அதிமுக-வின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “இந்த அதிமுக இயக்கம், எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது என்று கூறுவதைவிட, தீயசக்தி கருணாநிதியிடம் கணக்கு கேட்டதினால் வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆருக்காக அன்றிருந்த அனைத்து தரப்பு மக்களாலும், எம்.ஜி.ஆரின் தொண்டர்களாலும் தொடங்கப்பட்டதுதான். அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவருடைய மறைவிற்குப் பிறகு அம்மா அவர்களால் இந்த இயக்கம் கட்டிக்காக்கப்பட்டு வந்தது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்த பெருமை அதிமுகவையே சாரும். அப்படிப்பட்ட இயக்கம் இன்று 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 50 ஆண்டுகளில் பல வெற்றிகளையும், சில தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், அது பெரிதும் அல்ல.

எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சி.வி.சண்முகம்

2021 சட்டமன்ற தேர்தலில் நாம் அடைந்த தோல்வியைக் காட்டிலும் 1996-ல் படு மோசமான தோல்வியை நாம் சந்தித்திருக்கிறோம். அப்படிப்பட்ட தோல்வியில் இருந்தே மீண்டெழுந்து, மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொண்டு வந்த பெருமை அம்மாவையும், அதிமுக தொண்டர்களையுமே சேரும். இந்தத் தோல்வி என்பது நிரந்தரம் இல்லை. ஆகவே, எம்.ஜி.ஆர்., அம்மா-வின் தொண்டர்கள் இருக்கும் வரை; இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை; நூறு கருணாநிதி வந்தாலும் சரி… ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி… எத்தனை துரோகிகள் வந்தாலும் சரி… இந்த அதிமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஏதும் செய்துவிட முடியாது. இந்த இயக்கம், எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்தியிருக்கிறது. துரோகிகளையும் சந்தித்திருக்கிறது.

`இந்த இயக்கம் எங்களால் தான் வளர்ந்தது. எங்களை நம்பி தான் இந்த இயக்கம் உள்ளது. நாங்கள் இருந்தால் தான் இந்த இயக்கம் இருக்கும்’ என்று சொல்லி துரோகம் இழைத்துச் சென்றவர்கள் எல்லாம், நான்கு நாள்கள்கூட அந்தக் கடையை நடத்தமுடியாமல், மீண்டும் அம்மாவிடம் வந்து சரணாகதி அடைந்த நிலையைதான் நாம் பார்த்திருக்கிறோம். இவர்களெல்லாம் இன்று எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை.

Also Read: Tamil News Today: அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம்

சசிகலா

நாஞ்சில் மனோகரன், நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரத்தை விட… நாம் இன்று சந்திக்கும் சில துரோகிகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் கிடையாது. அவர்களாவது எம்.ஜி.ஆருடன் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள். அதற்காக நானே தான் அதிமுக என்று சொன்னால், அதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

எம்.ஜி.ஆர்., அம்மா, இரட்டை இலை உள்ள இடத்தில் தான் அதிமுக தொண்டன் இருப்பான். நிஜத்திற்கே இங்கு வேலை இல்லை… நிழலுக்கு இனி இங்கே என்ன வேலை..? ஒரு சசிகலா அல்ல, ஓராயிரம் சசிகலா வந்தாலும் இந்த அதிமுக இயக்கத்தை துளியும் அசைத்துப் பார்க்கமுடியாது.

உங்களால் துவங்கி வைக்கப்பட்ட அமமுக-வையே உங்களால் நிலை நிறுத்த முடியாதபோது, எங்களின் அதிமுக-வை காப்பாற்றிவிட போகிறீர்களா..! எங்கள் அதிமுக-விற்கு எம்.ஜி.ஆர்., அம்மா இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எங்களுக்குத் தேவையே இல்லை. ஆகவே என்ன நாடகம் நடத்தினாலும்… எந்த வேஷம் போட்டாலும்… எந்த உருவத்தில் வந்தாலும்… இன்னும் ஒருமுறை அதிமுக தொண்டர்கள் ஏமார்ந்துவிடத் தயாராக இல்லை.

Also Read: “ நீரடித்து நீர் விலகாது; நமக்குத் தேவை ஒற்றுமைதான்” – எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு

சி.வி.சண்முகம்

Also Read: “ நீரடித்து நீர் விலகாது; நமக்குத் தேவை ஒற்றுமைதான்” – எம்ஜிஆர் தோட்டத்தில் சசிகலா பேச்சு

50வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நாம், ஒரு சபதம் எடுக்க வேண்டும். எதிரிகள் மட்டுமல்ல, துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடு இனி அமையவேண்டும். ‘எனக்குப் பின்னாலும், இந்த இயக்கம் நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும்’ என்று அம்மா சொன்னது போலவே அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றியைப் பெறவேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.