மணப்பாறை… முறுக்கிற்கு மட்டுமல்ல, மாட்டுச் சந்தைக்கும் மிகப் புகழ்பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் மாடு வாங்கவேண்டும் என்றால், கண்முண்ணே வந்து நிற்கும் இடம் ’மணப்பாறை மாட்டுச்சந்தை’தான். வட மாநிலங்களில் உள்ளவர்களுக்குக்கூட, மணப்பாறை மாட்டுச் சந்தையைப்பற்றி தெரியாமல் இருக்காது. மாடு, ஆடு வாங்க வேண்டுமென்றால் இதுதான் சரியான இடம் எனச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

“மணப்பாறை மாடுகட்டி… மாயவரம் ஏறுபூட்டி…” எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தான் படைத்த திரைப்படப்பாடல் வரியில் எழுதும் அளவிற்குப் பிரசித்தி பெற்றது இச்சந்தை. இந்தச் சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம்வரை நடைபெறுகிறது.

மாட்டுச்சந்தை

இந்தச் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடு மற்றும் ஆடுகளை வாங்கிச்செல்வார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே சின்னச் சின்னதாக நடைபெற்று வந்த மாடுகளின் விற்பனை அப்படியே பெரும் சந்தையாக உருவானது.

இங்கு கிடைக்கும் மாடுகளின் தரம், விலை ஆகியவை இந்தச் சந்தையின் புகழை மாநிலங்களை தாண்டியும் பறைசாற்ற பலரும் இந்த மாட்டுச் சந்தையை தேடி வர ஆரம்பித்து, தற்போது மணப்பாறை மாட்டுச் சந்தை தவிர்க்க முடியாத இடமாக மாறியுள்ளது. ஒரு புதன்கிழமை காலையில் அந்த மாபெரும் மாட்டுச் சந்தையில் காலை நேரத்தில் ஆஜரானோம். சுமார் 12 ஏக்கரில் அமைந்துள்ள இந்தச் சந்தையில் எங்குத் திரும்பினாலும் மனிதத் தலைகளைவிட மாடுகள்தான் அதிக எண்ணிக்கையில் கண்ணில்பட்டன.

மாடுகள்

கொரோனாவால் கடந்த ஓராண்டாக களையிழந்து வந்த இந்த மாட்டுச் சந்தை, கடந்த நான்கைந்து மாதமாக மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. வண்டி பூட்டுவதற்கான மாடு, உழவு செய்வதற்கான மாடு, ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் மாடு, நாட்டுமாடு, பசு, எருமைமாடு, ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள், கன்றுக்குட்டி என அனைத்து வகையான மாடுகளும் இருந்தன. மாடுகள் மட்டுமில்லாமல் ஆடு, குதிரையும்கூட விற்பனைக்காக அழைத்து வரப்பட்டிருந்தன.

Also Read: திருச்சி – ஊறும் வரலாறு – 14: கற்றவர்கள் தலைவணங்கும் கோயில்… காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகள்!

மாடுகள் தேர்வு, ‘அவ்ளோலாம் இல்லைங்க, இதுக்கு மேல குறைக்க முடியாதுங்க’ எனத் துண்டுக்குள் பேரம் பேசுவது என மணப்பாறை மாட்டுச்சந்தையே பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருந்தது. ஒரு பக்கம் மாடுகளின் விற்பனை நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் மாடுகளுக்கு மூக்கணாம் கயிறு கட்டுவது, லாடம் அடிப்பது, கொம்புகளைச் சீவி விடுவது போன்ற பல பணிகளும் நடந்து கொண்டே இருந்தன. கூடவே மாடுகளுக்குத் தேவையான தீவனங்களும் அந்தச் சந்தையில் கிடைப்பதால் மாட்டுச்சந்தை மிகுந்த உயிர்ப்புடன் காணப்பட்டது.

மாடுகள்

வாரந்தோறும் நடக்கும் இந்தச் சந்தையில் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். தற்போது இது குறைந்திருந்தாலும், மணப்பாறை மாடுகளை நம்பியும், மாட்டுச் சந்தையை எதிர்பார்த்தும் இருப்பவர்கள் பலர் உள்ளனர்.

மாட்டுச்சந்தை

மூன்றாயிரத்தில் ஆரம்பமாகும் மாடுகளின் விலை, 4 லட்சம் வரை தொடர்ந்தது. இதுவே தீபாவளி, பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது, கூட்டம் அலைமோதும்.

இப்படியான மாபெரும் மாட்டுச் சந்தையை சுற்றி முற்றி முழுதும் கவனித்துவிட்டு அங்கு மாடுகளை விற்பனை செய்ய வந்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த ராமநாதனிடம் பேசினோம். “வறட்சியால் மாடுகளுக்கு மேய்ச்சல் இன்றி, விற்பனை செய்வதற்காக மணப்பாறை மாட்டு சந்தைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

மாடு வாங்க வந்தவர்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு புதிதாக மாடுகள் வாங்கி, மாட்டுப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவோம். ஆனால், இந்த ஆண்டு வயது முதிர்ந்த மாட்டை விற்று நல்ல மாட்டை வாங்க வந்துள்ளோம்”என்றார்.

மாட்டுச்சந்தை

தேனியைச் சேர்ந்த விவசாயி பெருமாளிடம் பேசினோம், ”கிட்டத்தட்ட 30 வருசத்துக்கு மேல இந்தச் சந்தைக்கு வந்துக்கிட்டு இருக்கேன். நாங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். கூடவே மாடு வளக்குறது, ஆடு வளக்குறதுனு இதான் பொழப்பு. எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்து இங்க வந்துதான் நாங்க மாடுல்லாம் வாங்குறது, விற்குறது எல்லாமே. ஏன்னா, இங்க வந்தா நாம என்ன மாதிரி மாடு வாங்கலாம்னு நினைச்சிட்டு வர்றோமா அதே மாதிரி, ஆரோக்கியமா நாம எதிர்பாக்குற விலையில கிடைச்சுடும்.

மாடு விற்பனை

ஒருத்தருக்கிட்ட இல்லன்னா இன்னொருத்தருக்கிட்ட விரும்பும் மாட்டை வாங்கிடலாம். இங்க வாங்கின மாடுகள் நிச்சயம் சோடை போகாதுனு ஒரு நம்பிக்கை. இப்போ இன்னைக்கு என்னோட மாடு ரெண்டை விக்குறதுக்காக வந்துருக்கேன். பொதுவா மாடுகளை வாங்குறதுக்காகத்தான் அதிகமா இங்க வருவேன். இந்த முறை மாடுகளைக் கொடுத்துட்டு, வேற மாடுகளை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்” எனச் சொல்லி முடித்தார்.

மாட்டுச்சந்தை

தமிழ்நாட்டின் மாபெரும் சந்தையான மணப்பாறை மாட்டுச் சந்தையை காண வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை மாலை முதல் புதன் மதியம் வரை மட்டும் திட்டமிட்டு வந்துடுங்க மக்களே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.