சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ளக் கடிதத்தில்,

 ”மதிப்பிற்குரிய திரைக்கலைஞர் சூர்யாவுக்கு வணக்கம்.

அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தங்களின் நடிப்பும், இதர கலைஞர்களின் நடிப்பும் மிகச்சிறப்பான முறையிலும் மக்களை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. மேலும் ஒரு உண்மைக் கதையை மிகவும் உயிர்ப்போடும், நிகழ்வுகளை நீர்த்துப்போகாமல் முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும் இயக்கிய அதன் இயக்குநர் திரு த.ச.ஞானவேல் அவர்களின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்த தங்கள் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்  திரைக்கலைஞரான தாங்கள் முக்கியமான பிரச்சனைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருவதற்கு பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

image

 தமிழகமெங்கும் மனித உரிமைகள் மீறப்படும் போது அத்தகைய வன்கொடுமைகளில் தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கிறது. அதன் ஒருபகுதியாகத்ததான கம்மாபுரம் சம்பவத்திலும் கட்சியின் தலையீடு அமைந்தது.

 இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட  குறவர் சமூகத்தை சார்ந்த ராஜாக்கண்ணு மற்றும் அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டங்களையும், சட்ட போராட்டத்தையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக நடத்தியது. கட்சியின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் சட்டப் போராட்டங்களின்  விளைவாக கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. ராஜாக்கண்ணுவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால்  பெற்று தரவும் முடிந்தது. இதனைக் கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதி பெருமையடைகிறோம்.

பொதுவாக ஒரு உண்மைச்சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே. ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

 இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜாகண்ணுவின் மனைவி திருமதி பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஒரு ஏழைத் தொழிலாளியாகவே இன்றும் சென்னையில்  வாழ்ந்து வருகிறார்கள். சிறப்பானதொரு திரையாக்கத்தின் மூலம் திருமதி பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி  சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள திருமதி பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

 தங்களின் இத்தகைய சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிகள் தொடர்ந்திட மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பாராட்டுகளோடு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.