சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வங்கி அதிகாரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த தன் மனைவியைப் பாம்பைவிட்டுக் கடிக்கச் செய்து கொலை செய்திருக்கிறார். அதிலும் முதன்முறை பாம்பைக் கடிக்கவிட்டு அதில் அவர் தப்பிவிட, இரண்டாவது முறை தூக்க மாத்திரை கொடுத்து பாம்பை ஏவி கடிக்கவிட்டு கொலை செய்திருக்கிறார். நினைத்துப் பாக்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. திரைப்படக் காட்சியை மிஞ்சும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டன.

பாம்பு கடித்து மனைவி இறந்துவிட்டால், தன்மீது சந்தேகம் வராது என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்! போலீஸ் விசாரணையில் எப்படியோ மாட்டிக்கொண்ட அந்த வங்கி அதிகாரி இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அண்மைக்காலமாக கணவன் மனைவியைக் கொல்வதும், மனைவி கணவனைக் கொல்வதும் அதிகரித்துவிட்டன.

கொலை – க்ரைம் டேப்ஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது நான் செய்தியாளனாக இருந்தேன். வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன்.

அவர் ஐடி துறையில் பணியாற்றுபவர். அவர் அலுவலகம் சென்றிருந்த நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கொலை நடந்த இடத்தில் தடயங்கள் எதுவும் கிடைக்காமல், யார் கொலை செய்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடியாமல் போலீஸார் திணறிப்போனார்கள். இத்தனைக்கும் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் மட்டுமே காணாமல் போயிருந்தன. வீட்டில் இருந்த மற்ற விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தும் அப்படியே இருந்தன.

வேறு ஏதோ காரணத்துக்காகக் கொலை செய்துவிட்டு, போலீஸ் விசாரணையை திசை திருப்பவே அந்தப் பெண் அணிந்திருந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். கொலையான பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்திருந்ததால் ஏதாவது காதல் விவகாரமாக இருக்கலாம் என்று போலீஸார் யூகித்தனர்.

Also Read: க்ரைம் டேப்ஸ்: உயிர் நண்பனை கொன்ற வழக்கு… தொழிலதிபரை ஜெயிலுக்கு தள்ளிய கல்லூரி காதல் | பகுதி 9

திருமணத்துக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு யாருடனாவது தொடர்பு இருந்ததா என்று விசாரித்தனர். அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அந்தப் பெண்ணின் கணவனே கொலை செய்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றரீதியில் விசாரணையை ஆரம்பித்தனர்.

க்ரைம் டேப்ஸ்

கொலை நடந்த நேரத்தில் அவர் அலுவலகத்தில் இருந்தார் என்பதற்கான சாட்சிகள் தெளிவாக இருந்தன. அலுவலகத்தில் இருந்தபடி இங்கே வந்து கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீஸார் நினைத்தனர். மேலும், அவருக்குப் புது மனைவியைக் கொலை செய்வதற்கான எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

கொலை நடந்து சில நாள்கள் சென்ற நிலையிலும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. போலீஸாருக்குத் தலைசுற்றியது. அந்தப் பெண்ணை யார் கொலை செய்திருப்பார்கள் என்று பல கோணங்களில் விசாரித்து, பதில் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

அந்த நேரத்தில் போலீஸாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் அந்த வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது.

போலீஸ் விசாரணையில் கொலையான பெண்ணின் கணவருக்கும், அவருடைய முன்னாள் காதலிக்கும் அண்மைக்காலமாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. கிடைத்த தகவல் பயன்படாமல் போனதால் போலீஸார் நொந்துபோனார்கள். இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்த இடத்திலேயே நிற்பதாக அவர்களுக்குத் தோன்றியது.

கொலை நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இருந்திருந்தால் யார் உள்ளே வந்து சென்றார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று தங்களுக்குள் புலம்பினார்கள். சிசிடிவி கேமராவைப் பற்றி நினைத்ததும் அவர்களுக்குள் ஒரு சந்தேகம் வந்து போனது.

