தொடர் கனமழையால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க, தமிழக அரசு தங்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்நிலையில், நிவாரணம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு டெல்டா விவசாயிகளை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

முதல்வருடன் விவசாயிகள்

Also Read: பயிர்க்காப்பீடு: `காலநீட்டிப்புக்கு எல்.முருகன் வழிவகை செய்யவேண்டும்!’ – டெல்டா விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக வெற்றிகரமாக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, தொடர் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, ஆரம்பநிலையிலேயே பயிர்கள் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.

இம்மாவட்டங்களில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், அறுவடை நிலையில் பாதிப்பை சந்தித்த நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் மழைநீரில் இளம் பயிர்கள்களை இழந்த விவசாயிகளுக்கு, மறு சாகுபடிக்காக, விதைநெல், நுண்ணூட்ட சத்துகள் மற்றும் ரசாயன உரங்கள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், விவசாயிகளுக்கு ஏராளமான பணத்தை நிவாரணமாக வாரி வழங்குவது போல், பொதுமக்கள் மத்தியில் ஒரு போலியான தோற்றத்தை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம், “சம்பா தாளடி பட்டத்துல ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருந்த நிலையிலதான், இளம் நெற்பயிர்கள், கனமழையில சிக்கி, அழிஞ்சிடுச்சு. கடந்த பத்து நாள்களா, விவசாயிகள் மனதளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டிக்காங்க. தமிழக அரசு, நிச்சயமாக, விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கும்னுதான் எல்லாருமே நம்பிக்கிட்டு இருந்தோம்.

ஆனா, இப்ப, தமிழக அரசு அறிவிச்சிருக்குற நிவாரணம்ங்கறது, மிகப்பெரிய மோசடியா இருக்கு. குறுவை பட்டத்துல அறுவடைக்குத் தயாராக நெற்பபயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்னு அறிவிச்சிருக்காங்க. டெல்டா பகுதிகள்ல 90 சதவிகிதம் குறுவை அறுவடை முடிஞ்சிடுச்சு. அதுமாதிரியான பயிர்கள் அதிகமா இல்லைங்கறது தெரிஞ்சிதான் ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் நிவாரணம்னு அறிவிச்சிருக்காங்க.

விவசாயி ராமலிங்கம்

டெல்டா பகுதிகள் முழுக்கவே சம்பா தாளடி பட்டத்துல சாகுபடி செஞ்சிருந்த இளம் பயிர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு. இளம் பயிர் பாதிப்புக்கு, மறுசாகுபடிக்காக, ஒரு ஹெக்டேருக்கு 6,038 ரூபாய் மதிப்புள்ள விதைநெல், நுண்ணூட்ட சத்துகள், யூரியா, டிஏபி உள்ளிட்ட ரசாயன உரங்கள் வழங்கப்படும்னு சொல்லியிருக்காங்க. இது விவசாயிகளோட நலன்களுக்காக கொடுக்கல. ஒரு சில நபர்களின் ஆதாயத்துக்காகதான் இப்படி பொருள்களா கொடுக்குறாங்க. இது மோசடியான அறிவிப்பு. இதெல்லாம் தரமானதாக இருக்கும்ங்கறதுக்கான உத்தரவாதம் இல்லை.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துல கொடுக்கப்பட்ட பொருள்களே தரமில்லாமல்தான் இருந்துச்சு. அதுமட்டுமல்லாம, பட்டம் தவறிடுச்சு, இனிமே சம்பா, தாளடி பட்டத்துல நெல் பயிர் பண்ண முடியாது. மழைநீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்களுக்கு இதுவரைக்கும் விவசாயிகள் செஞ்ச உற்பத்தி செலவை நிவாரணமாகக் கொடுத்தால்தான் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். உழவு, விதைநெல், நாற்று பறிப்பு, நாற்று நடவு, அடியுரம், மேலுரம், களையெடுப்பு உட்பட இதுவரைக்கும் ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கும் மேல விவசாயிகள் செலவு செஞ்சிருக்கோம். இந்தத் தொகையை நிவாரணமா கொடுத்தால்தான் அது விவசாயிகளுக்கு உதவியா இருக்கும்.

முதல்வருடன் விவசாயிகள்

Also Read: `இவை அத்தனையையும் மீறித்தான் வென்றார்கள்!’ – விவசாயிகளின் போராட்டம் தேசத்துக்கு சொல்வது என்ன?

இதைக் கொடுக்க முடியலைன்னா, மழைநீர்ல மூழ்கின இளம் பயிர்களுக்கு நிவாரணம் கிடையாதுனு தமிழக அரசு வெளிப்படையா, தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருக்கணும், விவசாயிகளை ஏமாத்துற மாதிரி, குழப்பமான அறிவிப்பை வெளியிட்டிருக்கக் கூடாது’’ எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு தனது அறிவிப்பை திரும்ப பெற்று, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். தங்களை தமிழக அரசு கைவிடாது என நம்புகிறார்கள். ஒருவேளை கடும் நிதி நெருக்கடியில் இருந்தால், மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்று, இங்கு பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.