தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனி உயரத்தைத் தொட்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஒல்லியான தேகம், மாநிறம், கிராப் எடுத்து வாரிய முடி, பள்ளி மாணவர் தோற்றம், கையில் மைக் வைத்துக்கொண்டு மிமிக்ரி செய்து கொண்டிருந்தார் அந்த இளைஞர். ‘நல்லா பண்றாரே’ சொல்லி கொண்டிருந்தபோது, ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் புகுந்து சிரிக்க வைத்தார். அடுத்தடுத்து சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்து அசத்தியது அந்த இளைஞரின் குரல்.

டைமிங் காமெடி, உடனிருக்கும் தொகுப்பாளரைக் கலாய்த்து அரங்கை சிரிக்கவைப்பது, ‘ஆன் தி ஸ்பார்ட்’ காமெடியில் கலக்குவது என இருந்தவருக்கு ‘மெரினா’வின் வழியே திரைக்கு பாதை அமைத்து கொடுத்தது காலம். ‘உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு, வெற்றி வரும்’ என ஓடிக்கொண்டிருக்கும் அந்த இளைஞரின் ஓட்டத்தின் குறுக்கே ஆயிரம் தடைகள், அவமானங்கள், ஏமாற்றங்கள். இந்த வலிகளை தாங்கி இன்று ‘டாக்டர்’ படத்தில் கொண்டாடப்படும் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் இப்போது கிடைத்திருக்கும் இடம் முக்கியமானது.

image

1990-க்குப் பிறகான தமிழ் சினிமா வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதில் நிச்சயம் தனித்துவமான ஒரு நடிகராக அடையாளப்படுத்தப்படுவார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் போட்டி, பொறாமை நிறைந்த சினிமா உலகில், எந்தவித பின்புலமும் இல்லாமல் நுழைந்து கடின உழைப்பால் வளர்ந்து வந்த மிகச் சில நபர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த நடிகரையும் விட குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தவர்.

2007-ம் ஆண்டு விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு – சீஸன் 3’ நிகழ்ச்சியை கவனித்தவர்கள் பலருக்கும் சிவகார்த்திகேயனின் பஞ்ச் வசனங்களும், டைமிங் காமெடி பர்ஃபாமன்ஸ், மிமிக்ரிகளும் அவரை இந்த உச்சத்திற்கு கொண்டுவரும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

2013 – 2016 சிவாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஆண்டு. அவரின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆண்டு. 2012-ல் வெளியான ‘மெரினா’ சிவாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தது. குறிப்பாக, மக்கள் மத்தியில் சிவாவுக்கு இருந்த மவுசு இந்தப் படம் வெளியான பிறகு தெரியவர, அதுவே பாண்டிராஜின் அடுத்தப் படத்திலும் அவரை கதாநாயகனாக்கியது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் இரண்டாவது நாயகன் என்றாலும், விமலுக்கு இணையாக அந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் சிவாவை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ்.

அந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் விமலை விட அதிக பாராட்டையும் கவரேஜையும் பெற்றது என்னவோ சிவகார்த்திகேயன்தான். இந்த வெற்றி இருவர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருவர் அப்போது குறைந்த பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் படங்களை எடுத்துக்கொண்டிருந்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன், மற்றொருவர் தனுஷ். சொல்லப்போனால் ‘3’ படத்தில் நடிக்கும்போதே, சிவா ஹீரோ மெட்டிரியல் என சொன்னவர் தனுஷ். இவர்கள் இருவரும் சிவாவை வைத்து மினிமம் பட்ஜெட்டில் படங்களை எடுக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதுபோன்ற நபர்கள் கைகொடுக்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் ‘எதிர்நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் போன்ற படங்கள் சிவாவின் நடிப்பில் வெளிவந்தன.

image

தனுஷின் ‘எதிர்நீச்சல்’ தான் சிவாவை சோலா ஹீரோவாக திரைத்துறையில் பயணப்பட வைத்தது. ‘எதிர்நீச்சல்’ எதிர்பார்க்காத வெற்றியை கொடுக்க, அதற்கடுத்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் சிவாவை கொண்டுசேர்த்தது. குறிப்பாக, இந்த ஒற்றைப் படத்தின் வெற்றி சிவாவின் கரியரை திசைதிருப்பியது எனலாம். 2013 – 16 காலகட்டத்தில் வெளியான சிவாவின் ஒவ்வொரு படமும் வணிக வெற்றியாக இருந்தது மற்றும் தயாரிப்பாளர்களுக்கு 77% முதல் 209% வரையிலான லாபத்தை சம்பாதித்து கொடுத்தாக சொல்லப்படுகிறது.

