தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நடிகை கெளரி கிஷன்-அனகா நடிப்பில் ‘மகிழினி’ ஆல்பம் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும் காதலிப்பது திருமணம் செய்துகொள்வது ஃபேஷன் அல்ல. அது, பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றம் என்பதை தன்பாலின ஈர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ உலகம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் இதுகுறித்த புரிதல் மக்களிடம் இல்லை. ஒரு பெண், ஆணை காதலிப்பதற்கே எதிர்க்கும் சமூகம், பெண் பெண்ணை காதலிக்கவும்.. திருமணம் செய்துகொள்ளவும் ஏற்றுக்கொள்வார்களா என்ன? ”பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்பதை அழுத்தமாகவும் அழகாகவும் விழிப்புணர்வூட்டுகிறது ‘லெஸ்பியன்’ தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் ‘மகிழினி’ ஆல்பம் பாடல்.

image

மதன் கார்க்கி வரிகளில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் நேற்று வெளியான இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருப்பதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் 5 வது இடத்தில் இருக்கிறது. சமூக அக்கறையோடு பாலசுப்ரமணியன், இப்பாடலை இயக்கியுள்ளார். இவர், ‘இமைக்கா நொடிகள்’ மூலம் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிகிறார். விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் தற்போது பணிபுரிந்து வருகிறார். ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளனர்.

‘மகிழினி’ ஆல்பத்தில் நடிகைகள் கௌரி கிஷனும் அனகாவும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக நடித்துள்ளார்கள். பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இருவருக்குமான உறவு… பெற்றோர்களை சம்மதிக்க வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை 7 நிமிட பாடலில் ஒரு குறும்படத்தைப் பார்த்த அனுபவத்தையும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீதான அக்கறையும் ஏற்படுத்துகிறது ‘மகிழினி’ பாடல். கீர்த்தனா வைத்தியநாதன் குரலும் விஷ்வகிரண் நடனமும் கெளரி கிஷன் – அனகாவின் கலர்ஃபுல் காஸ்டியூம்களும் ‘மகிழினி’ பாடலை திரும்பத் திரும்ப பார்த்து மகிழும்படியாக ’அனைத்து தரப்பினருக்கும்’ ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.