சமீபத்தில் பெரிய குடும்பத்துப் பிரமுகர் ஒருவரை டெல்லிக்கு அழைத்துப்போய் ‘பவர் 2’ நபரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் ‘நீதிப்புள்ளி.’ சந்திப்பு முடிந்ததும், நீதிப்புள்ளியை அழைத்த டெல்லி தரப்பு, “இனிமேல் ஆளுந்தரப்பு சார்ந்த நபர்கள் யாரையும் நீங்கள் அழைத்துவர வேண்டாம்; இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்” என்று எச்சரித்து அனுப்பியதாம்.

Also Read: மிஸ்டர் கழுகு: அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர்! – ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்?

காரணம் விசாரித்தால், நீதிப்புள்ளி தரப்பு ஏற்கெனவே கடந்த ஆட்சியின் ஆளுந்தரப்பு புள்ளிகள் சிலரை அழைத்துவந்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஏகப்பட்ட கரன்சியைக் கறந்துவிட்டதாம். இந்தமுறை அந்தத் தவறு நடக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம் டெல்லி தரப்பு!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருக்குவளையிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது கொரோனா ஊரடங்குத் தடையை மீறி மேடையில் பேசியதால் கைதுசெய்யப்பட்டு, திருக்குவளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார்கள்.

உதயநிதி

மறுநாள் காலை மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தடையை மீறிப் பேசியபோதும் அவர் கைதுசெய்யப்பட்டு, அவர்மீது குத்தாலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்போது வழக்கு பதிவுசெய்த இன்ஸ்பெக்டர்களை அதற்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு டி.ஜி.பி அலுவலகத்துக்கு தற்போது வரச் சொல்லியிருக்கிறார்களாம். இதையடுத்து, `என்னவாகுமோ!’ என்று பதற்றத்தில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்!

`காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம்’ என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சமீபத்தில் பாரம்பர்ய கடல் உணவு விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், விருந்துக்கு முதல்வரால் நேரம் கொடுக்க முடியாத நிலையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி, வடசென்னை எம்.பி கலாநிதி, தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ சங்கர் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவிருந்தனர்.

கனிமொழி

ஆனால், கடைசி நேரத்தில் அனைவரும் ‘எஸ்ஸாகி’விட தமிழச்சி தங்கபாண்டியன் மட்டும் விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். விசாரித்தால், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வுமான கோவிந்தராஜனிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் மீனவர் தரப்பு இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், இதில் அதிருப்தி அடைந்த கோவிந்தராஜன் தரப்பு கனிமொழியிடம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அப்செட்டான கனிமொழி, கடைசி நேரத்தில் நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டதால் கலாநிதி, சங்கர் ஆகியோரும் விருந்துக்குச் செல்லவில்லை என்கிறார்கள். இதையடுத்து, “உங்கள் அரசியலுக்கு எங்களை ஏன் நோகடிக்கிறீர்கள்?” என்று புலம்புகிறார்கள் மீனவர்கள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றியால், விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஆளுந்தரப்பு. இதையடுத்து, “வார்டுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

அப்படியே தொடரட்டும்” என்று வாய்மொழியாக உத்தரவு வந்திருக்கிறதாம். வார்டுகளை மறுசீரமைப்பு செய்தால் காலதாமதமாகும்; ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றிருப்பதால், மக்களின் ஆதரவை அப்படியே தக்கவைக்க உடனடியாகத் தேர்தல் நடத்தலாம் என்பதே ஆளும்தரப்பின் கணக்காம்!

சென்னை எழும்பூரிலுள்ள தன்ராஜ் கோச்சார் என்கிற ஃபைனான்ஸியர்மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் எழுந்ததை அடுத்து, அவர் தொடர்புடைய 10 இடங்களில் செப்டம்பர் கடைசி வாரத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

ரியல் எஸ்டேட்

இதில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், ரொக்கம், தங்கம், வைர நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டனவாம். இந்த ரெய்டில் சென்னையின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்புடைய கணக்கில் காட்டப்படாத 150 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் மிரண்டுகிடக்கிறது சென்னை ரியல் எஸ்டேட் வட்டாராம். விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படலாம் என்கிறது அமலாக்கத்துறை வட்டாரம்!