இதன் தாக்கம் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக அவரை மாற்றியது. சினிமா துறையில் அறிமுகமாகிய முதல் 3 ஆண்டுகள் எந்த சறுக்கலும் சந்திக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டுகளில் வெளியாகிய சில படங்கள் விமர்சன ரீதியாக சிவாவை சற்று அசைத்து பார்த்தன. ‘காக்கி சட்டை’ அவர் எடுத்த ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தது சரிதான் என்பதை அடுத்தடுத்து வெளியான `ரஜினி முருகன்’, ரெமோ’ போன்ற திரைப்படங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் புரியவைத்தார்.

சிவா தனது திரைவாழ்வில் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட படம் என்றால், அது ‘சீமராஜா’வாக தான் இருக்கும். இந்த காலகட்டங்களில் செய்த சில தவறுகள், அவருக்கு சில படிப்பினைகளை கொடுத்திருக்கும். அதனால்தான் என்னவோ கடந்த சில தனது செயல்களில் பக்குவம் காண்பித்து வருகிறார். இதுவரை ஹீரோவாக பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிவா. இதில் சில படங்கள் விமர்சன ரீதியாக மோசமான படங்களாக சொல்லப்பட்டாலும், வணிக ரீதியாக எந்த பெரிய தோல்வியையும் சிவா காரணமாக நிகழவில்லை என்பதே உண்மை.

image

சிவாவின் கரியரில் பெரிதாக விமர்சிக்கப்பட்ட ‘சீமராஜா’, ‘மிஸ்டர்.லோக்கல்’, ‘வேலைக்காரன்’ போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லை என்ற அளவிலேயே பாதிப்புகளை சந்தித்தாக சொல்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். வசூல் ரீதியாக பெரிய சறுக்கலை சந்திக்காமல் இருக்க அவருக்கு உதவுவது ஃபேமிலி ஆடியன்ஸ். தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவின் பொசிஷனை தீர்மானிப்பது அந்த ஹீரோவுக்கு கிடைக்கும் ஓப்பனிங் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் மத்தியிலான ரெஸ்பான்ஸை வைத்தும்தான். அந்த வகையில், தற்போது ரஜினி, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களை தாண்டி தமிழ் சினிமாவில் இந்த இரண்டையும் சாத்தியப்படுத்தியவராக திரைப்பட விநியோக வட்டத்தை அறியப்படும் நான்காவது ஹீரோ சிவகார்த்திகேயன் மட்டுமே. இந்த நால்வர் படங்களை மட்டுமே, எம்.ஜி (MG) எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையரங்க உரிமையாளர்கள் வாங்கி வருகின்றனர்.

சிவாவுக்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல மதிப்பு ஏற்பட முக்கிய காரணம் அவரின் கதை தேர்வுதான். பேமிலி ஆடியன்ஸ் வரவேற்பை சிவாவும் நன்கு உணர்ந்துள்ளார். அதனால்தான் அவர்களுக்கு ஏற்ற `கமர்ஷியல்’ கதைகள்தான் அவரின் முதல் தேர்வாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்த இந்த 8 ஆண்டுகளில் படத்துக்கு படம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

image

அவரின் வளர்ச்சி மிகவும் பெரியதாகவே இருக்கிறது. வெற்றி, தோல்விகளை தாண்டி `எதிர்நீச்சல்’ தொடங்கி தற்போது `டாக்டர்’ வரை இவரது சினிமா கரியரின் கிராஃப் இன்னும் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது. இதனை கடைசியாக அவர் நடிப்பில் வெளியான `நம்ம வீட்டு பிள்ளை’, இதோ இப்போது வெளியாகியிருக்கும் `டாக்டர்’ இரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சொல்லலாம்.

`டாக்டர்’ வெளியான முதல் நாளில் மல்டிபிளக்ஸ் அரங்குகள் மூலமாக மட்டும் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தாக சொல்லப்படுகிறது. சமீப காலங்களில் குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் ஈட்டியிருக்கிறது ‘டாக்டர்’.

மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட நடிகர் என்ற நிலையை தாண்டி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞனாக ஓப்பனிங்கில் மாஸ் காட்டும் நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். வரும் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கலைஞனாக சிவா திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. அதற்கேற்ப அவரின் அடுத்தடுத்த திட்டங்களும் அமைந்துள்ளன. ‘இன்று நேற்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கம், ரஹ்மான் இசையில் ‘அயலான்’, புதுமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’, அட்லீ உதவி இயக்குநர் இயக்கத்தில் ‘சிங்கப்பாதை’, அதுபோக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து படங்கள் என அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவா மிகவும் பிஸியான நபராக வலம்வர இருக்கிறார்.

– மலையரசு

தொடர்புடைய செய்திகள்:

> இரண்டே நாளில் ரூ.18 கோடி ரூபாய் வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?

> “புரொமோ பார்த்து யோசிச்சவங்களை ஓடவிட்டுட்டீங்க நெல்சன்”- இயக்குநர்கள் பாராட்டும் ‘டாக்டர்’

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.