்று எரின் ஒரு முறை கூறியிருக்கிறார். இணைய மொழி அகராதியான ‘நெட்லிங்கோ’ மூலம் அதைத்தான் அவர் ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்.

முந்தைய அத்தியாயம் > ஸ்டார்ட் அப் இளவரசிகள் 12: ‘சமூக ஊடக முன்னோடி’ கேத்ரீனா ஃபேக் – அது ஒரு ஃபிளிக்கர் காலம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.