கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியிருக்கும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்திலிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டிருக்கிறது. இந்த நீர், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டிச் செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 3 மதகுகள் மற்றும் 18 மணல்வாரி மதகுகள் தற்போது வரை திறக்கப்படவில்லை.

அதாவது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரங்கள், கட்டைகள், குப்பைகள் ஆகியவை மதகுகளில் சிக்கிவிடும் என்பதால், மணல்வாரி மதகுகளையும் பொதுப்பணித்துறையினர் திறந்துவிடவில்லை. அதேபோல, மருதூர் கீழக்கால், மேலக்கால், வடகால், தென்கால் ஆகிய வாய்க்கால்களையும் திறந்துவிட வில்லை. இவ்வாறு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் வரும்போது வாய்க்காலைத் திறந்துவிட்டால் மடைகள் உடையும் அபாயம் இருப்பதாகவும் பொதுப்பணித்துறையினர் காரணம் சொல்கிறார்கள்.

மருதூர் தடுப்பணையை தாண்டிச் செல்லும் நீர்

இந்த வெள்ளத்தால், ஏரல் பழைய தாம்போதி ஆற்றுப் பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தோடிச் செல்கிறது. இதனால் அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதிக படியான தண்ணீரால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து, கடந்த 3 நாள்களாக முடங்கியிருக்கிறது. இந்த நிலையில், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றுப் பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் நீர் அதிகமாக திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த வெள்ள நீர், புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள், தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

மேலும் ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

“ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும், அதிகப்படியான வெள்ளத்தின் போதும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் பாசனக் குளங்களை முழுமையாக தூர்வாரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் விவசாயிகள்.

Also Read: குமரி: மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு! – அடித்துச் செல்லப்பட்ட பாலம்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.