நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘கடன் பிரச்னை’ என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், ‘கட்சியில் ஒன்றிய செயலாளராக இருக்கும் அவர், கடன் பிரச்னையால் இறந்தார் என்பது நம்பும்படியாக இல்லை. அவரது சாவுக்கு வேறு ஏதோ காரணம்’ என்று அ.தி.மு.கவினர் சொல்கிறார்கள்.

சந்திரசேகரன்

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ஏரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சந்திரசேகரன். இவர், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு, ரூபா என்ற மனைவி உள்ளார். அவரும் வழக்கறிஞராக உள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த சந்திரசேகர் திடீரென விஷத்தைக் குடித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் மயங்கி விழுந்த அவரை மனைவி ரூபா, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு, மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சந்திரசேகரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், ரூபா அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று சந்திரசேகரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்னையால் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

நாமக்கல்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் அதிக பொருட்செலவில் சொந்தமான வீடு கட்டினாராம். இதற்காக, அவர் பலரிடமும் கடன் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த கடன் கிட்டத்தட்ட ரூ. 2 கோடியை உரிய காலத்தில் அவரால் திருப்பி செலுத்த முடியாமல் போனதாம். இதனால், கடந்த சில நாள்களாகவே அதிக மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்து, இப்படி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள்.

Also Read: `தோஷம் இருக்கு!’ – ஏமாற்றிய குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் வந்த நபர்… நகையை இழந்த பெண் தற்கொலை

ஆனால், அ.தி.மு.கவினர் சிலரோ, “அ.தி.மு.க கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தது. இவர் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். இன்னொரு பக்கம், இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி சொத்தும் இருக்கிறது. இந்த நிலையில், இவர் கடனுக்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்ப முடியவில்லை. வேறு ஏதும் காரணமாக கூட இருக்கலாம். அவரது உறவினர்கள் இதுகுறித்து பேசினால்தான் உண்மை காரணம் தெரிய வரும்” என்று சந்தேகம் எழுப்புகிறார்கள். போலீஸ் விசாரணையில் முடிவில் தான் உண்மை என்ன என்று தெரியவரும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.