கொலையான பெண்ணின் கணவர் ஐடி கம்பெனியில் வேலை செய்வதால் அங்கே சிசிடிவி கேமரா இருக்கும். அதை ஆராய்ந்தால் கொலை நடந்த நேரத்தில் அவர் அலுவலகத்தில் என்ன செய்துகொண்டிருந்தார், என்ன மனநிலையில் இருந்தார் என்று தெரிந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

அந்த அலுவலகத்துக்குச் சென்ற போலீஸார் அந்தக் குறிப்பிட்ட நாளில் பதிவான வீடியோக்களைப் பார்த்தனர். அப்போது போலீஸாருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கொலை நடந்த அதேநேரத்தில், அந்தப் பெண்ணின் கணவர் தன் காரை எடுத்துக்கொண்டு வெளியே போனது பார்க்கிங் ஏரியாவிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

க்ரைம் டேப்ஸ்

அது பற்றி அவரிடம் கேட்டபோது, அது மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றேன் என்று பதில் சொல்லியிருக்கிறார். அலுவலகத்தில் விசாரித்தபோதும் அவர் பொய் சொல்லவில்லை என்பது உறுதியானது. ஆனால் போலீஸாருக்கு ஏதோ ஒன்று நெருட, அவர் மதிய உணவை முடித்துவிட்டு எப்போது திரும்ப வந்தார் என்று சிசிடிவி-யில் பதிவான வீடியோவை ஓடவிட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

எப்போதும்போல அவர் திரும்ப வந்து காரை நிறுத்திவிட்டு சகஜமாக அலுவலகத்துக்குள் நுழைந்திருக்கிறார். அந்தக் காட்சியை பார்த்ததும் போலீஸாருக்கு அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்துபோனது. உடனடியாக அந்தப் பெண்ணின் கணவரைக் கைதுசெய்தார்கள். அப்படி என்ன அந்தக் காட்சியில் தெரிந்தது என்று கேட்கிறீர்களா? அவர் மதிய உணவுக்காக காரில் சென்றபோது அணிந்திருந்த சட்டை, திரும்பி வரும்போது மாறியிருந்தது! ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்று திரும்பியவரின் சட்டை மாறியதன் ரகசியம் என்ன?

மதிய உணவு இடைவேளையின்போது ஹோட்டலுக்குச் செல்லாமல், நேராக வீட்டுக்குச் சென்று மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். ரத்தக்கறை படிந்த சட்டையை கழற்றிவிட்டு வேறு சட்டையை அணிந்திருக்கிறார். ரத்தக்கறை படிந்த சட்டையை அலுவலகத்துக்கு வரும் வழியில் எங்கோ தூக்கிப்போட்டுவிட்டார்.

கைது!

கைதுசெய்யப்பட்ட அவரிடம் போலீஸார் தங்களுடைய வழக்கமான பாணியில் விசாரிக்க, அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். திருமணத்துக்கு முன் காதலித்த பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, அதற்குத் தடையாக இருந்த தன் மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்திருக்கிறார். தன் காதலியுடன் சேர்ந்தே இந்தக் கொலைத் திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார். யாருக்கும் சந்தேகம் வராதபடி இருவரும் தங்களுக்குள் இருந்த தொடர்பை மறைத்து, புத்திசாலித்தனமாக நடந்துகொண்டதால் ஆரம்பகட்ட விசாரணையில் போலீஸாருக்கு அவர்கள்மீது எந்தச் சந்தேகமும் வரவில்லை.

காதலித்த பெண்ணைக் கரம்பிடிக்க தைரியம் இல்லாமல், பெற்றோரின் விருப்பத்துக்காகக் கல்யாணம் செய்திருக்கிறார். காதலித்த பெண்ணுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, கட்டியவளைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். பாவம், ஆயிரம் கனவுகளுடன் திருமணம் செய்துகொண்ட ஓர் அப்பாவிப் பெண் அநியாயமாக உயிரைவிட்டிருக்கிறாள்.

ஒத்து வராமல் பிரிந்து வாழ முடிவு செய்யும் தம்பதிகள் பற்றி, சமூக இணையதளங்களில் முகம் சுளிக்கும் வகையில் விமர்சனம் செய்யும் இந்தச் சமூகத்தில் கணவன் மனைவியை, மனைவி கணவனைக் கொலை செய்வது தொடர்கதையாகத்தான் இருக்கும்.

Also Read: க்ரைம் டேப்ஸ்: காவல்துறையின் பொய் வழக்கால் தவித்த பிரபல கல்லூரி முதல்வர்; என்ன நடந்தது? | பகுதி 8

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.