சந்தானம் படம் என்றாலே அவர் யாரோ ஒருவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருப்பார். தொடர்ந்து காமெடி கவுண்டர்கள் கொடுத்துக் கொண்டிருப்பார். ஆனால், இந்த ‘சபாபதி’ முற்றிலும் புதிய சந்தானமாக நமக்கு அறிமுகமாகிறார். இயக்குநர் சொன்னதை கேட்டு அப்படியே சமத்து பிள்ளையாக இத்திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார்.

சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ப்ரீத்தி வர்மா, புகழ், சாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணா, ஸ்வாமி நாதன் என பலரும் நடித்திருக்கும் ‘சபாபதி’ தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. திக்கு வாய் பிரச்னை கொண்ட நாயகன் சந்தானம் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையினால் முடங்கிப் போகிறார். கல்லூரி முடித்து வேலை தேடும் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. சபாபதியின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். ஒரு கண்டிப்பான ஆசிரியரான அவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்தும் சந்தானத்தின் எதிர்காலம் குறித்தும் கவலைப்படுகிறார். இந்தச் சூழல்களுக்கு இடையே சந்தானத்தின் வாழ்க்கையை விதி எப்படி மாற்றியது முடிவு எப்படி அமைந்தது என்பதுதான் கலகலப்பாக்க முயற்சிக்கும் திரைக்கதை.

image

பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய ஆர்.ஸ்ரீனிவாச ராவ் ‘சபாபதி’யை இயக்கி இருக்கிறார். இதனை ‘நகைச்சுவை சினிமா’ என்று சொல்ல முடியாது; நல்ல ஃபீல் குட் சினிமாவாக கொண்டுவர இயக்குநர் முயற்சித்திருக்கிறார். அது ஓரளவே சாத்தியமாகியிருக்கிறது.
அப்பாவி நாயகனை துரத்தும் வில்லன் கதாபாத்திரத்தில் சாயாஜி ஷிண்டே வழக்கம்போல நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி ப்ரீத்தி வர்மாவுக்கு கதையில் இன்னுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

சந்தானம் கவுண்டர் கொடுக்கும் இடத்தில் இருந்து நல்ல நடிகராக முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுகள். படத்தின் கதை திரைக்கதையில் புதுமை எனக் கூற எதுவுமில்லை வழக்கமான தமிழ் டிராமாதான். ஆனால், ஆறுதலாக படம் எங்குமே அதிகம் சோர்வைத் தரவில்லை. அதற்கு ரூபனின் படத்தொகுப்பு முக்கிய காரணமாக அமைகிறது. ஆவரேஜான பொழுதுபோக்கு சினிமாவாக நல்ல வீக் எண்ட் குடும்ப சினிமாவாக இது வந்திருக்கிறது. சாமின் இசை ரசிக்க வைக்கிறது.

image

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் ஸ்ரீரங்கத்து வீதிகளையும் கும்பகோணம் வீதிகளையும் கலை நேர்த்தியுடன் பதிவு செய்திருக்கிறார். சில ஃப்ரேம்கள் கண்களில் ஒத்திக் கொள்ளும்படி வந்திருக்கிறது. இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் ஒரு விளம்பரப் பட இயக்குநர் என்பதால் ஒளிப்பதிவாளருடனான இவரது காமினேஷன் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தானம் பிறர் மனதை காயப்படுத்தும் நகைச்சுவைகளையும், சுமாரான கவுண்டர்களையும் தவிர்த்து செட்டில்டாக இயக்குநரின் நடிரகாக மாறி நடித்திருக்கிறார். அந்த வகையில் ‘சபாபதி’ சபாஷ்பதி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.