கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கல்லடை ஊராட்சியில் வரும் மேல வெளியூரில் இறந்த சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய ஒரு சரியான பாதை இல்லாமல், ஆற்றுவழியே கடந்து செல்லும் அவலநிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

ஆற்றைக் கடந்து இறுதி யாத்திரை

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அந்த வகையில், தற்போது அதிக மழை பெய்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழ்நிலையில், ஆற்றுக்குள் இறங்கிச் சடலத்தை எடுத்துச் செல்லும் ஆபத்தான நிலை இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் புலம்புகின்றனர். மேலும், அவ்வாறு ஆற்றுக்குள் இறங்கிச் செல்லும்போது ஆட்களை இழுத்துச்செல்லும் அபாயமும் ஆபத்தும் இருப்பதாக மக்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

ஆற்றைக் கடந்து இறுதி யாத்திரை

இது குறித்துப் பேசிய மக்கள், “கல்லடை குளத்திலிருந்து வரும் தண்ணீர் மேலேவெளியூரில் உள்ள காட்டு வாய்க்கால் வழியாக, பேரூர் குளத்தை அடைந்து, அங்கிருந்து வாய்க்காலைச் சென்றடையும். மேலவெளியூர் கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. அவற்றில், சுமார் 400 பேர் வசித்துவருகிறோம். எங்களுக்கென்று தனியாக மயானம் இல்லை. எங்கள் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளாக இதே நிலையில் வாய்க்காலில் இறங்கி சுடுகாட்டுப் பாதையைக் கடக்கவேண்டியிருக்கிறது. அவ்வாறு அங்கு கடந்து சென்ற பிறகு, அங்கு சடலத்தை எரிப்பதற்கு அல்லது புதைப்பதற்கு எரி மேடையோ அல்லது மண்டபமோ என்று எந்தவித வசதியும் இல்லை. இந்தச் சூழ்நிலையில், கல்லடை கிராமம், மேலே வெளியூரைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் இயற்கை எய்தினார். அவரின் சடலத்தை எடுத்துக்கொண்டு நல்லடக்கம் செய்யக் கொண்டு செல்லும் வழியில், வாய்க்காலைக் கடந்து செல்ல ரொம்ப சிரமப்பட்டோம். அந்த வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது. அந்தத் தண்ணீருக்குள் இறங்கிச் சென்று அவரை நல்லடக்கம் செய்தோம். இப்படி மழைகாலத்தில் ஒவ்வொரு முறையும்ஆபத்தான நிலையில் நாங்கள் ஆற்றைக் கடக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே, அரசு இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்வதற்குச் சரியான சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். வாய்க்காலைக் கடப்பதற்கு பாலம் ஒன்று அமைத்துக் கொடுக்க வேண்டும். எங்கள் கிராமத்துக்குச் சுடுகாடு அமைத்து தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.