மாற்றுத்திறனாளி மகள் உட்பட மூன்று பெண் பிள்ளைகளோடு குடியிருக்க வீடுகூட இல்லாமல் அல்லாடிய தாய்க்கு, அவர் மனு கொடுத்த 24 மணி நேரத்தில் சொந்தமாக வீடு கிடைக்க வழிவகை செய்து, அக்குடும்பத்தை நெகிழ வைத்திருக்கிறார், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் நடக்கவியலாத மாற்றுத்திறனாளி. செல்வியை அவரின் கணவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தன் மாற்றுத்திறனாளி மகளுக்குக் கிடைத்துவரும் உதவித்தொகை மற்றும் தான் கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, மூன்று மகள்களையும் வளர்த்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமாக வீடு இல்லை. வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

அமைச்சரிடம் மனு வழங்கும் செல்வி

Also Read: `நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற வாய்ப்பு!’ – இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜோதிமணி

தனது நிர்க்கதியான நிலையை எடுத்துக்கூறி, கடந்த 10 வருடங்களாக உதவி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்திருக்கிறார் செல்வி. எந்த உதவியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகள் மற்றும் குளித்தலை நகராட்சியில் நடைபெற்ற `மக்கள் சபை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் செந்தில் பாலாஜியை சந்தித்த செல்வி, மூன்று மகள்களுடன் தான் ஆதரவற்ற நிலையில் வசித்துவருவதை எடுத்துக்கூறி, தனக்கு வீடு வழங்கும்படி கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் தரைதளத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், செல்வி மனு அளித்த 24 மணி நேரத்தில் காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவற்கான ஆணையை வழங்கி, `உங்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, உங்களுக்கு இருக்கும் பொறுப்பு, மூன்று பெண் குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைப்பதே. அரசுக் கல்லூரியில் பிள்ளைகளை சேர்த்துப் படிக்க வையுங்கள். கல்வி ஒன்றே சமுதாயத்தில் நாம் சிறந்தவர்களாக வாழ்வதற்கான பாதையை உருவாக்கித் தரும்” என்று தெரிவித்தார்.

அமைச்சரிடம் மனு வழங்கும் செல்வி

Also Read: `இந்த உதவி போதும்; என் மகனை கரைசேர்த்திடுவேன்!’ – பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கிய ஆட்சியர்

வீடு கிடைத்த மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் இருந்த செல்வி, “கணவர் என்னை விட்டு பிரிஞ்சுபோயிட்டார். ஒரு ஆளா கூலி வேலைக்குப் போய், மூணு மகள்களையும் வளர்த்துக்கிட்டு வர்றேன். எங்களுக்கு உதவ யாரும் இல்ல. ஒரு கஷ்டம்னு மருகி நின்னா, என்னனு கேக்க கூட நாதியில்ல. வர்ற சொற்ப வருமானமும், வீட்டு வாடகைக்கே சரியாயிரும். ரேஷன் அரிசியை வச்சுதான் உணவுத் தேவையை நிறைவேத்திக்கிட்டு வந்தோம். சொந்தமா வீடு இருந்தா, வர்ற வருமானத்தை மத்த செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனா, சொந்த வீட்டுக்கு நாங்க எங்கே போறது? அதனாலதான், அமைச்சரை சந்திச்சு மனுக்கொடுத்தோம். மறுநாளே எங்களுக்குச் சொந்தமா வீடு கிடைச்சிடுச்சு. இன்ப அதிர்ச்சியா இருக்கு. மாற்றுத் திறனாளியான என் மகள் செல்ல சிரமப்படக் கூடாதுனு தரைத்தளத்திலேயே வீட்டை ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. இந்த உதவி போதும், என் மகள்களை எப்பாடுபட்டாவது படிக்க வச்சு, நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்துருவேன்” என்றார் நம்பிக்கை பெற்றவராக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.