பெண்கள் மாதவிடாய் நாள்களில் நாப்கின், டாம்பூன்ஸ், மாதவிடாய் கப் எனப் பலவற்றை தங்கள் தேர்வுக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். அவற்றில், பெரும்பாலும் நாப்கின்களே பலராலும் விரும்பப்படுகின்றன. நாப்கினை தவிர மற்றவையின் பயன்பாடு குறித்துப் பெண்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், மேலும் அவற்றை பயன்படுத்துவது குறித்த ஒரு பயமும், நாப்கினை மட்டுமே பெண்கள் நாட ஒருவகையில் காரணமாக இருக்கிறது.

இந்நிலையில், மாதவிடாய் கப்பை (Menstrual Cup) எப்படி பயன்படுத்துவது, ஏன் அது எளிமையான சாதனமாக இருக்கிறது என்பது பற்றி விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் கௌரி மீனா.

மகப்பேறு மருத்துவர் கௌரி மீனா

Also Read: How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

“பெண்களுக்கு மாதவிடாய்க் காலப் பயன்பாட்டுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய வரம், இந்த மாதவிடாய் கப் என்று கூறலாம். பார்ப்பதற்கு சிறிய அளவிலான கப் போன்று இருக்கும் இந்த மாதவிடாய் கப் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இருந்தாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கப், பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாத வகையிலே தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய பின் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர், மறுமுறை பயன்படுத்தலாம். பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுத்தப்படுத்துவதால் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை.

சிறுநீர் வெளிவரும் வழி, இனப்பெருக்க வழி, மலத்துளை இவை மூன்றையும் தசை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். எனவே, மாதவிடாய் கப் பயன்படுத்தினால் தசைத் தளர்வால் அது இறங்கிவிடும் என்ற அச்சம் தேவையற்றது.

காப்பர் டீ உள்ளிட்ட கர்ப்பத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் தங்களது நிலையில் இருந்து மாறிவிடுமோ என்று அச்சப்படலாம். அவ்வாறு நிச்சயமாக நிகழாது.

ஹைமன் எனப்படும் கன்னித்திரை, மாதவிடாய் கப் பயன்படுத்தும் போது பாதிப்புக்கு உள்ளாகாதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் மாதவிடாய் கப் பொருத்தும் போது ஹைமன் அதற்கேற்றவாறு தகவமைந்துவிடும்.

Menstrual Cup (Representational Image)

Also Read: How to series: How to remove underarm darkness? I அக்குள் கருமையை நீக்குவது எப்படி?

ஏன் மாதவிடாய் கப்பை பயன்படுத்த வேண்டும்?

நாப்கின், டாம்பூன் போன்றவற்றை பயன்படுத்தும்போது அதன் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், ஒரு மாதவிடாய் கப்பை பலமுறை பயன்படுத்தலாம் என்பதால் நாப்கின், டாம்பூன் கழிவுகளை இதன் மூலம் குறைக்கலாம்.

ஒரு மாதவிடாய் கப்பை, நேர்த்தியாகப் பராமரிக்கும் பட்சத்தில் 10 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் முன் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

நின்ற நிலையில், அல்லது இண்டியன் டைப் டாய்லெட்டை பயன்படுத்தும்போது அமரும் நிலையில் அமர்ந்து மாதவிடாய் கப்பை பொருத்தவேண்டும். இப்படிச் செய்வது மிகச் சிறந்தது.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், மாதவிடாய் கப்பை இரண்டாக மடித்து உள்ளே செலுத்த வேண்டும். பின் அதனை விடுவிக்கும் போது பாராசூட் போன்று விரிவடையும். அதன்பின் அதனை மெதுவாகச் சுழற்றினால் சரியாகப் பொருந்திவிடும். அதேபோல, ரிமூவ் செய்யும்போது ஆள்காட்டி விரலால் அதற்குச் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வெளிவந்துவிடும்.

மாதவிடாய் கப்களில் பல அளவுகள் உள்ளன. பொருந்தும் அளவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

மாதவிடாய் கப்பை பயன்படுத்துவதில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்தும்போது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை எடுத்துச் சுத்தப்படுத்தி மறுபடி பயன்படுத்துங்கள். நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படக் கூடிய அலர்ஜி இதில் ஏற்படாது.

ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் போது காயம் தவிர்க்க விரல்களில் நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.