புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

இமயமலையின் மேற்குப்பகுதியில் ஊசியிலைக்காடுகள் அதிகம் இருக்கிறது. இங்கு எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய மரங்கள் அதிகம். ஆனால் இந்த அபாயத்தை குறைத்து, இதையே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக மாற்றும் திட்டம் ஒன்று ஹமிர்புர் பகுதியில் நடைமுறையில் இருக்கிறது.

காடுகளை சுத்தப்படுவது ஹமிர்புர் மக்களுக்கு வழக்கமான பணியாக மாறியிருக்கிறது. ஹமிர்பூர் காடுகளின் விழுந்து கிடக்கும், ஊசியிலை மரங்களின் இலைகளை சேகரிக்கும் வேலைக்கு ஆட்கள் உள்ளனர். இவர்கள் மார்ச் முதல் ஜுலை மாதம் பருவமழை தொடங்கும்வரை இந்த பணிகளைச் செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு இரண்டு டன் பைன்மர இலைகளை இவர்கள் சேகரிக்கின்றனர். பச்சை இலைகளைவிட சருகுகள் எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் குறிப்பாக அதையே சேகரிக்கின்றனர்.

image

2018ஆம் ஆண்டு மட்டும் இந்தப் பகுதியில் 35 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு காடுகள் எரிந்து சாம்பலானது. காட்டுத்தீ ஏற்படும் பகுதிகளில் உள்ளூர் மக்களை விழிப்பாக இருக்கச்சொல்லி வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் காட்டுத் தீ ஏற்பட்டால் அதை அவர்களாலேயே முடியாது என்பதுதான் நிதர்சனம். ஹமிர்புர் காடுகளில் அடிக்கடி தீப்பிடிக்க காரணம், அங்குள்ள பைன் மரங்களும், சிர் மரங்களும்தான். காட்டுத் தீயால் இந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

image

பிரிட்டிஷ் ஆட்சி செய்தபோது ரயில்பாதைகளை அமைக்க நிறைய மரப்பலகைகள் தேவைப்பட்டது. அதை பூர்த்தி செய்வதற்காக இமயமலை அடிவாரங்களில் நிறைய பைன் மரக்காடுகளை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மற்ற மரங்களைவிட பைன் மரங்கள் அதிகமாகின. இப்போது இந்த மரங்கள் கட்டுமானப்பணியிலும், எரியூட்டவும் பயன்படுகின்றன. ஐஐடி மண்டியைச் சேர்ந்த ஆர்த்தி காஷ்யப் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த வனப்பகுதியை ஆராய்ந்து, ஊசி இலைச் சருகுகளை அப்புறப்படுத்தவும், வனத் தீயை கட்டுப்படுத்தவும் ஒரு தீர்வு கண்டுபிடித்திருக்கின்றனர்.

image

முதலில் ஊசியிலை சருகுகளை சேகரிக்கிறார்கள். பின்னர் அதனுடன் மரத்தூளையும், மரச்சக்கைகளையும் சேர்க்கிறார்கள். பிறகு ஒரு சிறப்பு இயந்திரத்தில் அவற்றை அரைத்து சிறுசிறு பசுமைச் சுள்ளிகளாக மாற்றுகிறார்கள். இந்த சுள்ளிகள் நீண்ட நேரம் எரியும் தன்மை உள்ளவை. அது மட்டுமில்லாமல் எரியும்போது, நிலக்கரியை விட கார்பன் மற்றும் மீத்தேனை குறைவாக வெளியிடுகின்றன. இந்தச் சுள்ளிகளுக்கு காப்புரிமையும் பதிவு செய்துவிட்டார்கள். ஆனால் அந்தப்பகுதி மக்களுக்கு இதனால் தடை எதுவும் இல்லை. அவர்கள் இதே பாணியில் சுள்ளிகளையும், விறகுகளையும் உருவாக்கலாம். ஆனால் அதற்கான இயந்திரங்களை வாங்க ஏழு லட்ச ரூபாய் அல்லது எட்டாயிரம் யூரோ தேவைப்படுகிறது. இந்த தொகை அந்த கிராமவாசிகளுக்கு மிக மிக அதிகம். அதனால் அரசு பல சலுகைகளை கொடுக்கிறது. ஆனாலும் இதுவரை 25 பேர் மட்டுமே இதை தொழிலாகச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். இதனால் இங்கு நிறையப்பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் வேலைக்காக நீண்டதூரம் பயணிக்கவேண்டிய அவசியமின்மையும் ஏற்பட்டிருக்கிறது.

image

ஹமிர்பூர் மக்களுக்கும், வனக்காவலர்களுக்கும் இந்த தொழில் மூலமாக பல நல்ல மாற்றங்கள் நடந்திருக்கிறது. முன்பெல்லாம் காட்டுத்தீ குறித்த பயத்தில் இருந்த இவர்கள், தற்போது பத்திரமாக இருப்பதாக உணர்கின்றனர். கால்நடைகள் மேய்வதற்கும் புல்வெளிகள் கிடைத்திருக்கிறது. நல்ல பலன் கொடுத்திருக்கும் இந்த திட்டத்தை இந்த பிரதேசத்தில் மற்ற பகுதிகளிலும் அமல்படுத்தலாம். இதனால் வனம் பற்றி எரிவது குறையும். கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும், சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாத எரிபொருளும் கிடைக்கும்.

Eco India: இமயமலை அடிவாரத்தில் நதிகளில் தேங்கும் விதவிதமான குப்பைகள் – களமிறங்கும் பெண்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.