திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சின்னூரில் வசித்து வருபவர்கள் குட்டூ குமார் – சுஹாந்தி தேவி தம்பதி. இவர்களுக்கு தன்னுகுமார் (6), அபிமன்யு (3) என இரண்டு ஆண்குழந்தைகள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதி, சின்னூர் பகுதியிலுள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி குட்டூ குமார் தன் குடும்பத்தினருடன் திருப்பூருக்கு ஷாப்பிங் சென்றுவிட்டு பல்லடம் வந்தபோது, பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்த கடையொன்றில் குடும்பத்தினருக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே குட்டூ குமாரின் மூத்த மகன் தன்னுகுமாரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் இரவிலிருந்து மறுநாள் காலை வரை தொடர்ச்சியாக வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதில் சிறுவன் தன்னுகுமார் களைத்துப் போயிருக்கிறான்.

பல்லடம் பேருந்து நிலையம்

Also Read: பரோட்டா, பிரியாணி – அதிகரிக்கும் சுகாதாரமற்ற உணவகங்கள்; கண்டுகொள்ளுமா அரசு நிர்வாகம்?

உடல்நிலை மிகவும் மோசமானதால் தன்னுகுமாரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்லி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்று பரிசோதிக்கையில், வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பல்லடம் போலீஸார், சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, வழக்கு பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது, `பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு கடையில் ஜூஸ் குடித்த பிறகுதான், தன்னுகுமாருக்கு கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது’ எனப் பெற்றோர் கதறியபடி சொல்லியிருக்கின்றனர்.

உயிரிழந்த தன்னுகுமாரை கையில் ஏந்தி நிற்கும் தந்தை குட்டூ குமார்

இதற்கிடையே ஜூஸ் குடித்த வடமாநில சிறுவன் பலி என்ற செய்தி பரவ, பொதுமக்களிடையே பதற்றம் உண்டானது. சமீபகாலமாக ஜூஸ், பிரியாணி, பானிபூரி சாப்பிட்டவர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, பல்லடத்தில் நடந்த இந்தச் சம்பவமும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், உண்மையிலேயே சிறுவன் ஜூஸ் குடித்ததால்தான் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையில் இறங்கினர். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இப்படியான நிலையில் சிறுவன் ஜூஸ் குடித்ததால் உயிரிழக்கவில்லை என்ற தகவல் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் பேசினோம். “16-ம் தேதி காலையிலேயே சிறுவன் தன்னுகுமாருக்கு கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருந்துருக்கு. அன்னைக்குக் காலையில வீட்ல சிக்கன் எடுத்து சமைச்சு சாப்பிட்டுருக்காங்க. அதுக்குப் பின்னாடி குடும்பத்தோட திருப்பூருக்கு ஷாப்பிங் வந்தவங்க, ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்துருக்காங்க. மதியம் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில சாப்பிட்டிருக்காங்க. ராத்திரி வீட்டுல ரொட்டி சுட்டு உருளைக்கிழங்கு மசாலா சாப்பிட்டிருக்காங்க. இதுக்கு இடையிலதான் பல்லடத்துல அந்தக் குழந்தை ஜூஸ் குடிச்சிருக்கான்.

பல்லடம் காவல் நிலையம்

Also Read: பானி பூரி மசாலாவில் புழு; வடமாநில இளைஞரைக் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்!

உயிரிழந்த குழந்தை மட்டுமல்ல, அவனோட அம்மா – அப்பா, 3 வயசு தம்பி, கூட ஷாப்பிங் வந்த இன்னொரு குடும்பத்தினரும் அங்க ஜூஸ் குடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் எதுவும் ஆகலை. 16-ம் தேதி இரவில் இருந்து மறுநாள் காலை வரை குழந்தைக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு இருந்துருக்கு. குழந்தை சோர்ந்து போய் மயங்குனப்போதான் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கால நீர்ச்சந்து குறைந்துதான் குழந்தை உயிரிழந்திருக்கான். போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல வேற எந்த பிரச்னையும் காட்டலை. இருந்தபோதிலும் உடற்கூறாய்வில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பியிருக்கோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.