வங்க தேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு கடந்த அக்டோபர் 13 முதல் நிம்மதி இல்லை. துர்கா பூஜையின்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் நாடு முழுக்க பெரும் கலவரத்துக்கு வித்திட்டன. குறிப்பாகத் தெற்கு வங்க தேசத்தில் இந்துக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் தீவைக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கோயில்களும் துர்கா பூஜை பந்தல்களும் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை ஏழு பேர் இறந்திருக்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள உடைமைகள் சேதமடைந்தன.

வங்கதேச கலவரம் | Bangladesh Religious Protest

எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்து, நூற்றுக்கணக்கானவர்களைக் கைதுசெய்தும் கலவரங்கள் ஓயவில்லை. சர்வதேச கண்டனங்களுக்குப் பிறகு வங்கதேச அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு இந்துக்கள் போராடிவர, இன்னொரு பக்கம் தீவிர இஸ்லாமிய அமைப்புகள் சில, “குரானை அவமதித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று போராட்டம் நடத்துகின்றன.

ஆனால், உண்மையில் இந்தக் கலவரங்களுக்குத் தொடக்கப்புள்ளியான அந்த குரான் அவமதிப்பு விவகாரத்தில், குரானைக் கொண்டுபோய் துர்கா பூஜை பந்தலில் வைத்தவரே ஒரு முஸ்லிம்தான் என்பதை வங்கதேச போலீஸார் இப்போது கண்டுபிடித்துள்ளனர். வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கமால், “அந்த முக்கியமான குற்றவாளியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். கைதுக்குப் பயந்து அவர் இடத்தை மாற்றி மாற்றி ஓடிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவரைக் கைது செய்துவிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

வங்கதேச கலவரம் | Bangladesh Religious Protest

அந்தக் குற்றவாளி யார் என்பதை போலீஸார் சொல்லிவிட்டனர். அவர், 35 வயது இக்பால் ஹுசைன். கொமில்லா நகரின் சுஜாநகர் பகுதியைச் சேர்ந்தவர். அவரைப் பயன்படுத்தி இந்த அவமதிப்பு சம்பவத்தைத் திட்டமிட்டதாக ஃபயாஸ் அகமது, ஏக்ரம் ஹுசைன் என்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். துர்கா பூஜை பந்தலில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் பதிவு செய்திருக்கும் காட்சிகளை வைத்து, நடந்த சம்பவத்தை போலீஸார் இப்படி விவரிக்கின்றனர்…

ஃபயாஸ் அகமது, ஏக்ரம் ஹுசைன், இக்பால் ஹுசைன்

கொமில்லா நகரின் நானா திகிர் பர் என்ற இடத்தில் இருந்த துர்கா பூஜை பந்தலில்தான் குரானை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதான் கலவரத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப் பூஜை பந்தலில் விநாயகர் சிலையின் காலடியில் குரானைக் கொண்டு போய் வைத்தவர், இக்பால் ஹுசைன். பக்கத்தில் இருக்கும் ஒரு மசூதியிலிருந்து குரானுடன் வரும் இக்பால், அதைப் பந்தலுக்குக் கொண்டு போவது சி.சி.டி.வி காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்ச நேரத்தில் பிரச்னை பெரிதாகி கலவரம் மூண்டதும், ஹனுமன் சிலை கையிலிருந்த கதையைத் தன் தோளில் சுமந்தபடி இக்பால் பந்தலிலிருந்து வெளியேறும் காட்சியும் கேமராவில் பதிவாகியுள்ளது.

துர்கா பூஜை பந்தலில் இருந்த அந்த குரான் எங்கிருந்து வந்தது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். அடர் பச்சை நிற அட்டையுடன் இருந்த அந்தக் குரான், வங்க தேசத்தில் தயாரானது இல்லை. சவூதி அரேபியாவில் அச்சிடப்பட்டது. ஃபயாஸ் அகமது கடந்த ஆண்டு வரை சவூதியில் வேலை பார்த்தவர். அவர் அங்கிருந்து வரும்போது அந்தக் குரான் புனித நூலை எடுத்து வந்திருக்கிறார். கொமில்லா நகரில் ஒரு மொபைல் போன் சர்வீஸ் கடையை நடத்திவரும் அவர், பங்களாதேஷ் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர். அவரும், அதே அமைப்பைச் சேர்ந்த ஏக்ரம் ஹுசைனும் இணைந்து இந்தக் கலவரத்தைச் செய்ய திட்டமிட்டுள்ளனர். இக்பால் ஹுசைனிடம் குரானைக் கொடுத்து, துர்கா பூஜை பந்தலில் வைக்குமாறு சொன்னது அவர்கள்தான்.

