கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, தோவாளை பகுதியை சேர்ந்த சொர்ணப்பன் என்பவரின் மகன் சுரேஷ் குமார்(27). பி.காம் பட்டதாரியான சுரேஷ்குமார், பெயின்டிங் கான்ட்ராக்ட் பணி செய்துவந்தார். அவர் காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் அந்த இளம் பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் காட்டுப்புதூர் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த சிலர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் மரணம் அடைந்தார்.

உறவினர்கள் போராட்டம்

பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை சுமார் எட்டு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், ஜாதியை காரணம் காட்டி அவர்களை பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது வீட்டில் வந்து பேசும்படி அந்த இளம்பெண் கூறியதால் அங்கு சென்ற சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இளம் பெண்ணை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், இது ஆணவக் கொலை எனவும் சுரேஷ்குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், சுரேஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று போராட்டம் நடத்தினார். போலீஸார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சுரேஷ்குமாரின் மரணம் குறித்து அவரின் சகோதரர் சுமன், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரின் மரணம் சந்தேக மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சுரேஷ்குமார் காதலித்தப் பெண் 2019-ம் ஆண்டே அவரை விட்டு பிரிந்துவிட்டார். ஆனாலும் அந்த பெண்ணை விடமனம் இல்லாமல் இருந்துள்ளார் சுரேஷ்குமார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் திருமணம் செய்ய உள்ள பையனை கண்டுபிடித்து, அவரிடம் தனது காதல் பற்றி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண் வீட்டு தரப்பில் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Also Read: 100 லாக்அப் மரணம்; பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் வழக்குகள்! -அதிர்ச்சி கொடுத்த குற்ற ஆவணக் காப்பகம்

அந்த புகாரின் பேரில் விசாரணைக்காக சுரேஷ்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தோம். ஆனால் அவர் காவல் நிலையத்துக்கு வராமல் பெண்ணின் ஊருக்குச் சென்று விஷம் குடித்து மயங்கியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர் விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.