சாலை விபத்துக்களே உடற்காயத்துக்கான பெரும் காரணமாக விளங்குகிறது. பெரும்பாலான காயங்கள் நிரந்தர அல்லது தற்காலிகமானதாகவும், சில மரணங்களுக்கும் காரணமாகின்றன. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 5 மில்லியன் பேர் காயங்களால் மரணம் அடைகின்றனர். இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் காயங்களால் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் மரணம் அடைகின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ம் தேதி, ’உலக உடற்காய தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

சாலை விபத்து, விழிப்புணர்வு நாடகம்

மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரைப் பாதுகாத்து, உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே ’உலக உடற்காய தினம்’ அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு, தூத்துக்குடி நகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது மூன்று இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது மற்றொரு பகுதியில் இருந்து வந்த காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்காமல் சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும், அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் வந்து விபத்தில் காயமடைந்த அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டன.

விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டல்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்டால் காயமடைந்தவரைக் காப்பாற்றுவதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், “விபத்து யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். அதனால், விபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவே இந்த விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் அனைவரும் சாலை விதிகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு விபத்து நடந்தால் அதில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 378 பேரும், கடந்த 2020-ம் ஆண்டில் 344 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த ஆண்டில் தற்போது வரை 278 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

40 சதவிகித உயிரிழப்புகள் சாலை விதிகளை முறையாகக் கடைபிடிக்காததன் காரணமாகவே ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும். இந்த இரண்டையும் கடைபிடித்தாலே சாலை விபத்துகள் மரணம் ஏற்படுவதைத் தடுக்கமுடியும்.

விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு பொது மக்கள் உதவ வேண்டும் என்பதற்காகவே, அரசு கடந்த 2014-ம் ஆண்டு ’குட் சமாரிட்டன் சட்டம்’ (Good Samaritan laws) என்ற சட்டத்தை இயற்றியிருக்கிறது. இதன்படி, விபத்தில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்துடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கலாம். அவ்வாறு உதவுபவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் எதையும் மருத்துவமனையில் தர வேண்டியதில்லை. அதே போல போலீஸாரும் கேட்க மாட்டார்கள்.

முதலுதவி குறித்து போலீஸாருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி

பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலீஸ் கேஸ், சாட்சி சொல்லுதல் என அச்சப்பட்டு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை. உதவி செய்யாவிட்டாலும்கூட உடனடியாக அவசர சிகிச்சைக்கான இலவச தொலைபேசி எண் 108, இல்லையென்றால் காவல்துறையின் இலவச அவசர உதவி எண்ணான 100-ஐ அழைத்துத் தகவல் சொல்லலாம்” என்றார்.

இதையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்வதன் முக்கியத்துவம், முதலுதவி செய்யும் முறை குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி அவசர மருத்துவத்துறை மருத்துவர்கள் போலீஸாருக்கு மின்திரை மூலமாக விளக்கப் பயிற்சி அளித்தனர். அதில், “விபத்தில் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் உட்பட எதையும் சாப்பிடுவதற்கோ, குடிப்பதற்கோ கொடுக்கக்கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடலில் அடிபட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் காயத்தை சுத்தமான துணியால் கட்டி அழுத்தம் கொடுத்துக் கட்டவேண்டும். ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் ரப்பர் அல்லது நைலான் கயிற்றால் கட்டக்கூடாது.

விழிப்புணர்வு நாடகம்

Also Read: மயிலாடுதுறை: முகக் கவசம் அணிவதன் அவசியம் – மியூரல் முறை ஓவியங்களால் விழிப்புணர்வு!

கை அல்லது கால் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தால் அந்த துண்டிக்கப்பட்ட பாகத்தை சுத்தமான துணியால் மூடி, அதனை தண்ணீர் புகாமல் ஒரு பாலீத்தின் பையில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒரு பெட்டியில் அல்லது வேறு ஒரு பாலீத்தின் பையில் போட்டு வைக்க வேண்டும். தலையில் காயம் ஏற்பட்ட நபரை அநாவசியமாக அசைக்க வேண்டாம். வாய் மற்றும் மூக்குப் பகுதியில் ரத்தக்கசிவு ஏதேனும் இருந்தால் அடிபட்டவரை ஒரு பக்கமாகச் சாய்த்தவாறு படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நேரம் மிகப் பொன்னானது. எனவே, எவ்வளவு விரைவாக சிகிச்சைக்கான அனுமதிக்க முடியுமோ அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.