CCTV Footage

இக்பால் ஹுசைன் பந்தலுக்குள் குரானுடன் போனதும், ‘துர்கா பூஜை பந்தலில் குரானுக்கு அவமரியாதை செய்துவிட்டார்கள்’ என்று சொல்லி உள்ளூர் முஸ்லிம் இளைஞர்கள் சிலரைத் திரட்டிக்கொண்டு ஃபயாஸ் பந்தலுக்குள் வந்தார். அவருடன் வந்த ஏக்ரம் ஹுசைன் உடனே போலீஸுக்கு போன் செய்து, குரானுக்கு அவமரியாதை நேர்ந்ததாக புகார் செய்தார். துர்கா பூஜை பந்தலில் இதனால் குழப்பம் நிலவிய நேரத்தில், ஃபயாஸ் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவில் இந்தக் காட்சிகளைப் பதிவுசெய்து ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார். இந்தக் காட்சிகளே நாடு முழுக்க கலவரம் மூள்வதற்குக் காரணமாக இருந்தன.
”நாங்கள் பூஜை செய்துகொண்டிருந்த பந்தலில் புனித குரான் இல்லை. திடீரென இரண்டு இளைஞர்கள் ‘பூஜை மண்டபத்தில் குரான் வைக்கப்பட்டிருக்கிறது’ என்று கூச்சல் போட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் நாங்களே அதை கவனித்தோம்” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார், இங்கு துர்கா பூஜை நடத்திய கமிட்டியின் தலைவர் சுபோத் ராய். அந்த இளைஞர்கள் ஃபயாஸ் மற்றும் ஏக்ரம்.

‘வங்க தேசத்தை ஆளும் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இருக்கும் உறவைக் கெடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் பங்களாதேஷ் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு இதைச் செய்திருப்பதாக போலீஸ் கூறுகிறது. இஸ்லாமிய சட்டப்படி வங்கதேசத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்று சொல்லிவரும் இந்த அமைப்பு, முன்பு அரசியல் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது இந்தக் கட்சிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வரும் பங்களாதேஷ் ஜமாத் இ இஸ்லாமி, தாலிபன்களை வெளிப்படையாக ஆதரிக்கும் இஸ்லாமிய அமைப்பு. ‘இந்த அமைப்பு தொடர்ச்சியாக நிகழ்த்திவரும் வன்முறைகளின் ஓர் அங்கமே இந்த சதி’ என்கிறது போலீஸ்.

“ஆனால், இந்த விவகாரத்தில், பந்தலில் கொண்டுபோய் குரானை வைத்த இக்பால் ஹுசைன் எந்தக் கட்சியிலும் அமைப்பிலும் உறுப்பினராக இல்லை. அவர் ஏன் இதைச் செய்தார் என்று விசாரித்து வருகிறோம்” என்கிறார், கொமில்லா மாவட்ட எஸ்.பி ஃபரூக் அகமது. நாடோடி போல சுற்றிவரும் இக்பால் போதைக்கு அடிமையானவர் என்கிறது அவர் குடும்பம். “இக்பால் நாடு முழுக்க சுற்றி புனிதத் தலங்களில் தங்குவதை விரும்பக்கூடியவர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அடிக்கடி வந்து எங்களிடம் தகராறு செய்வார். எப்போது எங்கே போவார் என்று தெரியாது. யாரோ, எந்த அமைப்போ அவரை இதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது” என்கிறார் இக்பால் ஹுசைனின் அம்மா ஆமினா பேகம்.

வங்கதேச கலவரம் | Bangladesh Religious Protest

மொத்தத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி ஒரு சிறுபான்மை இனத்தையே நிம்மதி இழக்கச் செய்யும் கலவரத்தை நடத்தி முடித்திருக்கிறது ஒரு கும்பல். பல காலமாக இணக்கமாக வாழ்ந்துவரும் இரண்டு சமூகங்களுக்கு இடையே விரிசலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

‘கலவரங்களும் வன்முறைகளும் எப்போதும் தற்செயலாக நிகழ்வதில்லை. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக சிலரால் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன’ என்பதை வங்கதேச வன்முறைகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. உணர்ச்சி வேகத்தில் தூண்டப்பட்டு கும்பல் மனோபாவத்துடன் திரளும் எவரும் ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசித்தால், எந்தத் தாக்குதலும் எப்போதும் நிகழாது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.