திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சுமார் 5 அடி ஆழத்தில் வயல் உள்வாங்கியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருக்கண்டீஸ்வரம் ஊரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த கொட்டிகுளம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்னிலம் வட்டாட்சியர் அனுமதியுடன் தூர்வாரப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதன் விளைவாய் இன்று குளத்தை சுற்றி இருந்த ஒரு வயலில் 5 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வயலில் தேங்கியிருந்த நீர் அந்தப் பள்ளத்தின் வழியாக குளத்திற்கு சென்றடைகிறது.

image

இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கையில், ‘பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த குளத்தை ஆழமாக தூர் வாரியதால் இந்த பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம்’ என்கின்றனர். ஒருவேளை அந்த குளத்தினால் தான் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்குமாயின், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு கிராம மக்கள் ஒன்று கூடி கிராம கமிட்டி மூலமாக உரிய நிவாரணத்தை தர முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள். முன்னதாக கிராம மக்கள் கிராம கமிட்டி அமைக்கப்பட்டு, கிராம நலனுக்காகவும் கொட்டிகுளத்தை சுற்றி உள்ள பாசன பரப்பு பயன் பெறுவதற்காகவும் கொட்டி குளமானது தூர்வாரப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி: அறுவடை செய்ய இருந்த நேரத்தில் மழையில் சாய்ந்த பயிர்கள் – வேதனையில் தஞ்சை விவசாயிகள்

மேலும் இதுகுறித்து மண் ஆய்வாளர்களிடம் கேட்டபோது, “குளமானது தூர்வாரும் போது மூன்றடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். அதை மீறி அதிக அளவு ஆழத்தில் குளம் வெட்டப்பட்டிருந்தால், அருகிலுள்ள நிலப்பரப்பு மணற்பாங்கான நிலப்பரப்பாக இருந்தால் குளத்தின் கரை பல படுத்தாமல் இருந்தால் ஈரநைப்பின் காரணமாக இதுபோல் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்கள்.

இது குறித்து அரசுத் தரப்பில் நன்னிலம் வட்டாட்சியரிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தால் அந்த பகுதிக்கு வராதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.