`பிக்பாஸ்’ தொடங்கப்பட்ட பிறகு, இன்னும் அதிக விறுவிறுப்புடன், பரபரப்புடன் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் `சர்வைவர்’ நிகழ்ச்சி. காடர்கள் அணியினர் தொடர்ந்து வெற்றியைத் தட்டிக்கொண்டிருக்கின்றனர். அந்த அணியின் மிகப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறார் உமாபதி. இவர் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன்.

நிகழ்ச்சியில் அப்பா, தனக்கு அனுப்பிய கடிதம் கண்டு உமாபதி நெகிழ்ந்தார். மகனுக்கு கிடைத்திருக்கும் நல்ல பெயர் ஒரு பக்கமும், சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் `விநோதய சித்தம்’ பட வெற்றி இன்னொரு பக்கமுமாகப் பூரிப்பில் இருக்கும் தம்பி ராமையாவிடம் பேசினோம்.

தம்பி ராமையா

நான் நடிச்ச `சாட்டை’, `அப்பா’, `நாடோடிகள் 2′ படங்களைப் பலரும் கொண்டாடினாங்க. `விநோதய சித்தம்’ படத்துல கமிட் ஆனபோது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வெறும் 19 நாள்கள்ல எடுக்கப்பட்ட படம் `விநோதய சித்தம்’. ஆனா, மக்கள் இந்தளவுக்கு தலையில வெச்சுக் கொண்டாடுவாங்க, இவ்வளவு உயரத்தைத் தொடும்னு யாரும் எதிர்பார்க்கலை. இந்தப் படம் என்னை அடுத்தகட்டத்தை நோக்கி உயர்த்தும்ங்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. அடுத்து தீபாவளிக்கு ரிலீஸாகும் `எனிமி’ படத்துல விஷாலுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். அடுத்து பிரபு சாலமன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்றேன். சுந்தர்.சி நடிக்கும் ஒரு படம், சசிகுமார் கூட ராஜவம்சம், டைரக்டர் சசியோட ஒரு படம்னு பிசியா இருக்கேன்…” என்றவர், மகனுக்கும் தனக்குமான உறவின் அழுத்தம் பகிர்கிறார்.

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. மூத்தவ விவேகாவுக்கு கல்யாணமாயிடுச்சு. மகள் வழி பேரக்குழந்தைங்களைப் பார்த்துட்டேன். உமாபதி இளையவன். நான் கோபக்கார அப்பாவின் மகன். ஒரு அப்பா எப்படி இருக்கக் கூடாதுங்கிறதையும், எப்படி இருக்கணும்ங்கிறதையும் நான் அவர்கிட்டருந்துதான் கத்துக்கிட்டேன். எனக்கு எங்கப்பாதான் ஹீரோ. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுங்கிறது உணர்த்துதலின் அடிப்படையில இல்லாம, உணர்தலின் அடிப்படையில இருக்கணும்னு நினைக்கிற ஆள் நான். எங்கப்பா எனக்கு உணர்த்தலை. நான் உணர்ந்தேன். அதுதான் என் மகன் விஷயத்துலயும் நடக்கணும்னு தெளிவா இருந்தேன். நான் உணர்த்தி எதையும் அவன் புரிஞ்சுக்குற சூழலுக்குத் தள்ளக் கூடாதுனு நினைச்சேன். அப்படி உணர்த்தும்போது `இவன் என்ன உணர்த்துறது, நான் என்ன உணர்றது’னு பிள்ளைங்க நினைக்கக்கூடும்.

உமாபதி மற்றும் தம்பி ராமையா

Also Read: சர்வைவர் – 33 | பிரியாணி, பூஜை, புது டிரஸ் இருக்கட்டும் – இனி போட்டின்னு என்னென்ன வைக்கப் போறாங்களோ?

உமாபதி மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டவன். உயரத்துல அவன் அவங்கம்மா மாதிரி. சாகசங்கள் பண்ணப் பிடிக்கும். சின்ன வயசுலேருந்தே அவனுக்கு ஃபிட்னஸ் விஷயத்துல ஈடுபாடு அதிகம். எவ்வளவு பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் புத்திசாலியா இருந்தாலும் அதையெல்லாம் செயல்படுத்த அடிப்படையா உடல்பலம் வேணும்னு நான் அடிக்கடி சொல்வேன். உமாபதி, இன்டர்நேஷனல் ஃபைட் மாஸ்டர் ஆகுறதுக்காகத் தன்னைத் தயார்படுத்திட்டிருக்கான்னு அவன் நண்பர்கள் சொல்லிதான் எனக்கே தெரியும். அவன் எந்த முடிவெடுத்தாலும் சரியா இருக்கும்னு ஸ்கூல் படிக்கிற காலத்துலேருந்து நிரூபிச்சிட்டிருக்கான். சர்வைவர் ஷோவுல கலந்துக்கிற வாய்ப்பு வந்தபோது அவன் போறேன்னு சொன்னப்ப அவனுடைய முடிவு சரியா இருக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

நான் எத்தனையோ டைரக்டர்களோட டிராவல் பண்ணிட்டிருக்கேன். ஆனா, இதுவரை என் மகனுக்காக யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப் போனதில்லை. அவன் தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கணும்ங்கிறது என் விருப்பம்.

