பா.ம.க கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று (20.11.2021) திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், “செஞ்சி நம் கோட்டை. ஆனாலும் கோட்டையை கோட்டை விட்டுவிட்டு நாம் கட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். கட்சி தொடங்கி 32 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஆட்சி செய்யவில்லை என்றால்… அதற்கான கோளாறு மக்களிடமா? பொறுப்பாளர்களிடமா? அல்லது கட்சியை ஆரம்பித்த என்னிடமா? எங்கோ கோளாறு இருக்க வேண்டும். நம்முடைய பேராசிரியர் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு, `நாம் தனித்து போட்டியிட வேண்டாம். நம்மிடம் பலம் இல்லை, பலமிழந்து கிடக்கிறோம், நம்மிடம் சக்தி இல்லை, சக்தி இழந்து கிடக்கிறோம். ஆகவே கூட்டு சேருவோம்’ என்று நீங்கள் எல்லாம் வற்புறுத்தி சொன்னதின் பேரில் நானும் உங்களுடன் சேர்ந்து தவறான முடிவை எடுத்து, மாறிமாறி கூட்டணி வைத்தேன். ’20 சட்டமன்ற உறுப்பினர்கள், பின்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள், 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய ஆட்சியிலே பங்கு, அமைச்சர்கள் பெற்றிருக்கிறோம். பார்த்தீர்களா… ஐயா! இதனால்தான் தனியாக நிற்க வேண்டாம் என்று சொன்னோம்’ என்கிறீர்கள். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை போராடிப்பெற்று போட்டியிட்டதில், 5 தொகுதிகளில் தான் வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். இன்னும் 2 தொகுதியில் கூடுதலாக வென்றிருந்தால் கூட மாம்பழ சின்னத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

ராமதாஸ்

ஒரு தொகுதியில் மாவட்ட செயலாளர் தி.மு.க-வுக்கு வேலை செய்து தி.மு.க-வை வெற்றிபெற வைக்கிறார். இன்னொரு தொகுதியில் பெரிய தலைவர்கள் எல்லாம் காங்கிரஸுக்கு வேலை செய்து அங்கே மாவட்டச் செயலாளரை தோற்கடிக்கிறார்கள். நான் சொல்வது கடலூரில் தான். இவை கட்டுக்கதை அல்ல, நடந்தவை. அங்கே முறையாக வேலை செய்திருந்தால் நம்மிடம் இன்று கூடுதலாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள். அப்போதெல்லாம் நாம் கிண்டல் செய்வோம்… இவர்கள் அந்த கட்சிக்கு சோரம் போனார்கள். அந்த கட்சிக்கு இவர்கள் சோரம் போனார்கள் என்று. இன்று அந்த வியாதி நம்மை பிடித்து பீடித்துக்கொண்டது.

’42 ஆண்டு கால உழைப்பு. 1989-ல் கட்சியை தொடங்கி இத்தனை ஆண்டுகளாக பயணித்து 5000 கவுன்சிலர்களில் வெறும் 10 தானா உங்களின் வளர்ச்சி’ என்று மற்றவர்கள் நம்மை தூற்றுகிறார்கள். ஆம், அடுத்த தேர்தல் வந்தால் இது 5 ஆகும், இன்னும் நிறைய சோரம் போகும், கட்சிக்காரனின் காலை வாரிவிடுவோம், வேட்புமனு தாக்கல் செய்யக்கூட ஆள் இல்லாமல் போவார்கள், எங்கள் பலம் அசைக்க முடியாதபடி கூடிக்கொண்டே வருகிறது என்று பொறுப்பாளர்கள் சொல்ல, குறிப்பாக ஒன்றிய செயலாளர்கள் சொல்ல… கட்சி, ‘நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக’ வளர்ந்து வரும் நிலையிலே இந்த காட்சியை பார்க்கும்போது, அதனைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.

Also Read: தனித்துப் போட்டி: கட்சி தாவும் பாமக நிர்வாகிகள்! – ஆட்டம் காண்கிறதா ராமதாஸ் கோட்டை?

