அமெரிக்காவின் அறிவியல் புனைவு எழுத்தாளர் ஃப்ராங்க் ஹெர்பர்ட்டின் புகழ்பெற்ற வாக்கியம் இது. முதல் உலகப்போரில் ஜெர்மனியின் கூட்டாளிகள் கடைசியில் கைவிட்டு போரை பலவீனப்படுத்த முயன்றாலும், அதன் எதிரிகளோ பலம் சேர்த்தார்கள். பிரிட்டன், பிரான்ஸ் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, ரஷ்யாவும் ஜெர்மனிக்கு கடும் சவாலாகத்தான் இருந்தது.

மூன்றாம் எதிரி – முதலாம் உலகப்போரில் ரஷ்யா!

பரந்த பூகோள அமைப்பின் காரணமாக ரஷ்யா உலகின் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது. அதன் மக்கள்தொகை காரணமாக ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ராணுவ சக்தியை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருந்தது. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்ய ராணுவம் ஐரோப்பாவில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தது. நெப்போலியன் போர்களில் நெப்போலியனை தோற்கடிப்பதில் ரஷ்யர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மாஸ்கோவிலிருந்து பின்வாங்கிய போது ரஷ்யர்கள் நெப்போலியனின் பலம் வாய்ந்த கிராண்ட் ஆர்மியை வீழ்த்தினர். 1848-ல் ஐரோப்பாவில் உண்டான பல புரட்சிகளை தோற்கடிக்க ரஷ்ய ராணுவமே தலையிட்டது.

இத்தனை படை பலத்தோடு பெரியதாக இருந்தாலும், 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்ய ராணுவம் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. மாறாக ஜெர்மனியின் ஒருங்கிணைப்பும் தொழில்மயமாக்கலும் ஐரோப்பாவில் அதுவரை ஆதிக்கம் செலுத்திய சூப்பர் பவர்களின் சமநிலைகளை அப்படியே மாற்றியமைத்தது.

முதலாம் உலகப்போர்

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யர்கள் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையைக் கொண்டிருந்தாலும் ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் சிறியதாகவே இருந்தது. ஜெர்மனியைப் போல நவீன ஆயுதங்களுடன் தனது இராணுவத்தை பயிற்றுவித்து பலப்படுத்தும் திறமையும் ரஷ்யாவிடம் இருக்கவில்லை. எனவே என்னதான் அளவில் பெரிய படையை கொண்டிருந்தாலும், பலத்தில் ரஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போலவே ரஷ்யாவும் Plan G, Plan-19 எனும் இரண்டு திட்டங்களை வைத்திருந்தாலும் அவை ஜெர்மனியின் துல்லியமான The Schlieffen திட்டத்தின் முன்னால் தவிடுபொடியானது. ஒப்பீட்டளவில் இழப்பு விகிதம் ஜெர்மனி மற்றும் பிரான்சை விட குறைவாக இருந்தாலும், 3 மில்லியனுக்கும் அதிகமான உயிர் இழப்புகளுடன் ரஷ்யாவும் முதல் உலகப் போரில் மிகப்பெரிய சேதத்தை எதிர் கொண்டது.

Also Read: ஐரோப்பா உண்மையிலேயே கனவு உலகமா? நிழலும், நிஜமும் – 1

ஜெர்மனி சறுக்கிய புள்ளி எது?

முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேபோன இந்த யுத்தத்தை நிறுத்தி ஒரு சமாதான உடன்படிக்கைக்கு செல்லலாம் என ஒரு கட்டத்தில் ஜெர்மன் பாராளுமன்றம் முடிவு செய்தது. ஆனால், அப்போது ஜெர்மனியின் ஆட்சியை சர்வாதிகாரமாக கைகளில் எடுத்திருந்த ராணுவம் அதை அலட்சியம் செய்தது. இல்லையென்றால் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருந்திருக்கும். விதி யாரை விட்டது. அமெரிக்காவின் 28-வது ஜனாதிபதி உட்ரோ வில்சன், 1914-ல் ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் வெடித்தபோது அமெரிக்கா நடுநிலை வகிப்பதாக உறுதியளித்தார்.1915-ல் பிரிட்டனை தனிமைப்படுத்த முயற்சித்த ஜெர்மனி, பிரிட்டிஷ் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் எல்லைக்குள் நுழைந்த அனைத்து கப்பல்களுக்கும் எதிராக கட்டுப்பாடற்ற தாக்குதல்களை அறிவித்தது. ஆனால் இந்த shoot on sight-ன் போது க்ராஸ் ஃபயரிங்கில், அந்தப் பகுதிக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் தாக்கப்பட்டால், ஒதுங்கி இருக்கும் அமெரிக்காவை வீணே சண்டைக்குள் இழுத்து விடக் கூடும் என்பதை ஜெர்மனி கருத்தில் கொள்ள தவறி விட்டது.

