கஸ்தூரி தங்கம் – இந்த இனிப்பு வகையைத்தான் எலிமினேஷன் ரவுண்டை எதிர்கொள்கிறவர்கள் உருவாக்க வேண்டும். இது செஃப் ஆர்த்தியின் சிக்னேச்சர் டிஷ். அவரது இளம் வயதில் சமையல் வழிகாட்டிகளாக இருந்த ஆச்சிம்மாக்களின் பெயர்கள்தான் கஸ்தூரி மற்றும் தங்கம். அவர்களின் நினைவாக இந்த இனிப்பை உருவாக்கியிருக்கிறார் ஆர்த்தி. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கிய உணவு இது.

இதைப் பற்றி போட்டியாளர்களிடம் சொல்லும்போது தனது ஆச்சிகளை நினைத்து தன்னிச்சையாக கண்கலங்கிவிட்டார் ஆர்த்தி. அவரது கண்ணீரும் நெகிழ்ச்சியும் போட்டியாளர்களிடமும் பிரதிபலிக்க, அவர்களும் கண்கலங்கினார்கள். சொல்ல மறந்து போனது, முதன்முறையாக செஃப் கோட்டில் தரிசனம் தந்த ஆர்த்தி, பார்க்க அத்தனை அம்சமாக இருந்தார்.

பிளாக் ஏப்ரன் அணிந்திருந்த நித்யா, சுனிதா மற்றும் சுமித்ரா ஆகியோர் இந்த எலிமினேஷன் சவாலை சந்தித்தாக வேண்டும். இந்த எபிசோடிவிற்காக பிரத்யேகமாக உருவாக்கியிருந்த ‘கஸ்தூரி தங்கத்தை’ அறிமுகப்படுத்தினார் ஆர்த்தி. வாவ்… ஒரு நேர்த்தியான ஓவியம் போல் இருந்தது, அந்த வஸ்து!

மாஸ்டர் செஃப் தமிழ்

கீழே அச்சு முறுக்கு. அதன் மேல் அழகான குடைபோல டெஸர்ட் டோம். அதை ஆர்த்தி வெட்டிய போது மிக இலகுவாக வெண்ணைய் போல் வழுக்கிச் சென்றது. உள்ளே பார்த்தால் அழகான பச்சை மற்றும் சிவப்பு நிற லேயர்கள் தெரிந்தன. சிவப்பு லேயர் பிளம் அல்வாவாம். பச்சை லேயர் நார்த்தங்காவாம். இதனுடன் இளநீர் Mousse. இதன் பக்கத்தில் ரோஜா மாதிரி ஒரு பூ. காந்தள் மலரில் செய்ததாம்.

போட்டியாளர்கள் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம். ஆர்த்தியின் இந்த சிக்னேச்சர் டிஷ்ஷை அப்படியே நகல் எடுக்க வேண்டும். இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் தரப்பட்டிருக்கின்றன. (ஏழு பேப்பர்!). சமையல் பொருள்களும் கூடவே இருக்கின்றன. மாஸ்டர் செஃப் வரலாற்றிலேயே அதிக பட்ச நேரமாக 120 நிமிடங்கள், அதாவது இரண்டு மணி நேரம் இதற்காகத் தரப்பட்டது.

அப்போதே போட்டியாளர்களுக்கு புரிந்து போயிற்று, இத்தனை வசதிகள் தரப்பட்டிருந்தாலும் இந்த டிஷ்ஷை செய்வது அத்தனை எளிதான சமாச்சாரமில்லை என்று. அத்தனை ingredients உள்ளே லேயர் லேயராக இருந்தன. அதிலும் ஆர்த்தியின் கைவண்ணத்தை அப்படியே கொண்டு வருவது மிகச் சிரமமான விஷயம். ‘சரி. எவ்வளவு முடியுமோ… அத்தனை முயன்று பார்க்கலாம்’ என்று களத்தில் போட்டியாளர்கள் இறங்கினார்கள்.