என் நிழல்ல இளைப்பாறணும்னோ, என் பெயரை யூஸ் பண்ணி வாய்ப்பு தேடணும்னோ அவனும் என்னிக்கும் நினைச்சதில்லை. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கான். என் மகனை ஹீரோவா வெச்சு `மணியார் குடும்பம்’னு ஒரு படம் எடுத்தேன். நல்ல படம் எடுத்த எனக்கு, அதை சரியா மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கத் தெரியலை. நான்தான் தப்பு பண்ணிட்டேனா… உதவி இயக்குநரா சேர்த்துவிட்டிருக்கலாமோ… நாம சரியாதான் அவனை கைடு பண்றோமான்னெல்லாம் யோசிச்ச நாள்கள் உண்டு.

தம்பி ராமையா, விஜய் சேதுபதி, உமாபதி மற்றும் மனோபாலா

Also Read: “அந்த எதிர்பார்க்காத நேரத்துலதான் அப்பா `சர்வைவர்’ ஷோவுக்கு கிளம்பினார்!” – பெசன்ட் ரவி மகள்

என் தம்பிக்கு உமாபதியை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்கலாமானு ஒரு ஐடியா இருந்தது. அப்ப என் தம்பிகிட்ட உமாபதி, மூணு வருஷம் டைம் கேட்டான். `மூணு வருஷத்துக்குள்ள நான் ஏதாவது பண்ணுவேன். அப்படிப் பண்ணலைனா நீங்க சொல்றதை நான் கேட்கறேன்’னு என் கண் முன்னாடி டைம் கேட்டிருக்கான். சர்வைவர் ஷோ உமாபதிக்கான ஸ்பேஸ். அங்கே ஏனோதானோனு விளையாட முடியாது. நெப்போட்டிஸம் எல்லாம் அங்கே செல்லுபடியாகாது. அது அவனுக்கும் புரிஞ்சிருக்கு. `எங்கப்பாவோட பேர் எனக்கு விசிட்டிங் கார்டுதானே தவிர, கிரெடிட் கார்டு இல்லை’னு ஷோவுல அவன் சொன்னதை ரொம்ப ரசிச்சேன்.

சர்வைவர் ஷோவுக்குப் போனபிறகு, அவன் 15 கிலோ வெயிட் குறைஞ்சிருக்கிறதா கேள்விப்பட்டேன். டாஸ்க் ஜெயிச்சாதான் சாப்பாடு, கடுமையான போட்டினு ரொம்பவே கஷ்டப்பட்டுதான் எல்லாரும் விளையாடுறாங்க. அவன் கிளம்பின அன்னிலேருந்து அவங்கம்மாவுக்குத்தான் சரியான சாப்பாடு, தூக்கமில்லை. புள்ளையை நினைச்சுக் கவலைப்பட்டுகிட்டே இருக்காங்க. கால்ல அடிபட்டிருந்ததைப் பார்த்துட்டு ரொம்ப எமோஷனலாயிட்டாங்க. ஊட்டி ஊட்டி வளர்த்த பையன், உடம்பு சிதைஞ்ச நிலையில இருக்குறதை அம்மாவா அவங்களால தாங்கிக்க முடியலை. சர்வைவர் ஷோ இப்படியெல்லாம் இருக்கும், ஒரு தீவுல கொண்டுபோய் விடுவாங்க, டாஸ்க் பண்ணாதான் சோறு, உடம்பு குறையும்னு எதுவும் அவங்கம்மாவுக்குத் தெரியாது. அவன் வெயிட் குறைஞ்சதைப் பார்த்தப்போ, பதறிட்டாங்க. ஆனா வலி இல்லாம எதுவும் கிடைக்காதுனு நம்பறவன் நான். சர்வைவர் ஷோ இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சு, விரும்பித்தான் உமாபதி போயிருக்கான். சரியா விளையாடிட்டிருக்கான்.

சர்வைவர் நிகழ்ச்சி

Also Read: “என்னை திட்டணும்னாகூட திட்டுங்க; ஆனா..?!” – `சர்வைவர்’ கதை சொல்லும் பார்வதி

சர்வைவர் ஷோவுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி, உமாபதிகிட்ட `உன்னை உனக்குத் தெரியும். நீ போற பாதை உனக்குத் தெரியும். நல்லவன்ற ஒற்றைத் தகுதியோடு திரும்பி வா… வெற்றி, தோல்வி, முதலிடம், இரண்டாம் இடம்ங்கிறதெல்லாம் குழந்தைங்களுக்குப் பெயர் வைக்கிறதைப் போல. முதலிடத்தைப் பிடிக்கணும்ங்கிற அவசரத்துல உன்னை இழந்துடாதே…’னு சொல்லி அனுப்பி வெச்சேன். என் மகன் தன் அடையாளத்தைத் தேடி அங்கே போயிருக்கான். மக்கள் மத்தியில அவனுக்கு நல்ல பெயர் இருக்கிறதா கேள்விப்படுறேன். ஒரு படத்துல நடிச்சபோது அவனைத் தெரியாதவங்களுக்கும் இந்த ஷோ மூலமா அவன் யார்னு தெரிய வந்திருக்கிறதைப் பார்க்கும்போது அப்பாவா எனக்கு சந்தோஷம்.

`குடும்பத்தை நான் பார்த்துக்குறேம்ப்பா… எனக்காக நீங்க பட்ட கடன்களை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க அடிக்கடி சொல்றது மாதிரி பிடிச்சதைச் செய்யுங்க… பிடிச்சவங்களோட செய்யுங்கப்பா’னு சொல்லிட்டுப் போயிருக்கான். இனிமே அப்படி பிடிச்சதை, பிடிச்சவங்களோட செய்யலாம்னு இருக்கேன்… இதைவிட வேற என்ன வேணும்…” நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் முடிக்கிறார் தம்பி ராமையா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.