கிச்சன் ஏரியாவும் சரி, அங்கு சமைப்பவர்களும் சரி, ‘சுத்தம்’ என்னும் விஷயத்தை மிக மிக கறாராக பேண வேண்டும் என்கிற ஆதாரமான பாடத்தை இந்த எபிசோட் கற்றுக் கொடுத்தது. தன்னிச்சையாக செய்துவிட்ட ஒரு பிழையினால், போட்டியில் இருந்தே வெளியேறும் சிக்கல் சுமித்ராவிற்கு ஏற்பட்டுவிட்டது. அது என்ன?

இது தவிர, கூல் கேப்டன் ‘தோனி’க்கு பிடித்த ஸ்வீட் என்ன என்கிற அதிமுக்கியமான தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? உள்ளே வாருங்கள்.

மாஸ்டர் செஃப் எபிசோட் 22-ல் என்ன நடந்தது?

மூன்று நிற அணிகளாகப் பிரிந்து விதம் விதமான அடுப்பு + காம்பினேஷன்களில் போட்டியாளர்கள் சமைத்ததை கடந்த எபிசோடில் பார்த்தோம். ஆனால் அதன் முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்த எபிசோடில் அதற்கான விடை கிடைத்தது.

மாஸ்டர் செஃப்

Also Read: மாஸ்டர் செஃப் தமிழ்: `பப்ளிமாஸின் சுவையில்…’ இது என்ன டிஷ்ஷோட பேரா, இல்ல நாவலோட தலைப்பா?!

“ஆரம்பத்தை விடவும் உங்களோட சிந்தனை, தோற்றம் போன்ற விஷயங்கள் எல்லாம் இப்ப ரொம்ப இம்ப்ரூவ் ஆகியிருக்கு. இந்த முறை pantry-ல ஃபிஷ், சிக்கன்-ன்னு நான்வெஜ் அயிட்டம் எதையும் நாங்க வைக்கலை. ஆனா நீங்க காய்கறிகளை வைத்தே விதம் விதமா சமைச்சு அசத்திட்டீங்க. அதுல சின்னச் சின்ன டெக்னிக்கல் மிஸ்டேக்ஸ் இருந்தது. ஆனா உங்க உழைப்பு அபாரம். பாராட்டுக்கள்” என்று நீண்ட உரையை நிகழ்த்தினார் ஆர்த்தி. ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு வின்னி & நித்யா அணி வெற்றி பெற்றதை நீதிபதிகள் அறிவித்தனர்.

“அனுபவம் இல்லாம கரி அடுப்புல சமைக்கறது ரொம்ப கஷ்டம். அதுலயும் பப்ளிமாஸை அதுல சமைக்கறது ரொம்பவே கஷ்டம். ஆனா நீங்க சாதிச்சிட்டீங்க” என்று வெற்றி பெற்ற அணியைப் பாராட்டினார் கெளஷிக். “மணிகண்டனுக்கு நல்ல நாலெட்ஜ் இருக்கு. ஆனா ஆர்வக் கோளாறும் கூடவே இருக்கு. ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆயிடுச்சு” என்று மணியின் தலையில் குட்டினார் விஜய் சேதுபதி. “நான் அப்பவே சொன்னேன். கிழங்கை குக்கர்ல வேக வைக்கலாம்னு” என்று நொந்து போய் சொன்னார் சுமித்ரா. மணிகண்டனின் அலட்சியத்தால் சுமித்ராவும் இணைந்து தோல்வியடைய வேண்டியிருந்தது. “எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு” என்று இதற்காக பிறகு வருந்தினார் மணி.

நித்யா & வின்னி வெற்றி பெற்று பால்கனிக்குச் சென்றதால் மீதமுள்ள நால்வரும் இன்றைய பிளாக் ஏப்ரன் சவாலைச் சந்திக்க வேண்டும். “உங்களை கறுப்பு ஏப்ரன் அணிந்து பார்க்க எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. எனவே உங்களை அந்த டிரஸ்ல பார்க்க நான் விரும்பலை” என்ற சாக்குடன் கிளம்பிவிட்டார் விசே. (பட ஷூட்டிங்கிற்கு டைம் ஆச்சோ?!). அவர் இல்லாமல்தான் இந்த முழு எபிசோடும் நடைபெற்றது. எனவே செஃப் கெளஷிக்கே ஸ்பான்சர்களின் பெயரை வரிசையாக சொல்லியதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

“உங்களுக்கு ஒரு நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி” என்று சஸ்பென்ஸ் தந்த கெளஷிக், “இதுதான் இந்த சீசனோட கடைசி பிளாக் ஏப்ரன் சேலன்ஞ்” என்ற நல்ல செய்தியை முதலில் அறிவித்தவர், “இந்த வாரம் கண்டிப்பா எலிமினேஷன் இருக்கும்” என்று போட்டியாளர்களின் வயிற்றில் வழக்கமாகப் புளியைக் கரைக்கிற விஷயத்தையும் அடுத்ததாகச் சொன்னார். (இது தெரிஞ்ச விஷயம்தானே?!).