ஸ்ட்ரிக்ட் மாஸ்டராக இருந்தாலும் நாடகத்தனமாக எதையாவது செய்து நம்மைக் கவர்ந்து விடுவதில் செஃப் ஹரீஷ் வல்லவர். “இது வரைக்கும் நான் பார்க்காத ஏரியாவிற்கு போகப் போறேன்” என்று கிளம்பியவர், நேராக பால்கனிக்குச் சென்று ஏற்கெனவே வெற்றி பெற்று அங்கு நின்று கொண்டிருந்த போட்டியாளர்களுடன் இணைந்து கொண்டார்.

“என் வாழ்க்கையிலேயே இதுவரை நான் அச்சு முறுக்கு செய்ததே கிடையாது” என்ற சுமித்ரா, அதனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். மாவு அச்சிலேயே ஒட்டிக் கொண்டு தீய்ந்து போய் வர மறுத்தது. என்றாலும் விடாப்பிடியாக போராடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் இன்னொரு கலாட்டா நடந்தது. “நித்யா… ப்ரீஸருக்குள்ள நான் வெச்சிருந்த பிளேட்டை நீங்க கொண்டு வந்துட்டீங்களா?” என்று சுனிதா பதற்றத்துடன் கேட்க, அதை விடவும் பதற்றமாக சமைத்துக் கொண்டிருந்த நித்யா “இல்லையே… என்னோடதுதான் கொண்டு வந்தேன்” என்று மறுத்தார். “அய்யோ… இப்ப நான் என்ன செய்வேன்” என்று தவித்த சுனிதாவிற்கு உதவ நித்யா முன்வர “நான் பார்த்துக்கறேன்” என்று தவிப்போடு விலகினார் சுனிதா.

மாஸ்டர் செஃப் தமிழ்

ஒரு போட்டியில் இப்படியெல்லாம் கூட எதிர்பாராத நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிற படிப்பினையை இந்தச் சம்பவம் உணர்த்தியது. இப்படி ஒவ்வொரு போட்டியாளரும் விதம் விதமான தவிப்புகளை அடைந்து கொண்டிருந்தார்கள்.

கஸ்தூரி தங்கத்துடன் போராடியவர்கள் 2 மணி நேரத்தின் கடைசி நொடி வரை மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள். நேரம் முடிந்து ஒவ்வொருவரும் தங்களின் உணவைப் பயபக்தியோடு கொண்டு வந்தார்கள். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். எந்த பிளேட்டுமே ஆர்த்தியின் சிக்னேச்சருக்கு முன்னால் நிற்க முடியாது. அனைத்துமே கொஞ்சம் சோடை போனதாகத்தான் இருந்தது. என்றாலும் இந்த அளவிற்கு முயன்ற போட்டியாளர்களின் உழைப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது.

முதலில் வந்தவர் சுமித்ரா. இவரது தயாரிப்பை சுவைத்த ஹரீஷ் “எக்ஸலண்ட்” என்று பாராட்டினார். ”ஸ்வீட் அதிகமா தெரியுது” என்கிற மெல்லிய நெகட்டிவ் கமெண்ட் வரும்போதே சுமித்ராவால் கண்கலங்குவதை நிறுத்த முடியவில்லை. “அச்சு முறுக்கோட நீங்க போராடியதைப் பார்த்தேன். முதன்முறை முயற்சி செய்திருந்தால்கூட கச்சிதமாக செய்து முடித்து விட்டீர்கள்” என்று ஆர்த்தி பாராட்டினாலும் கூட சுமித்ராவின் முகத்தில் பதற்றம் தணியாமலேயே சென்றார்.

அடுத்து வந்த சுனிதா, Mousse-ஐ உருவாக்கியிருந்த விதம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் ‘கிளேஸ் கச்சிதமாக இல்லை… ஜெல்லி நன்கு உறைந்து விட்டது…’ போன்ற கமெண்ட்டுகள் வந்தததும் வாடிய முகத்தை புன்னகையால் மறைக்க முயன்றார். அச்சு முறுக்கை சூடான நெய்யில் போட்டதால் அதன் சரியான பதத்தை இழந்து விட்டதாம். (டெம்ப்பரேச்சர் முக்கியம் குமாரு!).

