சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. திருமணமான இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதற்கிடையே மூர்த்திக்குப் பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதனைத் தெரிந்துகொண்ட மூர்த்தியின் நண்பர் சுரேந்திரன் என்பவர், அந்த பெண் தனியாக இருந்த நேரத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விஷயமறிந்து கொதித்துப்போன மூர்த்தி, அவரது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சுரேந்திரனைக் கொம்பாடிப்பட்டி மேடு அருகே கழுத்தறுத்துக் கொலை செய்தார். அதனையடுத்து சுரேந்தரனின் தலையை தனியே எடுத்துச் சென்று பாரப்பட்டி பகுதியில் வீசிச் சென்றார். 1999-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ‘மூர்த்தியின் தோழியிடம் சுரேந்திரன் தவறாக நடந்து கொண்டதும், இதுதொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சுரேந்தரைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது’. இதையடுத்து மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களான கணேசன், பாலு, சுபாஷ் ஆகிய 4 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மூர்த்தி மட்டும் தலைமறைவாக, அவர்களுடைய நண்பர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். காலப்போக்கில் சேலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கிலிருந்து குற்றவாளிகள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Also Read: `இளைஞர் தலை துண்டித்துக் கொலை’ – ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரம்!

கொலை

முக்கியக் குற்றவாளியான மூர்த்தி மீதான வழக்கு மட்டும் நடத்தப்படாமலும், மூர்த்தி எங்கிருக்கிறார் என்றும் தெரியாமலும் போலீஸார் ஓய்ந்து போயினர். இதனிடையே பழைய குற்ற வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்க, சேலம் எஸ்.பி ஸ்ரீஅபிநவ் சமீபத்தில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் களத்தில் இறங்கிய ஆட்டையாம்பட்டி போலீஸார் விஜயகுமார், வினோத்குமார் ஆகியோர் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மூர்த்தியை பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு போராடி கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

திருமணத்தை மீறிய உறவு கொலையாளியான மூர்த்தி அதன்பிறகும் திருச்சியில் ஒரு பெண், பல்லடத்தில் ஒரு பெண் என பல பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்

இதுசம்பந்தமாக விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “சம்பவம் நடந்த உடனேயே மூர்த்தி வெளியூருக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்ததோடு, அடிக்கடி இருப்பிடத்தை மாற்றியிருக்கிறார். இதனால் மூர்த்தியைப் பிடிப்பதில் போலீஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டிருக்கிறது. கணவர் தலைமறைவானப் பிறகு தன்னுடைய 3 மகன்களையும் காப்பாற்ற வேண்டுமென மூர்த்தியின் மனைவி சுமதி திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். இதனைத் தெரிந்துகொண்ட மூர்த்தி அவ்வப்போது திருப்பூருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துச் சென்றிருக்கிறார். மூர்த்தியின் தாயார், உறவினர்கள் மூலம் சுமதியின் செல்போன் நம்பரைப் பிடித்து போலீஸ் டீம் திருப்பூர் சென்றது. இந்தத் தகவலை முன்கூட்டியே தெரிந்துகொண்ட மூர்த்தி, செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதனையடுத்து மூர்த்தியில் போன் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்ததில் திருச்சியிலுள்ள பெண் ஒருவரிடம் மூர்த்தி அடிக்கடி பேசிவந்தது தெரிந்திருக்கிறது. அந்தப் பெண்மணி மூலம் போன் செய்துதான் மூர்த்தியைப் பிடிக்க முடிந்தது”.

“கொலை சம்பவத்துக்குப் பிறகு திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர் எனப் பல ஊர்களில் மூர்த்தி கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். மேலும், தன்னுடைய பெயரை மாணிக்கம், ஜான் விக்டர் என மாற்றிக்கொண்டு வலம் வந்திருக்கிறார். இதுமட்டுமில்லாமல், திருமணத்தை மீறிய உறவால் கொலையாளியான மூர்த்தி அதன்பிறகும் திருச்சியில் ஒரு பெண், பல்லடத்தில் ஒரு பெண் என பல பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.