கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி, பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. போலீஸார் இன்னும் குற்றவாளியை கைது செய்யவில்லை. இந்தநிலையில், அந்த மாணவி படித்த பள்ளியில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெங்கமேடு காவல் நிலையம்

Also Read: `பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

கரூர், சேலம் பைபாஸில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 19 – ம் தேதி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். “பாலியல் தொல்லையால் சாகிற கடைசி பொண்ணு நானாகதான் இருக்கணும். எனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது. நான் வாழ்வதற்கு ஆசை, ஆனால் செல்கிறேன். இந்த பூமியில் வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் அனைவருக்கும் உதவி செய்து வாழ்வேன்’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன், ‘கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியை டி.வியில் அடிக்கடி பார்த்ததால், அந்த பெண் இடத்தில் தன்னை பொருத்திப் பார்த்துக்கொண்டு, மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் செல்போனை ஆராய்ந்ததில், பாலியல் சம்பந்தமான எந்த தடயங்களும் இல்லை. பள்ளிக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பேட்டிக் கொடுத்தார். இந்த நிலையில், அந்த மாணவியின் உறவினர்களை புகார் கொடுக்க வந்தபோது, அவமரியாதையாக நடத்தினார் என்று கண்ணதாசனை முதலில் காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர்.

சரவணன்

அதன்பிறகு, அவரை சஸ்பெண்டு செய்தனர். இந்த நிலையில், ஏ.டி.எஸ்.பி கீதாஞ்சலி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை. இந்த சூழலில், அந்த தனியார் பள்ளிக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்த பள்ளி வாகனத்தையும் மறித்து போராட்டம் நடத்தினர். “இந்த விசயத்தில் பள்ளி தரப்பில் தீர விசாரிக்கணும். அங்கேதான் தப்பு நடந்திருக்கு. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கணும்’ என்று பேட்டிக் கொடுத்தனர். இந்த நிலையில்தான், அந்த மாணவி படித்த பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் திடீரென்று நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கரூரை சேர்ந்த சரவணன் நேற்று பள்ளியில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு சென்றாராம்.

ஆனால், அவர் தனது சொந்த ஊரான குப்புச்சிப்பாளையத்துக்குச் செல்லாமல், திருச்சி மாவட்டம், துறையூர் அருகில் உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள அவரின் உறவினர் வீட்டுக்கு சென்றாராம். அதன்றகு, அந்த வீட்டில் சரவணன் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள். மாணவி தற்கொலைக்கும், சரவணனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா அல்லது சொந்த பிரச்னைகளுக்காக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சரவணன் எழுதி வைத்ததாக ஒரு கடிதம் கிடைத்ததாக சொல்கிறார்கள். அந்த கடிதத்தில், ‘என்னை எல்லோரும் தவறாக பார்க்கிறார்கள். மாணவியின் தற்கொலைக்கும், எனக்கும் தொடர்புள்ளது போல் பார்க்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. மேலும் நான் பள்ளிக்கு சென்றபோது, ஒரு மாணவர் என்னை நேரடியாக நேரடியாக கேட்டான். எனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது.

அந்த கடிதம்

அதனால், எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்துகொள்கிறேன். மாணவர்களை கோபத்தில் திட்டியிருக்கலாம். எல்லோரும் என்னை மன்னியுங்கள். எல்லோரும் நன்றாக படியுங்கள்” என்று எழுதியிருப்பதோடு, மனைவி, குழந்தைகளுக்கு, ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்றும், அவரின் தாயை இரண்டுமுறை குறிப்பிட்டு, ‘ஐ மிஸ் யூ’ என்று எழுதியிருப்பதாகவும் தெரிகிறது. மாணவி விவகாரத்தில் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் தொனியில் இந்த கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள். அடுத்தடுத்து, அந்த பள்ளியில் தற்கொலை விவகாரங்கள் தொடரவே, ‘பள்ளி தரப்பில் முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று சமூக ஆர்வகர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.