மாஸ்டர் செஃப்

“ஓகே… யார் யாருக்கு என்னென்ன ஸ்வீட்ஸ் பிடிக்கும்னு சொல்லுங்க?” என்று லீட் கொடுத்தார் கெளஷிக். எனில் அப்போதே புரிந்து போயிற்று, இந்த வாரம் ஸ்வீட் வாரம் என்று. “எனக்கு அக்காரவடிசல் ரொம்ப பிடிக்கும். ஒரு தட்டு நெறய கொடுத்தாக்கூட ஃபுல் கட்டு கட்டுவேன்” என்றார் கெளஷிக். ஆர்த்திக்கு குளோப்ஜாமூன் பிடிக்குமாம். “எனக்கு நிறைய ஸ்வீட்ஸ் பிடிக்கும். ஆனா ரொம்ப பிடிச்சது பாதுஷாதான். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம தோனி இருக்காா்ல… அவருக்குப் பிடிச்ச ஸ்வீட் பாதுஷாதான். நான் நிறைய முறை அவருக்கு சர்வ் பண்ணியிருக்கேன்” என்று பெருமையுடன் சொன்னார் ஹரீஷ். (எனக்கு கூட பாதுஷாதான் ரொம்ப பிடிக்கும்… ஹிஹி!).

போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்த இனிப்பு வகைகளை வரிசையாகச் சொல்லத் துவங்கினார்கள். (இதுல ஏதும் உள்குத்து வெச்சிடாதீங்க. நீதிபதிகளே!). தேவகி (குளோப்ஜாமூன்), கிருத்திகா (பால் கொழுக்கட்டை), மணி (அக்காரவடிசல்), சுமித்ரா (அதிரசம் மற்றும் அப்பம்).

Also Read: பிக் பாஸ் 18: காமெடி வில்லன் அபிஷேக், அதிகார பிரியங்கா – யார் இவர்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்தது?

“ஓகே… நாம இந்த பிளாக் ஏப்ரன் சேலன்ஞ்சுக்குள்ள போகலாம்” என்று ஆரம்பித்த செப்கள், இந்த எபிசோடில் தந்த டாஸ்க் ‘நம்ம ஊரு ஸ்வீட்’ சேலன்ஞ். “நம்முடைய பாரம்பர்ய இனிப்பு வகைகளில் ஏதாவதொன்றை நீங்கள் செய்யலாம். ஆனால் மாஸ்டர் செஃப்பிற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கில்லையா? பாரம்பரிய ஸ்வீட்டாக இருந்தாலும் அதில் ஒரு மாடர்ன் டிவிஸ்ட் தரவேண்டும்… இதுதான் முதல் டிவிஸ்ட். இரண்டாவது என்னன்னா… நீங்க மாடர்ன் உபகரணங்களைப் பயன்படுத்தாம சமைக்கணும்” என்று அடுத்த டிவிஸ்டையும் தெரிவித்தார்கள்.

இதனால் போட்டியாளர்கள் முதலில் சற்று ஜெர்க் ஆனாலும் “ஓகே… நாங்க களத்துல இறங்கறோம்” என்று உற்சாகமானார்கள். அவர்களுக்காக பல வசதிகள் கொண்ட ஒரு ரைஸ் குக்கர் தரப்பட்டது. போட்டி நேரம் 60 நிமிடம். Pantry டைம் 2 நிமிடம்” என்று அறிவிக்கப்பட்டது. “அய்யோ… நான் வினிகரை கொண்டு வர மறந்துட்டேனே! அது முக்கியமான அயிட்டமாச்சே” என்று தலையில் கை வைத்துக் கொண்டார் மணிகண்டன். என்றாலும் அவர்தான் தோனியைப் போல் திறமைசாலி ஆயிற்றே?! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற துணிச்சலோடு களத்தில் இறங்கினார்.

