‘மின்வாரியத் துறையில் முறைகேடு’ என்று பா.ஜ.க தலைவர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், ‘ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்’ என்று பதிலளித்த செந்தில் பாலாஜி, ‘ரூ. 29.99 கோடி என்று எழுதக்கூட தெரியாமல், அதிமேதாவி போல் பேசக்கூடாது’ என்று ட்விட்டர் மூலம் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார். பதிலுக்கு அண்ணாமலையும் பதில் ட்வீட் செய்ய, இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

செந்தில் பாலாஜி

Also Read: `திமுக ஆட்சியில் அணில்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா?’ செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, ‘முறைகேடு’ புகாரை முன்வைத்தார். அதில், ‘தற்போது நலிவடைந்துள்ள நிலையில் உள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ. 5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காக தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது. எந்த நிறுவனம், எந்த அமைச்சர் என்ற பெயரை, தற்போது வெளியிட விரும்பவில்லை. திரும்பவும் 2006 – 11 பாதைக்கு போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி போகும்போது, பா.ஜ.கவுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தம் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்’ என்று பேசியிருந்தார்.

பதிவை கோடிட்டு காட்டும் செந்தில் பாலாஜி

அதோடு, ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ. 29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன?. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பாகன புகைப்படடம் உள்ளிட்டவற்றை பதிந்த அவர், கூடவே, “இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார், அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக் கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம்’’ என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலையில் அந்த ட்வீட் பதிவுக்கு பதில் கூறும்விதமாக ட்வீட் செய்த செந்தில் பாலாஜி, “மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் ரூ. 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15,541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1 ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை’ என்று பதிலடி கொடுத்திருந்தார்.

அண்ணாமலை

ஆனால், விடாத அண்ணாமலை, அதற்கும் ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். ‘கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட, 5 மடங்கு இது கூடுதலான விலை’ என்று பதிவிட்டு, அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அதோடு, தன்னுடைய அடுத்த ட்வீட்டில், செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டார் அண்ணாமலை. இன்னொருபக்கம், அதற்கு எதிராக தனது ட்வீட்டை தொடர்ந்த செந்தில் பாலாஜி, ‘இந்திய மின்சந்தையில் அக்டோபர் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ. 1.99 /- யூனிட். அதிகப்பட்ச விலை ரூ. 8.50/- யூனிட், சராசரி ரூ. 6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸ் அப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்துகொள்ளவும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி, அண்ணாமலை, செந்தில் பாலாஜி முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதில் பதிவுகள் என ட்விட்டர் தளத்தில் விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.