பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியினரின் மறியல் போராட்டத்தால் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டத்தை அடுத்து, மலையாள ஜோஜு ஜார்ஜ் ஆவேசமாக செயல்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உறுதுணை நடிகராக வலம் வந்து சில வருடங்கள் முன் வெளிவந்த ‘ஜோசப்’ படம் மூலமாக மலையாளத்தின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜோஜு ஜார்ஜ். சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளிவந்த ‘ஜெகமே தந்திரம்’ மூலமாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வரும் ஜோஜு நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக `ஸ்டார்’ என்கிற படம் ரிலீஸாகியுள்ளது. இதன் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், இன்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையாக நடுரோட்டில் சண்டையிட்டார். இந்தக் காட்சிகள் ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வைரலாகின.

நடுரோட்டில் என்ன நடந்தது?! – பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எர்ணாகுளம் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கொச்சி – எர்ணாகுளம் சாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நின்ன்றுள்ளன.

image

பல மணி நேரம் நீடித்த இந்தப் போக்குவரத்து தடையில் நடிகர் ஜோஜு ஜார்ஜும் சிக்கியிருந்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சென்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் இருப்பதாக வாதிட்டுள்ளார். பதிலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோஜூவின் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கே நின்று ஜோஜு சத்தம் போட ஆரம்பித்தார்.

“இவ்வளவு பேர் மணிக்கணக்கில் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நின்றன. சாதாரண மனிதர்களை தொந்தரவு செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம். கொரோனா காலத்தில் எரிபொருள் அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களைதான் இவர்கள் மீண்டும் காயப்படுத்துகிறார்கள். இந்தப் போராட்டம் மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்காக தங்கள் இடங்களுக்கு செல்லும் மக்களைதான் வெகுவாக பாதிக்கிறது. அதுபோன்றவர்களால் இங்கே இறந்தால் என்ன நடக்கும். நான் காங்கிரஸ் கட்சியையும் அதன் காரணத்தையும் மதிக்கிறேன். எரிபொருள் விலை உயர்வு ஓர் உண்மையான பிரச்னை. ஆனால் இந்த பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேறு வழிகள் உள்ளன” என்று காட்டமாக பேசினார் ஜோஜு ஜார்ஜ்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கேரள போலீஸார் போக்குவரத்தை சீர் செய்ததுடன், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் நடிகர் ஜோஜு ஜார்ஜ் குடிபோதையில் கட்சியின் பெண் உறுப்பினர்களிடம் சண்டையிட்டு, வேண்டுமென்றே போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, நடிகர் ஜோஜு ஜார்ஜை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். இன்று காலை நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.