மாஸ்டர் செஃப்

தகுந்த ingredient இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த மணிகண்டனிடம் செஃப் கெளஷிக் அருகில் வந்து ‘இவன் எங்க கேக்கப் போறான்!’ என்ற நம்பிக்கையில்லாமல் சில டிப்ஸ்களை சொல்லிக் கொண்டிருந்தார். “சரிங்க சார்… நீங்க உங்க இடத்துல போய் நில்லுங்க. நான் சமைச்சுட்டு கூப்பிடறேன்” என்கிற மாதிரியே அவரை ஹேண்டில் செய்தார் மணிகண்டன். போட்டியாளர்கள் பரபரப்பாக இயங்கி வழக்கம்போல் கடைசி நொடி வரைக்கும் சமையல் தட்டைவிட்டு பிரிய மனமில்லாமல் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில் சுமித்ரா செய்த ஒரு பிழை, எபிசோடின் இறுதியில் அவர் தலையில் இடியாக வந்து இறங்கியது.

பரிசோதனை மேடைக்கு உணவுகள் எடுத்து வர உத்தரவிடப்பட்டன. முதலில் வந்தவர் தேவகி. இவர் தயார் செய்திருந்த உணவின் பெயர் ‘தேங்காய் பர்பி போச்டு பியர்’. பேரிக்காய் வடிவத்தில் பார்க்கவே வசீகரமாக இருந்தது. ‘இது இந்தியன் டைப் ஸ்வீட்தானா?’ என்கிற ஆதாரமான சந்தேகத்தை நீதிபதிகள் எழுப்பினார்கள். “நீங்க செஞ்சிருக்கிறது தேங்காய் பர்பியே கிடையாது. வொயிட் சாக்லேட் டாமினேஷன் இருக்கு” என்று ஆர்த்தி சந்தேகமான கமென்ட்களை சொல்லவே குழப்பத்துடன் திரும்பினார் தேவகி.

அடுத்து வந்தவர் கிருத்திகா. இவர் உருவாக்கியிருந்த இனிப்பின் பெயர் ‘திரட்டிப் பால் பட்டி ஷப்டா’. ‘ஷட்டப் வாயை மூடுடா’ என்று சொல்வது போல் மரியாதையில்லாதப் பெயராக தெரிந்தாலும் ‘பட்டி ஷப்டா’ என்பது பெங்காலி ஸ்வீட்டாம். ‘தோற்றம் நல்லாயிருக்கு’ என்கிற பாராட்டு கிடைத்தது. “எனக்குப் பிடிச்சிருக்கு” என்றார் ஹரீஷ். ஆர்த்தியும் பாசிட்டிவ் கமெண்ட் வழங்கினார். “கொஞ்சம் திகட்டுது… என்றாலும் ஓகே…” என்று கெளஷிக்கும் வரம் தரவே மகிழ்ச்சியுடன் திரும்பினார் கிருத்திகா.

மூன்றாவதாக வந்த ‘ஆல்ரவுண்டர்’ மணி கொண்டு வந்திருந்த ஸ்வீட்டின் பெயர் வித்தியாசமாக இருந்தது. ‘எனது பாரம்பர்யமும் என் மனைவியின் கலாசாரமும்’ (என்னா மேன்… கட்டுரைத் தலைப்பு மாதிரியே இருக்கு?!). உலர்ந்த ஏப்ரிகாட்ஸ் வைத்து இவர் செய்திருந்த ஸ்வீட் ‘Qubani-ka-Meetha’. இது ஹைதராபாத்தில் பிரபலமான இனிப்பாம். கூடவே அவல் பாயசம். “சாக்லேட்ல இந்த மாதிரி ஷைனிங் கொண்டு வர்றது ரொம்ப சிரமம். குட் ஜாப்…” என்று மனம்திறந்து பாராட்டினார் ஆர்த்தி. கெளஷிக்கும் மணியைப் பாராட்ட, ஆசாமி திருப்பதி லட்டுவை ஒரே சிட்டிங்கில் சாப்பிட்டதுபோல் குஷியானார். “வினிகரை மறந்துட்டாலும் எப்படியோ சமாளிச்சு சாதிச்சிட்டீங்க” என்கிற போனஸ் பாராட்டும் மணிக்கு கிடைத்தது.

மாஸ்டர் செஃப்

கடைசியாக வந்தவர் சுமித்ரா. இவர் தட்டில் இருந்த ஸ்வீட்டின் பெயர் ‘அல்வா கனலோனின்’. “நீங்க பிளேட்டிங் செய்யும்போது ஒரு தப்பு பண்ணீங்க. நினைவிருக்கா?” என்று ஆர்த்தி வில்லங்கமாகக் கேட்க, அவர் முகத்தில் இருந்த வித்தியாசத்தைக் கவனித்துவிட்ட சுமித்ரா உடனே உண்மையை ஒப்புக் கொண்டார். சுமித்ரா செய்த தவறு என்னவெனில், அல்வாவை அவர் பைபிங்கில் இட்டு வைத்திருந்தார். அதன் முனையை கத்தரிக் கோலால் துண்டிக்க முயலும் போது அது கட் ஆகவில்லை. எனவே வந்த அவசரத்தில் பல்லால் கடித்துவிட்டு, அடுத்த நொடியிலேயே தன் தவற்றை உணர்ந்து கத்தரியைப் பயன்படுத்தினார்.