கவுன்சிலருக்கு வேட்பாளர் நிறுத்தவே ஆளில்லை… இது வெட்கக்கேடு, வேதனை இது யார் பொறுப்பு? சொல்லுங்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி இருக்குமா என்றார்கள். பொதுக்குழுவை கூட்டி, ‘இல்லை’ என்று சொன்னோம். இவர்கள் நம்பவில்லை. லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும் என்று சொல்லி பல இடங்களில் காசு வாங்கிக்கொண்டு போட்டார்கள். அப்போதும் நான் ட்விட்டரில் பதிவு போட்டேன். ‘லோக்கல்… அண்டர்… ஸ்டாண்டிங்… இல்ல நோ அண்டர்ஸ்டாண்டிங் புரியுதா.’ என்றெல்லாம் பதிவு போட்டு இவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

ராமதாஸ் – அன்புமணி

சாதாரண பஞ்சாயத்து பிரசிடெண்ட் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட உங்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. இதற்கு பல கண்டிக்கத்தக்க, அருவருப்பான காரணங்கள் இருந்தாலும் நீங்க எல்லோரும் பொறுப்பேற்கத்தானே வேண்டும். ‘வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆள் இல்லை, நாங்கள் மனு போடவில்லை…’ ஏனெனில், அண்டர் ஸ்டாண்டிங்… லோக்கல் அண்டர் ஸ்டாண்டிங்..! அவ்வளவு பலவீனமான கட்சியாகவா மாறிவிட்டது” என்றார் ஆதங்கமாக.

Also Read: பாமக-வின் அரசியல் வியூகம்: ஆட்டம் காண்கிறதா ராமதாஸ் கோட்டை? | The Imperfect Show

தொடர்ந்து பேசியவர், “நகர மன்றம், பேரூராட்சி தேர்தல் வரப்போகுது. நீங்க என்ன பண்ண போறீங்க என்று தெரியல. என்ன சொல்லுவீங்க… ஆளே கிடைக்கலிங்க. நாங்க ஒரு மாதிரி அண்டர் ஸ்டாண்டிங் பண்ணிட்டோம். நான் அவன்கிட்ட வாங்கிட்டேன், அவன் எனக்கு கொடுத்துட்டான். ஆள் கிடைக்கலனு சொல்லப்போறீங்களா?.

நம்ம கட்சியிலிருந்து ஒருத்தர் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த ஒரு ஓட்டு தான் தி.மு.க மாவட்ட சேர்மனா… அ.தி.மு.க மாவட்ட சேர்மனா… என்று தீர்மானிக்கணும். ஆனா, இவர் இரண்டு பக்கமும் காசு வாங்கிட்டார். அதிகமில்லை, ஒரு 75 லட்சம் ரூபாய்க்கு சோரம் போய்விட்டார். இப்போ அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். நாம் நாளுக்கு நாள் பலம் பெறுகிறோமா… பலவீனம் அடைகிறோமா.. என்பது தான் முக்கியம். பலவீனம் அடைகிறோம் என்றால் நாம் இந்த கட்சியை தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை.

‘என் உயிரே போனாலும், கொள்கை பிடிப்போடு இருப்பேன். அடுத்தவன் காசுக்கு சோரம் போகமாட்டேன்’ என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும். அப்படித்தானே உங்களை பழகி, வளர்த்து, பயிற்சி கொடுத்திருக்கிறேன். எல்லாம் பழங்கதை ஆகி விட்டதே..!

பழைய சோறு கூட சாப்பிட இன்பமாக இருக்கும். ஆனா இந்த கதை பலவீனமான கதை. இந்த நிலையோடு நாம் கட்சி நடத்த வேண்டுமா..?