மாஸ்டர் செஃப் தமிழ்

கடைசியாக வந்தவர் டாக்டர் நித்யா. இவருடைய அறிமுக வீடியோ காட்டப்பட்டது. குழந்தைகள் நல மருத்துவரான இவருக்கு இளம் வயது முதலே சமையலில் பயங்கர ஆர்வமாம். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல விஷயங்களை தியாகம் செய்திருக்கிறார். இவர் கொண்டு வந்த ‘கஸ்தூரி தங்கம்’ நீதிபதிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ‘கிளேஸ் கொஞ்சம் திக்காயிடுச்சு… மத்தபடி ஓகே” என்றார் ஹரீஷ். “ஹேட்ஸ் ஆஃப்” என்று பாராட்டினார் ஆர்த்தி.

போட்டியாளர்கள் மூவருமே தங்களின் அசாதாரணமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். இதில் யார் வெளியேறுவார்? பரபரப்பான நிமிடங்கள். “உங்க மூணு பேரையுமே நான் பாராட்டணும். இது நிறைய ingredients இருக்கிற இனிப்பு. இந்த நிகழ்ச்சிக்காகவே நான் உருவாக்கிய புதிய மெனு. நீங்க எந்தவொரு விஷயத்தையும் விட்டுடாம பண்ணியிருக்கீங்க. மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று வாழ்த்தினார் ஆர்த்தி.

மூவரும் பதைபதைப்பாக நின்று கொண்டிருக்க முடிவுகள் வெளியாகத் துவங்கின. இதில் முதல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் சுமித்ரா. அடுத்ததாக அறிவிக்கப்பட்டவர் நித்யா. ஆக இன்று போட்டியில் இருந்து வெளியேறுகிறவர் சுனிதா.

Also Read: சர்வைவர் – 32 | வாழ்வா, சாவா என்னும் உக்கிரமான போட்டி… வாய்விட்டு கதறியழுத அம்ஜத்! என்ன நடந்தது?

“டெஸர்ட் ஏரியால நான் வீக். இருந்தாலும் ஆடிஷன்ல ஒரு சவாலா எடுத்துக்கிட்டு டெஸர்ட் செஞ்சுதான் உள்ளே வந்தேன். 5 தடவை கறுப்பு ஏப்ரன் போட்டாலும் ஒவ்வொருமுறையும் பாஸாகி விட்டேன். மாஸ்டர் செஃப்-ன்றது என்னோட கனவு” என்ற சுனிதா, தன்னிச்சையாக கண் கலங்கத் துவங்கியது. “You are a fighter. அழாதீங்க” என்று கெளஷிக் உற்சாக வார்த்தை சொன்னதும் தன்னைத் தேற்றிக் கொண்டார் சுனிதா. “எங்க அப்பா என்னோட சமையலை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவாரு. உங்களைப் பார்க்கும் போது எங்க அப்பா நினைவுதான் வருது” என்று சுனிதா சொன்னதும் அதை நெகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் கௌஷிக்.

“நீங்க இங்க காலி பையோடு வந்தீங்க… இப்ப நிறைய அனுபவங்களோடு போறீங்க. Keep Cooking… வாழ்த்துகள்” என்று நீதிபதிகளோடு இணைந்து விசேவும் சுனிதாவை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

தன் சமையல் அனுபவங்கள் வீடியோவில் சுனிதா விளக்கும் போது அவரின் இனிமையான மாடுலேஷனைக் கவனிப்பது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். இனி இந்த நிகழ்ச்சியில் அதை கேட்க முடியாது என்பது துரதிஷ்டம்தான்.

அடுத்த வார சவால்கள் எப்படியிருக்கும்?

காத்திருந்து சுவைப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.