விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த கனமழையில் மயிலம் முருகன் கோயிலுக்குப் பின்புறம் சுமார் 22 பழங்குடி இருளர் பழங்குடி குடும்பங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இன்னல் பட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்றோம். முருகன் கோயிலுக்குப் பின்புறமிருந்த மலை பாறைகளுக்கு அருகில் தரைக்கு ஒட்டிக்கிடந்தன அந்த கடைநிலை மக்களின் குடிசைகள்.

பழங்குடி மக்கள் குடிசைகள் – மயிலம்

Also Read: “தாத்தா, அப்பா பட்ட கஷ்டத்தையே எங்க புள்ளைங்களும் படணுமா?” – நயம்பாடி இருளர் மக்களின் கதை!

கனமழையால் இருப்பிடங்களுக்குள் புகுந்த வெள்ள நீரை வாளிகளில் வாரியிறைத்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக்குக் கொடுத்தோம். “இது தான் எங்க குடிசைங்க. எங்களுக்கு எந்த வசதியும் கிடையாதுங்க. நிரந்தரமான வீட்டுமனையோ, சாலையோ, கரண்டோ எதுவும் இல்லைங்க. குடிக்க தண்ணி எடுக்குறதுக்கு கூட ஒன்றரை கிலோமீட்டர் வரை போயிட்டு வரணும். தினமும் இருட்டுலதான் எங்க வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்குறோம். பாம்பு, தேள்னு விஷ ஜந்துகளுக்கு மத்தியில குழந்தை குட்டிகளை வெச்சுக்குட்டு அல்லாடிட்டு இருக்குறோம். மழை பெய்யுற சமயத்துல தான் எங்களை கழனிக்காட்டு வேலைக்கு கூப்பிடுவாங்க. மத்த நேரத்துல வேலை எதுவும் அவ்வளவாக கிடைக்காதுங்க.

இந்த ஊர்ல தான் 30 வருஷத்துக்கு மேல இருக்குறோம். இப்பதான் ஒரே இடத்தில் இருக்கிறோம். இதுக்கு முன்னாடி, இதே ஊர்ல இருக்கிற சிலரோட நிலத்தில கூலி வேலை செஞ்சுகிட்டு, அவங்களுடைய நிலத்துலையே குடிசை போட்டுக்கிட்டு, தனித்தனியா இருந்தோம். ஒரு கட்டத்துல கழனிகாரங்க காலி பண்ண சொல்லிட்டாங்க. இடமில்லாம அலஞ்சி திரிஞ்சி இந்த இடத்தில குடிசை போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கோம். இந்த இடம் கூட சென்னையை சேர்ந்த புண்ணியவான் ஒருத்தருது. இந்த இடத்துக்கு பக்கத்திலயே முறைகேடாக பட்டா மாற்றப்பட்ட அரசாங்கத்துக்கு சொந்தமான இடம் இருக்கு. அந்த இடத்தை அரசு அதிகாரிகள் மீட்டு எங்களுக்கு வீட்டுமனையா கொடுக்கணும்னு ரொம்ப நாளா கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். நாங்க மொத்தம் 22 குடும்பங்கள் இங்க இருக்குறோம். அதுல, 15 குடும்பத்து காரங்களுக்கு தான் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை எல்லாமே இருக்கு. 7 குடும்பங்களுக்கு இன்னும் எதுவுமே கிடைக்கல. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஆதார் கார்டு கொடுத்தாங்க.

Also Read: விழுப்புரம்: `எங்க வீடும் வாழ்வும் இப்படித்தான்’ – பரிதவிக்கும் இருளர் சமூக மக்கள்; ஆட்சியரின் பதில்

பழங்குடி மக்கள்

நாங்க மயிலத்தில தான் ஓட்டு போடுறோம். அரிசி, சர்க்கரை எல்லாம் வாங்குறோம். ஆனா எங்க நிலைமை இன்னும் இப்படியே தான் இருக்கு. எந்த மாற்றமும் இல்லைங்க. எங்க அப்பா, அம்மா எல்லாம் எங்களை படிக்க வச்சிருந்தா. பதவியில இருக்குறவங்க எங்களையும் மதிச்சு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருப்பாங்களோ என்னவோ தெரியல. எங்களைப் போலவே பக்கத்துல 45 இருளர், குறவர் குடும்பங்கள் இருக்காங்க. அவங்களுக்கும் இதே நிலைமைதான். காட்டிலும், மேட்டிலும் கடந்தபடியே எங்கு வாழ்க்கைபோயிட்டு இருக்கு. எங்க பசங்க, பேரப்பிள்ளைங்க எல்லாம் நல்லா படிக்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கு. ‘ஜெய்பீம்’ படத்துல கூட நாங்க ஒரு 6 பேர் நடிச்சிருந்தோம். அந்த படத்துல வர காட்சிகளை போலத்தான் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாம எங்க வாழ்க்கையும் கிடக்கு. நாங்க, இருட்டுல பாம்பு, பூச்சி கிட்ட எல்லாம் அல்லல்பட்டுட்டு கிடக்குறத பார்த்துட்டு, ஒருத்தர் எங்களுக்கு சூரிய வெளிச்சத்துல எரியிற ‘லைட்’ போட்டு கொடுத்தாரு.

நேத்து காலையில கலெக்டர் வந்து எங்களை பார்த்து பேசினாரு . எங்க குறையெல்லாம் கேட்டுட்டு, இன்னும் மூணு நாளுக்குள்ள, எங்கள மாதிரி இங்க கஷ்டப்படுற 67 குடும்பங்களுக்கும் (இருளர், குறவர்) வீட்டுமனை பட்டா குடுக்குறதுக்கு ஏற்பாடு செய்றேன்னு சொல்லிருக்காரு. அதேமாதிரி, இந்த மழை நேரத்துல இவங்க எல்லாருக்கும் நல்ல சாப்பாடு கொடுக்கணும். பள்ளிக்கூடத்தில் தங்க வெச்சு பாத்துக்கோங்கன்னு அதிகாரிங்க கிட்ட சொல்லிட்டு போயிருக்காரு. அதுக்கு அப்புறமா ஊராட்சித் தலைவர், கவுன்சிலர் எல்லாம் எங்களுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப தான் எங்க வாழ்க்கை நிலையும் மேம்படும்’னு நம்பிக்கை வந்திருக்கு” என்றார்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

பழங்குடி மக்கள் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, அப்பகுதியில் கழிவு நீரை கொட்டுவதற்காக கழிவுநீர் ஊர்தி ஒன்று வந்தது. உடனே அவர்கள், அந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் கழிவுநீரை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு நிலவுவதாக நம்மிடம் வேதனையுடன் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, உரிய புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு சென்றோம். அவர், “பழங்குடிகளின் வசிப்பிடங்களுக்கு அருகில் கழிவுநீரை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணித்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரிடம் கூறுகிறேன்” என்றார்.

Also Read: வீட்டுமனைப் பட்டாவுக்காக 20 வருடங்களாகப் போராடும் இருளர் இன மக்கள்-அலட்சியம்காட்டும் அரசு அதிகாரிகள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.