ராமதாஸ், அன்புமணி

தமிழகத்தில் 36 – 40 கட்சிகள் இருக்கிறது. அதில் நாம் ஒரு கட்சியா? பெருமையாக சில சமயம் சொல்லிக்கொள்கிறோம், மூன்றாவது பெரிய கட்சி என்று. ஆனால், ‘ஊராட்சி மன்ற தேர்தலில் நிற்க வைக்ககூட ஆள் இல்லை ஐயா!’ என்கிறோம். இது தமிழகம் முழுவதும் பா.ம.க-வில் நடந்ததுதான். இந்த தமிழக மக்களுக்காக நாம் போராடாடது ஏதேனும் உண்டா! நம் கட்சியில் உள்ளது போல அன்புமணியின் இளைய தம்பி, தங்கைகள் வேறு ஏதேனும் கட்சியில் உள்ளனரா?, பின் ஏன் நாம் வளரவில்லை?இதை நாம் எப்போது சரி செய்யப்போகிறோம். இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களிடமிருந்து பதிலை பெற நினைக்கிறேன். வீடுவீடாகச் சென்று நீங்கள் திண்ணைப் பிரசாரம் செய்யவில்லை என்றால்… சமூக ஊடகங்கள் வாயிலாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லை என்றால்… இந்த கட்சியை நடத்தி பயனில்லை. ஏனெனில், காசுக்கு சோரம் போனவர்கள் எந்த காலத்திலும் காட்டிக் கொடுப்பார்கள். கொள்கை பிடிப்பு என்பது அவன் வாயளவில் மட்டுமே தான் இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் செஞ்சியில் ராஜேந்திரனை வேட்பாளராக நிறுத்தினோம். அந்த தொகுதியில் நாம் இருமுறை வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், அவர் அங்கு தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இனிமேல் அந்த தவறுகள் நடக்க கூடாது.

சங்ககாலத்தில் இருந்த உணர்வு இப்போது எங்கே போனது? முன்னோர்களின் உடலிலிருந்து வந்த வீரத்தை விற்றுவிட்டீர்களா? நம்முடைய மானம் எங்கே? வீரம் எங்கே? ரோசம் எங்கே? சொல்லுங்கள். சோரம் போகிறவர்கள் இனி இந்த கட்சியில் தேவையில்லை. சோரம் போகாதவன், வெட்கம், ரோஷம், வீரம் மிகுந்தவன் தான் இந்த கட்சிக்கு வேண்டும். சங்ககாலத்தில் இருந்த நம் தொண்டர்களின் காலம் மீண்டும் வரவேண்டும். மாற்றத்தை நாம் தமிழக மக்களுக்கு தரவேண்டும். 234 தொகுதிகளில் 60 இடங்களை நாம் சுலபமாக வெற்றி பெறலாம். சமூக வலைதளம், திண்ணை பிரசாரம் செய்தால் மட்டுமே போதும். மற்ற கட்சியினர் சொந்தம், பந்தம் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் எங்களுக்கு பாட்டாளிகள் என்ற சொந்தம், பந்தம் உள்ளது. மாமேதை உலகப் பேரறிஞர் அம்பேத்கர் சொன்ன ஒன்றுதான். கற்பி, ஒன்றுசேர், போராடு. அவருடைய கொள்கையை தான் நாம் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். கூடவே மார்க்ஸ், பெரியார் கொள்கைகளையும் தான்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

கடந்த டிசம்பர், ஜனவரியில் மனு கொடுக்கும் போராட்டத்தை நாம் நடத்தினோம். நான் அதற்காக அசிங்கப்பட்டேன், வேதனைப்பட்டேன். ‘மனு வாங்குகின்ற இடத்துல நாம் இருக்கணும்!’ என்று சொல்லி 42 ஆண்டுகளாக நம் பேராசிரியர் தீரன் முழங்கினார். நானும் முழங்குவேன், மனு வாங்கும் இடத்துக்கு நாம் போக வேண்டும் என்று. ஆனால் இன்று கவுன்சிலர் பதவிக்கு மனு போடகூட ஆளில்லை. இனிவரும் காலம் நம் காலமாக இருக்க வேண்டும். அது தமிழக மக்களின் விடியும் காலமாக இருக்க வேண்டும். அந்த விடியலை, பா.ம.க தமிழக மக்களுக்கு கொடுக்கும் நாளாக வேண்டும். அன்புமணி முதலமைச்சர் என்று சொல்லி விட்டால் போதாது. அதற்கான திட்டம் என்ன நம்மிடம் உள்ளது. இரண்டே இரண்டு திட்டம் தான், அது திண்ணைப் பிரசாரமும், சமூக வலைதளமும் தான்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.