கொங்கு மண்டலத்தில் பலவீனமாக இருக்கும் தி.மு.க-வை பலப்படுத்த, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொங்கு மண்டலத்தில் தி.மு.க தலைமை முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் செந்தில் பாலாஜியின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. இதனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க தரப்பில் செந்தில் பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்ய கரூர் சின்னசாமிக்கு, தலைமை அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

கரூர் சின்னசாமி

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அ.தி.மு.க-வில் முக்கியப்புள்ளியாக இருந்த சின்னசாமி, அ.தி.மு.க-வில் செந்தில் பாலாஜியின் உள்ளடி வேலைகளால் கடுப்பாகி தி.மு.க-வுக்குத் தாவினார். செந்தில் பாலாஜியோ தி.மு.க-வுக்கும் வந்து சின்னசாமிக்குக் குடைச்சல் கொடுக்க… மீண்டும் அ.தி.மு.க-வுக்கு தாவினார் சின்னசாமி. 20 ஆண்டுக்காலம் தன்னை அரசியலில் கோலோச்ச முடியாமல் செய்த செந்தில் பாலாஜி மீது கடும் கோபத்திலிருக்கும் சின்னசாமி இதையடுத்து, தீவிர எதிர்ப்பு அரசியலில் இறங்குவார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்!

தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம்., சமீபகாலமாக தி.மு.க அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது முதல்வர் தரப்பை அப்செட் ஆக்கியிருக்கிறதாம். சமீபத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்துக்கு நியமனங்கள் நடந்த நிலையில், ‘தலித் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நிற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளை ஆணைய உறுப்பினராக நியமிக்கவில்லை’ என்று அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் சாமுவேல்ராஜ் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

ஸ்டாலின்

அதை தற்போது சி.பி.எம் நிர்வாகிகளும் வலியுறுத்திவருகிறார்கள். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எதிர்பார்த்த இடங்களைக் கொடுக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கும் சி.பி.எம் கட்சியினர், அதை மனதில் வைத்துக்கொண்டே இப்படித் தூண்டிவிடுகிறார்கள் என்று அதிருப்தி அடைந்திருக்கிறதாம் தி.மு.க தலைமை.

மன்னார்குடியைச் சேர்ந்த சிவ ராஜமாணிக்கத்தை அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நியமித்தது அ.தி.மு.க-வினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோது, ‘இனி இவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை’ என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

ஆனால், தற்போது அவருக்குப் பதவி வழங்கப்பட்ட நிலையில், “மன்னார்குடி என்றாலே, சசிகலா குடும்பம்தான் மக்களுக்கு நினைவுக்கு வருகிறது. அதை மாற்றவும், முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு செக் வைக்கவும் சிவ ராஜமாணிக்கத்துக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read: எடப்பாடியிடம் காட்டம் காட்டிய பன்னீர் முதல் உதயநிதியின் சினிமா கமிட்மென்ட் வரை..! கழுகார் அப்டேட்ஸ்

சமீபத்தில் மன்னார்குடி அருகே சேரன்குளம் ஆள்காட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சசிகலாவின் சகோதரர் திவாகரனும், காமராஜும் தோள் மேல் கைபோட்டு சிரிக்கச் சிரிக்க பேசியது, எடப்பாடி தரப்பைக் கடுப்பாக்கியிருக்கிறது. இதையடுத்து, சசிகலாவோடும் காமராஜ் நட்பில் இருப்பாரோ என்று எடப்பாடிக்கு சந்தேகம் எழவே… சிவ ராஜமாணிக்கத்தை வைத்து அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்” என்கிறார்கள் மன்னார்குடி அ.தி.மு.க நிர்வாகிகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.