நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகிலிருக்கும் சமூகரங்கபுரம் கிராமத்தில் இலங்கைத் தமிழர் முகாம் இருக்கிறது. இந்த முகாமில் தயானந்த் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். முகாம் வாழ் இலங்கைத் தமிழரான அவர், அருகிலிருக்கும் கிராமங்களில் கட்டடத் தொழிலுக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பற்றி வந்தார்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தயானந்த் குடும்பத்தினர்

வள்ளியூர் கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த 18-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தயானந்த் மீது லாரி மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட தயானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவரின் மரணத்துக்குக் காரணமான லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயானந்த் மனைவி அனுஷா வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read: `இங்குதான் பிறந்தேன்; இலங்கை கலாசாரம் தெரியாது!’-குடியுரிமைச் சட்டத்தால் கலங்கும் சேலம் முகாம் அகதி

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸார் அந்த ஓட்டுநருக்குப் பதிலாக வேறொரு நபரை வழக்கில் சேர்த்திருப்பதாக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் மட்டுமல்லாது காவல்துறையினரும், லாரி உரிமையாளருக்கும், ஓட்டுநருக்கும் ஆதரவாகக் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் கூறப்படுகிறது.

தன் கணவர் மீது லாரி மோதிய சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முகாம் வாழ் இலங்கைத் தமிழரான அனுஷா தன் குடும்பத்தினருடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

உயிரிழந்த தயானந்தின் தந்தை சுப்பையா, தாய் பார்வதி, குழந்தைகள், மனைவி அனுஷா ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நெல்லை மாவட்டச் செய்தித் தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்டோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தயானந்த் மனைவி அனுஷா நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இது பற்றி பேசிய அவர், “என் கணவரின் சம்பாத்தியத்திலே எங்க குடும்பம் நடந்துச்சு. இப்போ அவர் இல்லாம பிள்ளைகளை எப்படி வளர்க்கப் போறேன்னு தெரியலை. அதனால் என் குழந்தைகள் கல்விக்கு அரசு உதவி செய்யணும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர் தயானந்தின் மனைவி அனுஷா

என் கணவர் மீது மோதிய லாரி ஓட்டுநருக்குப் பதிலா வேறொரு நபரை கேஸில் சேர்க்க முயற்சிக்கிறாங்க. இது தொடர்பா எங்களிடம் பலர் வந்து பஞ்சாயத்து செய்யுறாங்க. ‘ஒரு லட்சம் கொடுக்கிறோம். இந்த கேஸில் இருந்து ஒதுங்கிக் கோங்க’னு மிரட்டுறாங்க. எங்களுக்குப் பயமா இருக்கு. அதனால் தான் ஆட்சியரிம் வந்து புகார் அளிச்சிருக்கோம்” என்றார்.

இது பற்றி வள்ளியூர் காவல்துறையினரிடம் கேட்டதற்கு,“முகாம் வாழ் இலங்கைத் தமிழர் தயானந்த் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய லாரி யாருடையது என்பது தெரிந்துவிட்டது. அதை ஓட்டியவர் யார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் சரியான நபர்கள் மீது தான் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்” என்றார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.