புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (68). இவர் தென்னங்குடி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். இவர் மகன் சசிகுமார் (49). திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். அதனால், சசிகுமார் அவ்வப்போது வேலை காரணங்களுக்காக வெளி நாடுகளுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், வழக்கம் போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி அவர் தந்தை இறந்த தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சவுதியிலிருந்து விமானம் வழியாகப் பெங்களூரு வந்தடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக வர நீண்ட நேரமாகும் என்பதால், என்ன செய்வதென்று யோசித்திருக்கிறார். வீட்டிலிருந்து இறந்து போன தந்தையின் உடலை உடனே அடக்கம் செய்ய வேண்டும் என்று போனில் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதனால், சசிகுமார் உடனே தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வரத் திட்டமிட்டார்.
ரூ.5 லட்சத்துக்குத் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்த சசிகுமார், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்கினார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு தென்னங்குடிக்குச் சென்றவர், அப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். அப்பாவின் இறுதிச்சடங்கிற்காகவும், கடைசியாக அவரின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதாலும் பணத்தைப் பொருட்படுத்தாது, ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகனைப் பொதுமக்கள் அனைவரும் நெகிழ்ந்து போய் பார்த்தனர்.

இது தொடர்பாக சுப்பையாவின் உறவினர்களிடம் கேட்டபோது, “உடல் நலக்குறைவால் இறந்தவர் உடலை ரொம்ப நேரம் போட்டுவச்சிருக்கக்கூடாது. அதே நேரத்துல அவரு மகன் சசிகுமார் வந்து தான் அடக்கம் பண்ணனும். இதுபத்தி சசிகுமார் கிட்ட சொன்னதும், அவனாகவே புரிஞ்சிக்கிட்டு காச பத்தி எல்லாம் யோசிக்காம லட்சக்கணக்குல செலவு பண்ணி ஹெலிகாப்டர்ல வந்து இறங்கி அவங்க அப்பாவ நல்லபடியா அடக்கம் பண்ணிட்டான்” என்றனர்.
Also Read: புதுக்கோட்டை: முறைகேடாகப் பத்திரப்பதிவு; திடீரென சரிந்த கட்டடம்! – இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர்