சோனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பைடர்மேன் யுனிவர்ஸில் ஸ்பைடர்மேன் காமிக்ஸில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. ‘வெனம்’ 2018-ம் ஆண்டு வெளியாகி இந்தக் கணக்கைத் தொடங்கிவைக்க, அதன் இரண்டாம் பாகமான ‘வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்’ (Venom: Let There Be Carnage) தற்போது வெளியாகியிருக்கிறது. அடுத்து இந்த வரிசையில் ஜாரெட் லெட்டோ நடிப்பில் ‘மார்பியஸ்’ படமும், ‘கிரவென் தி ஹன்டர்’ படமும் க்யூவில் நிற்கின்றன.

Venom: Let There Be Carnage

சோனி நிறுவனம் தனக்குக் காப்புரிமை இருக்கும் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தை டிஸ்னி உருவாக்கியுள்ள மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) கதாபாத்திரங்களுடன் இணைத்து, புதிய ஸ்பைடர்மேன் படங்களை (டாம் ஹாலேன்ட் வெர்ஷன்) ஒரு கூட்டுத் தயாரிப்பாக வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு தனி ஸ்பைடர்மேன் படங்கள் இந்த டீலில் வெளியாகிவிட்ட நிலையில், மூன்றாம் பாகமான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

அதேபோல், சோனிக்கும் டிஸ்னி மார்வெல்லுக்கும் இருக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், ‘வெனம்’ போன்ற ஸ்பைடர்மேன் உலகின் கதாபாத்திரங்களும் இனி MCU-வில் உலாவும் என்ற கனவும் மார்வெல் ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறது. அந்த நீண்ட நெடுங்கனவுக்கு வலுசேர்க்கும் வகையில் வெளியாகியிருக்கிறது இந்த ‘வெனம் 2’. சர்ப்ரைஸ்!

தனக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் வெனம் எனும் ஏலியன் சிம்பியாட்டுக்கும் எட்டி பிராக்குக்கும் முட்டல் மோதல். இந்த நேரத்தில் சிறையிலிருக்கும் சீரியல் கில்லர் க்ளெடஸ் கசடி, பத்திரிகையாளரான எட்டியைச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். அடுத்தடுத்த சம்பவங்களில் எட்டி புகழடைய, க்ளெடஸ் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். அப்போது புதியதொரு ஏலியன் சிம்பியாட்டான கார்னேஜ், க்ளெடஸின் உடம்புக்குள் புகுந்துகொள்ள, அதை எட்டியும் வெனமும் எப்படிச் சமாளித்தார்கள் என்பதே படத்தின் கதை.

Venom: Let There Be Carnage

வெனமை சுமந்துகொண்டு அல்லல்படும் எட்டியாக டாம் ஹார்டி. எங்கும் தோல்வி, எதிலும் தோல்வி எட்டிக்கு இதில் கொஞ்சம் முகவரி கிடைக்கிறது. உபயம்: வெனம். முக்கியமாக, வெனமுக்கும் இவருக்குமான உரையாடல்கள் ஜாலி, கேலி கலாட்டா! நிஜத்தில் ஒரு CG கதாபாத்திரத்தை மனத்தில் நினைத்துக்கொண்டு அது கொடுக்கும் கவுன்டருக்கு ஏற்றவாறு நடிப்பது என்பது சற்றே சவாலான விஷயம். அதை டாம் ஹார்டி சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரின் பங்களிப்புதான் இல்லாத அமீபாவுக்கும் அவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருப்பதாக உணர வைக்கிறது.

முதல் பாகத்தின் எண்டு கிரெடிட்ஸில் எட்டிப்பார்த்த வுட்டி ஹாரல்ஸன் இதில் முழுநேர வில்லன். சீரியல் கில்லர் உடல்மொழி எல்லாம் தன் திறமைக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என நிரூபித்திருக்கிறார். எள்ளல், பொடிவைத்துப் பேசும் வசனங்கள், காதலியுடன் செய்யும் சாகசங்கள், கார்னேஜுடனான அதிரடி எனப் படத்தின் ஆல்ரவுண்டர் இவர்தான்.

