90கள் மற்றும் 80-களுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரையிலும் தேன் மிட்டாய், மணிலா உருண்டை (கடலை மிட்டாய்), எள்ளுருண்டை, கமரகட்டு போன்றவை பலருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான இனிப்புப் பண்டங்களின் பெயரைச் சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா..?

இந்த சுவையான இனிப்பு பொருள்களைத் தங்களின் இல்லங்களிலேயே உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் செந்தில்குமார் என்பவரைச் சந்தித்தோம். விழுப்புரம் – கிழக்கு பாண்டி ரோட்டின் அருகே உள்ளது அவரது இல்லம். இன்முகத்தோடு வரவேற்ற அவர், கடலை மிட்டாய் செய்யும் இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

ஊழியர்களுடன் செந்தில்குமார்

“நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதுக்கு அப்புறமா அப்பாகூட சேர்ந்து நானும் இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பிச்சுட்டேன். முதன்முதல்ல இந்தத் தொழிலை இங்க ஆரம்பிச்சது என்னுடைய தாத்தா வைரவன். `வைர விலாஸ்’ என்ற பெயரில் கம்பெனி மாதிரியே வச்சு இந்தத் தொழிலை செஞ்சுகிட்டு வந்தாரு. என் தாத்தாவுக்கு ஆறு பசங்க, நாலு பொம்பள பிள்ளைங்க. எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் இந்தத் தொழிலை சிறப்பா செஞ்சுகிட்டு வந்திருக்காங்க. இவங்க இல்லாம, 10 பணியாட்களையும் வச்சு இந்தத் தொழிலை நல்ல முறையில் செஞ்சுகிட்டு வந்திருக்காரு எங்க தாத்தா.

அப்போதெல்லாம் `மணிலா கேக்’ (கடலை மிட்டாய்) மட்டும்தான் செய்வாங்களாம். `வைர விலாஸ் கடலை மிட்டாய்’ அப்படின்னா சுத்துப்பட்டுல இருக்கிற எல்லாக் கிராமத்துக்கும் தெரியும். தாத்தாவுக்கு அப்புறமா அவரின் பிள்ளைங்க நாலு பேரு இந்தத் தொழிலை எடுத்து செய்ய ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தருதான் என்னுடைய அப்பா சௌந்தரபாண்டியன். `நியூ வைரவிலாஸ்’ அப்படின்னு பெயரை மாத்தி தொழிலை செஞ்சுகிட்டு வந்தாரு. கடலை மிட்டாயோடு சேர்த்து கமர்கட்டையும் செய்து விற்பனை பண்ண ஆரம்பிச்சாரு.

நானும் அப்பா கூட சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பிச்சேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பா தவறிட்டாரு. அதிலிருந்து இந்தத் தொழிலை நான் கையில எடுத்து பண்ணிக்கிட்டு வரேன். என்னுடைய அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, `பாண்டியன் விலாஸ்’னு பெயரை மாத்தி வீட்டிலேயே தொழிலை செஞ்சுகிட்டு வறேன்.

இப்போ செய்முறைக்காக மட்டும் கொஞ்சம் மெஷினரியாக மாத்தியிருக்கேன். மத்தபடி எல்லாத்தையும் கையாலதான் செய்றோம். இப்ப மல்லாட்டை கேக், கமர்கட், எள்ளுருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, பொரி உருண்டை, தேன்மிட்டாய், பால்பன் போன்ற பொருள்களை உற்பத்தி செஞ்சு விற்பனை பண்றோம்.

செந்தில்குமார், அவரின் மனைவி

Also Read: முட்டை மிட்டாய் சாப்பிட்டிருக்கீங்களா….? இதுதான் இப்போ டிரெண்டிங்

உற்பத்தி செய்யும் மிட்டாயை உருண்டை பிடிப்பது போன்ற வேலைக்காகப் பத்து பெண்கள் இங்கு வேலை செய்றாங்க. எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்து என் மனைவியும் இந்த தொழிலில் முழு ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எனக்கு வெளியில போற வேலை ஏதாவது இருந்தாலும், அன்னைக்கு செய்ய வேண்டிய வேலையை சரியா செஞ்சு முடிச்சிடுவாங்க.

எல்லா வகையையும் சேர்த்து ஒவ்வொரு நாளைக்கும் 20,000 ரூபாய்க்கு உற்பத்தி செய்வோம். அதை அப்படியே தினம் தினம் விற்பனை செஞ்சிடுவோம். மறுதினம் மீண்டும் புதுசா தொடங்குவோம்.

எங்ககிட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 விலையில் ஒவ்வொரு பீஸ் மிட்டாய்கள் கிடைக்கும். ரூ.20, ரூ.40, ரூ.50னு பாக்கெட்லையும் பொருள்கள் கிடைக்கும். இது இல்லாம ஜாடி மூலமாகவும் பேக்கிங் செய்து கொடுப்போம். எடைக்கு ஏத்தமாதிரி விலை மட்டும் மாறும்.

தாத்தாவும் அப்பாவும் இந்தத் தொழிலை செஞ்சபோது சுத்துப்பட்டுல இருக்கிற கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் விற்பனை செஞ்சுகிட்டு வந்தாங்க. இப்போ நான்… விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, குடியாத்தம், திருக்கோவிலூர், வேலூர், சென்னை போன்ற பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன்.

அந்தந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மொத்த வியாபாரிகளுக்கு மொத்தமாகப் போய் சேர்ந்திடும். அவங்க மூலமா, அங்குள்ள சிறு வியாபாரிகளுக்கு சரக்கு போய்டும். இந்த மொத்த வியாபாரிகளை எல்லாரையும் நானே நேராகச் சென்று பேசி பிடிச்சதுதான். இந்தத் தொழிலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுதான் வருகிறேன்.

Also Read: படித்தது ப்ளஸ் டூ… வருமானம் 300 கோடி! கடல் உணவு ஏற்றுமதியில் கலக்கும் ஜெகன்

ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் அளவுக்கு உற்பத்தி செஞ்சேன் அப்படின்னா, எல்லா செலவும் போக கையில 3,000 ரூபா நிக்கும். பொங்கல் போன்ற சமயத்தில கொஞ்சம் கூடுதலாக உற்பத்தி செய்வோம். அப்போ லாபமும் நல்லாவே இருக்கும்.

எங்க அப்பா காலத்துல இந்தத் தொழிலை பண்ணும்போது நல்லா பண்ணாங்க. எனக்கும் இந்தத் தொழிலை செய்வதற்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான் நானும் தொடர்ச்சியாகப் பண்றேன்.

எப்படிப் பார்த்தாலும் இந்தத் தொழில் 75 வருட பாரம்பர்யம். எனவே, இதை `பிராண்டாக’ பண்ணணும், கம்பெனியாக மாத்தணும், வெளியில இடங்களுக்குக் கொண்டு போகணும் அப்படின்னு எனக்கு ஆசை இருக்கு. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுகொண்டுதான் வரேன். கூடிய சீக்கிரத்துல பண்ணிடுவேன்” என்று உணர்ச்சி பொங்க பேசினார் செந்தில்குமார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.