U-Boats

அந்தக் காலத்திலேயே தொழில்நுட்பத்தில் சிறந்ததாக இருந்த ஜெர்மனி பயன்படுத்திய மற்றொரு ராணுவத் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்று U-Boats. 200 அடிக்கு கீழே கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் யு-படகுகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், நேச நாடுகளின் கடற்படைகளை கதிகலங்க வைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக ஜெர்மனியின் வெற்றிக்கு உதவி செய்த இந்த யு-படகுகள் தான் இறுதியில் அவர்களின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

பிரிட்டனுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த கப்பல்களில் பல கப்பல்களை இந்த U-போட்கள் தாக்கி அழித்தன. இப்படியே விட்டால் ஒரு கட்டத்தில் பிரிட்டன் கடும் நெருக்கடியை சந்திக்க நேரும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டது. பிரிட்டிஷ் கடற்பரப்பிற்குள் வரும் அனைத்துக் கப்பல்களையும் Shoot at Sight உத்தரவு பிறப்பித்த இரண்டாவது நாளே ஜெர்மனியின் வீழ்ச்சிக்கான விதையும் விதைக்கப்பட்டது.

பிரிட்டனுக்கு கோதுமைகளை ஏற்றி வந்த Housatonic என்ற அமெரிக்க கப்பலை தாக்கி மூழ்கடித்தது ஜெர்மனின் U படகுகள். பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவை தூண்டிவிட தக்க சந்தர்ப்பம் பார்த்து பதுங்கி இருந்த பிரிட்டன், இந்த தாக்குதலுக்கு பின்னர் ரகசியமாக ஜெர்மனியை உளவு பார்த்து, அமெரிக்காவுக்கு தகவல் சொன்னது. அமெரிக்கா ஜெர்மனியுடன் போர் தொடுத்தால், உடனடியாக அமெரிக்காவை தாக்கும் படி மெக்ஸிகோவுக்கான ஜெர்மன் தூதர் மூலம் ஜெர்மனி அனுப்பிய ரகசிய செய்தியை, பிரிட்டன் உளவுத்துறை மோப்பம் பிடித்து அமெரிக்காவிடம் போட்டுக் கொடுத்தது. பொறுமை இழந்த அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரசிடம் “We need a war to end all wars, that would make the world safe for democracy” என அப்போது வைத்த கோரிக்கைதான் முதலாம் உலகப்போரின் க்ளைமேக்ஸ். அமெரிக்கா தன் கண்டத்தை விட்டு வெளியே பங்கேற்ற முதல் யுத்தம் இதுதான். இதற்கு பின்னர் வியட்நாம், ஈராக், சிரியா, கியூபா, ஆப்கானிஸ்தான் எனப் பட்டியல் நீண்டது!

Also Read: யூரோ டூர் – 9 |உலகப் போரில் ஜெர்மனி தனித்து நின்றதும், இங்கிலாந்து, ரஷ்யா கூட்டு சேர்ந்ததும் ஏன்?

ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி என ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சண்டையில் சக்கையாக பிழியப்பட்டு கடைசியில் சரணடைய, புதிய சக்தியாக களத்தில் குதித்த அமெரிக்கா ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. மூன்றரை வருடப் போருக்குப் பிறகு சோர்வுக்கும், நெருக்கடிக்கும் ஆளான ஜெர்மனியை பிரிட்டன், அமெரிக்கா என இரு வல்லரசுகள் சுற்றி வளைத்தன. அமெரிக்கா மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தப் போரில் ஜெர்மனி ஜெயித்திருக்கும். ஏனெனில் கடைசியாக தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கும் நிலையில் பிரிட்டன் இருந்தபோதுதான் கதையில் கடைசிக்கட்ட ட்விஸ்ட்டான அமெரிக்காவின் என்ட்ரி, அத்தனையையும் கலைத்துப்போட்டது. தினமும் பத்தாயிரம் ராணுவ வீரர்கள் வீதம் அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கினார்கள். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்க ராணுவம் பிரெஞ்சு எல்லையில் குவிக்கப்பட்டது.

kaiser wilhelm

சரணடைந்த ஜெர்மனியும் முடிவுக்கு வந்த யுத்தமும்!

நிலைமை தனக்கு பாதகமாக மாறுவதை உணர்ந்த ஜெர்மனிக்கு இன்னொரு போர் மூலமே இதிலிருந்து வெளியே வரமுடியும் என்பது தெளிவாக புலப்பட்டது. ஆயிரக்கணக்கான ஜெர்மனியர்கள் ஏற்கனவே அகழிப் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற மேற்கு முன்னணியில் போராட நிர்பந்திக்கப்பட்டனர். பிரிட்டனின் புதிய கடற்படை ஜெர்மனியின் கடற்பரப்பை முற்றுகையிட்டது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானங்கள் ஜெர்மன் வான்பரப்பை வளைத்துப் பிடித்தது. 400-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் பீரங்கி டேங்கர்கள் ஜெர்மன் தரைப்படையை தாக்கத் தொடங்கியது.

இறுதி ஆட்டமாக ஆரம்பமானது The battle of Amiens. 8 ஆகஸ்ட் 1918-ல் தொடங்கி நூறு நாட்கள் நீடித்த இந்த உக்கிரமான போர், ஜேர்மன் படைகளுக்கு எதிரான நேச நாடுகளின் மாபெரும் வெற்றியாகவும், முதல் உலகப் போரின் முடிவின் தொடக்கமாகவும் குறிக்கப்பட்டது. ‘ஜெர்மன் இராணுவத்தின் கருப்பு நாள்’ என்று வர்ணிக்கப்படும் இந்த யுத்தம் முதல் உலகப் போரின் இறுதி திருப்புமுனையாக அமைந்தது.

பிரிட்டிஷ், ஆஸ்திரேலியன், கனடியன், அமெரிக்கன் மற்றும் பிரெஞ்சு ராணுவம் அதி நவீன ஆயுதங்களுடனும், போர் விமானங்களுடனும் ஜெர்மனியை சுற்றி வளைத்து ஒரு நாளில் மட்டுமே சுமார் 7 மைல் வரை முன்னேறியது. ஜெர்மன் துருப்புகள் துவண்டு போகத் தொடங்கின. பசி, அயர்ச்சியோடு சேர்த்து மனச்சோர்வும் அடைந்து, வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கில் சரணடைய ஆரம்பித்தனர். அதுவரை அடித்து ஆடிய ஜெர்மனி மெல்ல மெல்ல பின்வாங்க ஆரம்பித்தது. ஜெர்மன் படைத்தளபதி Wilhelm Ludendorff, “ராணுவ நடவடிக்கை இனிமேலும் பலன் தராது! ஆகையால் போர் நிறுத்த வழிகளை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்ற அவசரத் தகவலை ஜெர்மன் பேரரசர் kaiser-க்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி வூட்ரோ வில்சனுக்கு சமாதான கோரிக்கையை முன் வைத்தது ஜெர்மனி.

Also Read: யூரோ டூர் – 5 | பிரிட்டனோடு ஜெர்மனி ஏன் மோதியது, உலகின் முதல் போர் எப்படி இருந்தது?!

