சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்திரா (பெயர் மாற்றம்). 55 வயதாகும் இவர் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், `என்னுடைய மகள் கவிதாவுக்கும் (26) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அமெரிக்காவில் வேலைப் பார்க்கும் ஒருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்தாண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், வெளிநாட்டு செல்போன் நம்பரிலிருந்து என்னுடைய செல்போனுக்கு என் மகளின் ஆபாச புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக போனில் பேசிய மர்ம நபர், 250 டாலர்கள் கொடுத்தால் படங்களை அழித்துவிடுவேன். இல்லையென்றால் மாப்பிள்ளைக்கும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

மிரட்டல்

அவரின் புகாரை பெற்றுக்கொண்ட டி.பி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். மேலும், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் பணம் கேட்டு மிரட்டியவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்த ரமேஷ் (51) எனத் தெரியவந்தது. சந்திராவின் 25 ஆண்டுகால குடும்ப நண்பரான ரமேஷ், அமெரிக்காவில் இன்ஜினீயராக பணியாற்றிவருகிறார். அதையடுத்து, ரமேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “புகாரளித்த சந்திரா, சென்னையில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரும் சென்னை போரூரில் குடியிருக்கும் ரமேஷின் மனைவியும் பள்ளிகூட நண்பர்கள். கடந்த 1994-ம் ஆண்டு முதல் ரமேஷ், அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சென்னையிலிருக்கும் உறவினர்களைப் பார்க்க சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. இந்தச் சூழலில், ரமேஷின் குடும்பமும் சந்திராவின் குடும்பமும் கடந்த 25 ஆண்டுகளாக நட்பாக பழகிவந்திருக்கின்றனர். அதனால் கடந்த 2019-ம் ஆண்டு சந்திராவின் மகள், மேற்படிப்பிற்காகஅமெரிக்கா சென்றிருக்கிறார். அப்போது ரமேஷின் குடும்பம் சந்திராவின் மகள் கவிதாவுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறது. இந்தச் சமயத்தில் கடந்த 2020- சந்திரா, அவரின் கணவர் ஆகியோர் சென்னையில் வீடு வாங்குவதற்கு பணம் தேவைப்படுவதாக ரமேஷிடம் 50 லட்சம் ரூபாயை கேட்டிருக்கின்றனர். அதனால் ரமேஷ், சந்திரா குடும்பத்தினருக்கு 50 லட்சம் கடனாக கொடுத்திருக்கிறார்.

Also Read: `பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்!’ – வேலூர் டிராஃபிக் எஸ்.ஐ-க்குத் தண்டனை

மிரட்டல்

இந்தச் சமயத்தில் ரமேஷுக்கு பணம் தேவைப்பட்டிருக்கிறது. அப்போது சந்திராவிடம் 50 லட்சம் ரூபாயை கேட்டிருக்கிறார். கடந்த 6.11.2021-ம் தேதி ஒரு மாத விசாவில் சென்னைக்கு ரமேஷ் வந்திருக்கிறார். அப்போது பணத்தைக் கேட்டபோது சந்திராவின் குடும்பத்தினர் பணம் இல்லை என்று கூறியிருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், சந்திராவின் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார் . உடனடியாக சென்னையிலிருந்தபடியே வெளிநாட்டு சிம் கார்டைப் பயன்படுத்தி சந்திராவின் செல்போனுக்கு அவர் மகளின் ஆபாச புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார். அடுத்து குரலை மாற்றி சந்திராவிடம் ரமேஷ் போனில் பேசி, 250 டாலர்களைக் கேட்டிருக்கிறார்.

அதனால் அதிர்ச்சியடைந்த சந்திரா, ரமேஷிடமே விவரத்தைக் கூறி மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரிக்கும்படி கூறியிருக்கிறார். அதற்கு ரமேஷ், விசாரிப்பதாகக் கூறியதோடு மிரட்டல் நபர் அனுப்பியதாக சில மெசேஜ்களையும் சந்திராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு சந்திரா, காவல் நிலையத்தில் புகாரளித்ததும் செல்போன் சிக்னல் மூலம் ரமேஷ்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தோம். அதை ஆதாரத்துடன் சந்திராவிடம் தெரிவித்தபோது அவர் முதலில் நம்பவில்லை. அதன்பிறகு ரமேஷைக் கைது செய்து சிறையில் அடைந்துவிட்டோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.