நடுத்தரக் குடும்பம் எங்களுடையது. நகரம் ஒன்றில் வசிக்கிறோம். கணவர் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்க்கிறார். நான் வீட்டுக்கே அருகே ஒரு லேபில், ரிசப்ஷனிஸ்ட்டாக வேலைபார்க்கிறேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் பத்தாம் வகுப்பும், இளையவள் எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் வகுப்பிற்காக மகன், மகள் இருவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன் மொபைல் வாங்கிக் கொடுத்தோம். நான், கணவர் இருவருமே பணிக்குச் செல்வதால், வகுப்பு, ட்யூஷன் முடிந்த பின்னரும் இருவருமே மொபைலிலேயே மூழ்கியிருப்பதை விடுமுறை நாள்களில்தான் கவனித்தோம். பையன் இன்ஸ்டாகிராமில் அக்கவுன்ட் ஓபன் செய்தது, மகள் யூடியூபில் சினிமா வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தது என ஒரு கட்டத்தில் எதுவுமே எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போனது. மேலும், இருவருமே வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் இயலாமல் போனது.

Smartphone (Representational Image)

Also Read: சமூக வலைதளத்தில் ஹீரோ, வீட்டில் ஆணாதிக்கவாதி; கணவரின் இரட்டை வேடம்; களைவது எப்படி?! #PennDiary 34

இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன் யதார்த்தமாக நான் என் மகனின் மொபைலை எடுத்துப் பார்த்தபோது, அதன் சேர்ச் ஹிஸ்டரியில் கிஸ், கேர்ள்ஸ் என அதிர்ச்சியான வார்த்தைகளைப் பார்த்ததால், அவன் இதுவரை பார்த்திருந்த வீடியோ ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்தேன். பதறிப் போனேன். அவன் வயதுக்கு மீறிய விஷயங்களையெல்லாம் அவன் பார்த்து வந்திருந்ததை அறிந்தபோது, எனக்குக் கோபம் தலைக்கேறியது. அவனிடமே நேரடியாகச் சென்று, அது பற்றி விசாரித்தேன். `இல்ல ஃப்ரெண்ட்தான் லிங்க் அனுப்பினான்…’ என்றான். மிகக் கடுமையாகக் கண்டித்தேன்.

என் கணவரிடம் இது பற்றிச் சொன்னபோது, அவர் அவனை நேரடியாகக் கண்டிக்க மறுத்தார். `எனக்குத் தெரியாத மாதிரியே பார்த்துக்கோ. அப்பாவுக்கும் தெரிஞ்சிடுச்சுனு அவனுக்குத் தெரிஞ்சா, அப்புறம் பயம் முழுசா விட்டுப் போயிடும். `இன்னொரு தடவை இப்படி பண்ணினா, அப்பாகிட்ட சொல்லிடுவேன்’னு சொல்லி வை. நீ ஓவரா டென்ஷனும் ஆகாத. பசங்க இந்த வயசுல இப்படித்தான் இருப்பாங்க…’ என்றார்.

(Representational Image)

Also Read: கூலிப்படையில் சேர்ந்துவிட்ட கணவர், கைக்குழந்தையுடன் நான்; என் வாழ்க்கை இனி? #PennDiary – 35

ஆனால், என்னால் இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே முடியவில்லை. முளையிலேயே கிள்ளாவிட்டால் இவன் இதற்கு அடிக்‌ஷன் ஆகிவிடுவானோ, படிப்பில் கவனம் இழப்பானோ, அவன் எதிர்காலமே பாழாகிவிடுமோ என்றெல்லாம் என் தாய் மனசு தவித்ததால், அவனை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவனுக்குக் கவுன்சலிங் கொடுத்த டாக்டர் என்னிடம், “எல்லாம் ஹார்மோன் விளையாட்டு, வயசுக் கோளாறு. ஆனாலும், போகப் போக சரியாகிடும்னு விட முடியாது. இந்த மாதிரி பதின் பருவ பசங்களை கவனிக்காம, கண்டிக்காம விடுறதுதான் சில நேரங்கள்ல குற்றச் செயல்கள்ல கொண்டு போய் விட்டுடும். அதிலும் இப்போ நெட்ல கொட்டிக் கிடக்குற ஆபாச கன்டன்ட்கள் பல வீடுகள்லயும் இப்படித்தான் குழந்தைகளை பலியாக்கிட்டு இருக்கு. ஸ்கிரீன் டைம் லிமிட் பண்றது, மொபைலுக்கு நோ பாஸ்வேர்டுனு சொல்றது, பசங்களை வகுப்பு, படிக்கிற நேரம் போக மீதமிருக்கிற நேரத்துல ஸ்போர்ட்ஸ் போன்ற ஏதாச்சும் ஒரு ஆக்டிவிட்டியில ஈடுபடுத்துறதுனு மாற்று முயற்சிகளை செய்யுங்க” என்று எனக்கும் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினார்.

இப்போது என் மகன் ஒழுங்காக இருக்கிறான். `நான் இனிமே அந்த மாதிரி தப்பு பண்ணமாட்டேன்மா’ என்று உறுதியும் கொடுக்கிறான். இந்த வருடம் அவன் பத்தாம் வகுப்புப் தேர்வெழுத இருப்பதால், அவனுக்கு இது குறித்த குற்றஉணர்வை, பதற்றத்தை கொடுக்காமல் நிம்மதியான மனநிலையில் படிக்க வைக்க வேண்டும் என்பதால், நான் அதைப் பற்றி அவனிடம் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. இயல்பாகவே இருக்கிறேன்.

Woman (Representational Image)

Also Read: சொத்து ஆசை, சித்தப்பாவுக்கு திருமணம் செய்து வைக்காத அப்பா; பாவத்தில் எனக்கும் பங்குண்டா?! – 37

என்றாலும், வயது வந்த பிள்ளையை கைக்குள்ளேயே வைத்து வளர்க்க முடியாதல்லவா? நாளையே பள்ளி தொடங்கினால், அந்த நட்பு வட்டம் மீண்டும் அவனை இதுபோன்ற வீடியோக்களுக்கு இழுத்தால் என்ன செய்வது? உண்மையிலேயே நான் முளையிலேயே கிள்ளிவிட்டேனா, அல்லது அந்தப் பழக்கம் எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு மீண்டும் வளரலாமா? பாலியல் கல்வி கொடுப்பது இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு என்று படித்திருப்பதால், பத்தாம் வகுப்புத் தேர்வு முடித்த பின்னர் அவனுக்கு அந்த விழிப்புணர்வு கொடுப்பதற்கான வழிகளையும் மனநல மருத்துவரிடம் கேட்டிருக்கிறேன்.

என் மகனை நிரந்தரமாகப் பாதை திருப்ப என்ன செய்ய வேண்டும் நான்?!

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!

தோழிகளே… இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.