இதற்காகவே காத்திருந்த அமெரிக்கா, ஜெர்மனி தான் ஆக்கிரமித்த அனைத்து பிரதேசங்களிலிருந்தும் வெளியேற வேண்டும் என்றும், ஜெர்மனின் பேரரசர் ஆட்சி துறக்க வேண்டும் என்றும் பதில் நிபந்தனை வைத்து, சமாதானப் பேச்சுக்கு உடன்பட்டது.

முதல் உலகப்போரில் அமெரிக்கா

மில்லியன் கணக்கான உயிர் இழப்புகள், வறுமை, பசி, பட்டினி என விரக்தியடைந்த ஜெர்மன் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஜெர்மனியில் புரட்சி வெடித்தது. பேரரசர் கைசர் ஆட்சியை கைவிட, ஜெர்மன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. 11 நவம்பர் 1918, சரியாக காலை 11 மணிக்கு நேச நாடுகளுடனான சமாதான உடன்படிக்கையில் ஜெர்மனி கையொப்பமிட்டது.

10.59 வரையிலுமே தொடர்ந்த சண்டையில் அமெரிக்க இராணுவ சார்ஜன் Henry Nicholas John Gunther ஒரு ஜெர்மானிய சிப்பாயின் இயந்திர துப்பாக்கிக்கு இரையானர். அதுவே முதல் உலகப் போரில் கொல்லப்பட்ட கடைசி இராணுவ உயிர். அத்தோடு ஜெர்மன் அமைதியானது… அடுத்த ஒரு 20 வருடங்களுக்கு!

பாரிஸ் அமைதி மாநாடு பிரெஞ்சு தலைநகருக்கு வெளியே உள்ள வெர்சாய்ஸ் அரண்மனையில் தொடங்கியது. எதிர்கால சர்வதேச மோதல்களைத் தீர்க்க நாடுகளின் பொதுவான ஒரு கூட்டணியை உருவாக்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டானர். இரண்டாம் உலகப்போருக்கு அடித்தளமிட்ட வெர்சாய்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியில் மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்தது. இந்த ஒப்பந்தத்தின்படி ஜெர்மனியின் இராணுவ அளவு கட்டுப்படுத்தப்பட்டது. போரினால் நேச நாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கான இழப்பீடாக மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. ஜெர்மன் அதன் எல்லைகளை இழந்தது. ஜெர்மனின் காலனிகள் வெற்றி பெற்றவர்களால் கைப்பற்றப்பட்டன.

முதலாம் உலகப் போர்

ஐரோப்பாவின் எல்லைகள் மீண்டும் வரையப்பட்டன. ஆஸ்திரியா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா மற்றும் ரோமானியா போன்ற நாடுகள் ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசின் சிதைந்த சாம்பலில் இருந்து உருவாகின. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்நிய ஆட்சியில் இருந்த போலந்து விடுதலை பெற்றது. ஒட்டோமான் பேரரசு சிதைந்து பல புதிய மாநிலங்கள் ஐரோப்பிய கட்டுப்பாட்டின் கீழ் மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்டன. அதே வேளை, ஐரோப்பாவில் இன்னுமொரு ரத்த ஆறு ஓடப்போகும் யுத்த நிலத்துக்கான விதைகளும் விதைக்கப்பட்டன.

பத்து மில்லியன் இராணுவ உயிர்கள், 7 மில்லியன் பொதுமக்களின் உயிர்களை இரையாக்கி, 21 மில்லியனுக்கும் அதிகமான காயப்பட்ட உடல்களை சிதைத்து, ஐரோப்பாவின் மிகப்பெரும் பிரதேசங்களை அழித்து, பழைய பேரரசுகளை ஒழித்து, புதிய நாடுகளை உருவாக்கி, முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

எல்லா யுத்தங்களும் கலகங்களும் ஏதோ ஒருவரின் ஈகோவாலும், பிடிவாதத்தாலும், பேராசையாலும் ஆரம்பமாகி, அவர் சார்ந்த அனைவருக்குமே பேரிழப்பை ஏற்படுத்திச் செல்கிறது. முதல் உலகப் போரில் நாடுகளின் வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும் காரணகர்த்தாவாக இருந்த சில பெருந்தலைகளை அடுத்த வாரம் பார்க்கலாமா?

யூரோ டூர் போவோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.