இவர் செய்த இனிப்பில் அல்வாவை மட்டும் ஹரிஷூம் ஆர்த்தியும் சுவைக்கவில்லை. கமெண்ட்டும் சொல்லவில்லை. கெளஷிக் மட்டும் அல்வாவோடு இதர அயிட்டங்களையும் சுவைத்துவிட்டு “சரி… உங்க பிளேட்டை எடுத்துட்டு போங்க” என்று மையமாகச் சொல்ல, முகத்தில் சுரத்தே இல்லாமல் திரும்பினார் சுமித்ரா. இரண்டு செஃப்களும் தன்னுடைய இனிப்பை சாப்பிடாமல் வைத்துவிட்ட வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

Also Read: சர்வைவர் – 39 | வேடர்களின் `சிரிக்கறோம், ஜெயிக்கறோம்’ பாலிசி, நந்தாவை வென்ற உமாபதியின் டெக்னிக்!

முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம். முதலில் பாஸாகியவர் தேவகி. இவரைத் தொடர்ந்து கிருத்திகாவின் உணவும் தேர்வானது. வினிகர் கொண்டு வர மறந்து போன மணியிடம் “வழக்கமா என் பேச்சை கேட்க மாட்டீங்க. இந்த முறை கேட்டதால தப்பிச்சீங்க…” என்ற சஸ்பென்ஸூடன் அவரையும் பாஸாக்கி அனுப்பினார் கெளஷிக்.

ஆக மீதம் இருந்த சுமித்ராதான் இன்றைய எலிமினேஷன் என்பது புரிந்து போயிற்று. “நீங்க வலது கை பழக்கம் உள்ளவர்தானே? அப்புறம் ஏன் லெஃபட் ஹேண்ட்ல சிசரை யூஸ் பண்ணீங்க? அதனால சட்டுன்னு வாயில வெச்சு கடிச்சிட்டீங்க. அதனாலதான் நாங்க டேஸ்ட் பண்ணலை. நீங்க செஞ்ச க்ரெம்பிள், க்ரீம் எல்லாம் நல்லாயிருந்தது. ஆனா, அல்வாவை நான் மட்டுமே டேஸ்ட் பண்ணினேன். மத்த ரெண்டு பேரும் பண்ணலை. இதனால உங்களுக்கு மார்க் ரொம்ப குறைஞ்சு போச்சு. சின்ன தவறுதான்.. ஆனா சமையல்ல இது முக்கியமான விஷயம் இல்லையா?” என்று சுமித்ரா செய்த பிழைக்காக கெளஷிக் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தார்.

அப்போதைய அவசரத்தில் தான் செய்த ஒரு சிறிய சறுக்கல், எலிமினேஷனில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்பதை சுமித்ரா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. எனவே தன்னிச்சையாக கண்கலங்கத் துவங்கினார். “வாத்தை வெச்சு சமைச்ச எபிசோட்ல உங்க அட்டெம்ப்ட் ரொம்ப பிரமாதமா இருந்தது. இத்தனைக்கும் வாத்தை அன்னிக்குத்தான் நீங்க முதன்முறையா சமைச்சீங்க. இல்லையா..?” என்று சுமித்ராவை பாராட்டும் விதமாக தேற்றினார் ஹரீஷ்.

“இட்லி கூட சுடத்தெரியாத சுமித்ரா-ன்னு சின்ன வயசுல உங்க பிரெண்ட்ஸ் உங்களைக் கேலி பண்ணுவாங்க இல்லையா. ஆனா பாருங்க… இன்னிக்கு மாஸ்டர் செஃப்ல டாப் 6 போட்டியாளரா வந்திருக்கீங்க” என்று கெளஷிக்கும் ஆறுதல் கூறினார். சக போட்டியாளர்கள் கண்ணீருடன் சுமித்ராவை வழியனுப்பி வைத்தனர்.

இனி பிளாக் ஏப்ரன் சேலன்ஞ் கிடையாது என்றாலும் மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களுக்கும் கடுமையான சவால் காத்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. அவை எப்படி இருக்கும்?

காத்திருந்து சுவைப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.