பெண் கதாபாத்திரங்களில் வில்லனின் காதலியாக நவோமி ஹாரிஸ், எட்டியின் எக்ஸாக மிச்சல் வில்லியம்ஸ். இருவருக்குமே கதையில் முக்கியமான பாத்திரங்கள் என்பது ஆறுதல்! மிச்சலுக்கும் எட்டிக்கும் இடையேயான உரையாடல்களில் சுவாரஸ்யம் கூட்டுவது வெனமின் கலாய்ப்புகள்தான். படத்தைத் தாங்கிப் பிடிப்பதும் அதன் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம்தான்.

முதல் பாகம்தான் இதற்கான தொடக்கம் என்றாலும், இந்த இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கும் இயக்குநர் ஆன்டி சர்க்கிஸ் இதில் வெனமுக்குக் கொடுத்திருக்கும் கிராஃப், அந்தப் பாத்திரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. அவ்வப்போது ஒலிக்கும் எமினமின் ‘லாஸ்ட் ஒன் ஸ்டான்டிங்’ காட்சிகளின் டெம்போவைக் கூட்டியிருக்கிறது.

Venom: Let There Be Carnage

படம் 90 நிமிடங்கள் என்பதுதான் இதன் பிளஸ், மைனஸ் இரண்டுமே! கதைக்குத் தேவையான காட்சிகளை மட்டும் வைத்து சுருக்கமாகப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று ஆறுதல் பட்டுக்கொள்வதா, இல்லை இந்தத் தளத்தில் இன்னமும் விளையாடியிருக்கலாமே என்று வருத்தம் கொள்வதா என்பதெல்லாம் அவரவர்களின் சாய்ஸ்! ஆனால் வெனமின் சாகசங்களையும், எட்டியின் வாழ்க்கைப்பாடுகளையும், யதார்த்த சிக்கல்களையும் குறைத்து வெறும் வில்லனுடனான சண்டையாக மட்டுமே படத்தை நிறுவியிருப்பது ஒரு சூப்பர்ஹீரோ (சூப்பர்வில்லன்) கேன்வாஸுக்கு போதவில்லை என்பதே உண்மை.

இதில்தான் MCU படங்கள் தனித்து நிற்கின்றன எனலாம். பார்த்து பண்ணுங்க சோனி!

Also Read: `நடுவுல கொஞ்சம் ஆர்யாவைக் காணோம்’ – `அரண்மனை 3′ பிளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

ஒரு சின்ன மிதமான ஸ்பாய்லர் அலெர்ட்!

Venom: Let There Be Carnage

எது எப்படியோ, படத்தின் கிரெடிட்ஸில் வரும் அந்தக் காட்சி, வழக்கமான எண்டு கிரெடிட்ஸ் சம்பிரதாயமாகக் கடந்துபோகாமல், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒரு விஷயத்தை ஒரே நிமிடத்தில் சொல்லிச் செல்கிறது. அந்த ஒரு காட்சிதான் படத்தின் குறைகளை மறக்கச்செய்து, வரவிருக்கும் ஸ்பைடர்மேன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் அதிகப்படுத்தியிருக்கிறது. அதற்காகத் தொடக்கம் முதலே சில ஈஸ்டர் எக்குகளை (குறியிடுகளை) இட்டு நிரப்பியிருக்கிறார்கள். வுட்டி ஹாரில்ஸன் ‘Responsibility’ பற்றிச் சொல்லும் அந்த வசனம், ஆர்ஜின் (ஆரம்ப) கதைகள் பற்றிப் பேசுகையில் சிலந்தியை அடித்துக் கொள்வது என ஸ்பைடர் வெப்பாக (சிலந்தி வலையாக) குறியீடுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

மார்வெல்லின் பிதாமகன் ஸ்டேன் லீ இருந்திருந்தால் நிச்சயம் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார், ஜாலி கமென்ட் அடித்திருப்பார். வெல்கம் டு —— யுனிவர்ஸ், வெனம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.