புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் என்ற மூன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 19-ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அத்துமீறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகினை இடித்திருக்கின்றனர். அப்போது படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில், நீண்ட நேரமாகக் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த சுகந்தன் மற்றும் சேவியர் என்ற 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீட்டு கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு 20-ம் தேதி நெடுந்தீவு அருகே ராஜ்கிரணின் உடலைச் சடலமாக மீட்டனர்.

இறந்த ராஜ்கிரண், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

இலங்கை கடற்படையினரின் இத்தகைய தாக்குதல், அத்துமீறலைக் கண்டித்தும், இறந்த மீனவரின் உடல் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாகக் கடலோர மாவட்டங்களிலும் போராட்டங்கள் நீடித்தது. இந்த நிலையில்தான் இறந்த மீனவரின் உடல் அக்.23-ம் தேதி கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ராஜ்கிரணின் உடலைக் கண்ட குடும்பத்தினர், உறவினர்கள், சக மீனவர்கள் கதறி அழுது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதோடு, தமிழக அரசு அறிவித்த ரூ.10லட்சம் நிவாரணத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து ஆறுதல் கூறினர்.

இறந்து போன ராஜ்கிரண் உடலோடு சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மீனவர்களும் அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், சுகந்தன், சேவியர் ஆகியோர் அனுப்பப்படவில்லை. இந்த மீனவர்கள் சர்வதேச எல்லைத் தாண்டி நாட்டுக்குள் புகுந்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்து இரண்டு மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருப்பதாகவும், நவம்பர் 1-ம் கொழும்பில் உள்ள முகாமில் தங்க வைக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இரண்டு மீனவர்களையும் உடனே மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு இங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Also Read: 8 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதம் – இலங்கை நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி!

இதுபற்றி பேசிய திருமுருகன் காந்தி, “மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறக்கவில்லை. அவரது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருக்கிறது. முகம் சிதைக்கப்பட்டிருக்கிறது.இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். மற்ற இரண்டு மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்துத் தெரியவில்லை.தமிழகம் கொண்டுவரப்படும் மீனவரின் உடலை இங்கு வைத்து பிணக்கூறு ஆய்வு செய்து, ஒரு கொலை வழக்கை இலங்கை அரசாங்கத்தின் மீது பதிவு செய்யும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அப்படிச் செய்யாமல், இலங்கை அரசு சொன்ன தகவலையும், இலங்கை கொடுத்த பிணக்கூறு ஆய்வையும் வைத்துக் கொண்டு கடந்த கால ஆட்சியைப் போன்றே அவசர, அவசரமாக எடுத்துச் சென்று புதைத்திருக்கின்றனர். இதுபோன்ற படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்றால், இலங்கை அரசுமீது கொலை வழக்கு பதிவு செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட வேண்டும். ராஜ்கிரணின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். மற்ற இரண்டு மீனவர்களையும் உடனே மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.