மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் ஆராய்ச்சி பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். ஆகவே தனது தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்ற சுப்பிரமணியன் மூன்று வருடங்கள் மத்திய அரசின் பொருளாதார நிலவரம் குறித்த “எக்கனாமிக் சர்வே” அறிக்கையை தனது குழுவுடன் இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கண்ணோட்டத்துடன் “எக்கனாமிக் சர்வே” அறிக்கையை நவீனமாக முறையில் வெளியிட்டதன் காரணமாக பிரபலமானவர் சுப்பிரமணியன். பொருளாதார சூழ்நிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய மாற்றங்கள் ஆகியவற்றை வித்தியாசமான உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தி “எக்கனாமிக் சர்வே” அறிக்கையை சுவாரஸ்யமான முறையில் இவர் வெளியிட்டார்.

image

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியவர் சுப்பிரமணியன். மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்கும் முன் இவர் ஹைதராபாதில் உள்ள பிரபல “இந்தியன் ஸ்கூல் பிசினஸ்” பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது அரசுப் பொறுப்பை திரண்டுள்ள இவர் மீண்டும் தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளில் ஈடுபட உள்ளார்.

தனது முடிவை சுட்டுரையில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தனது நிதி அமைச்சக சகாக்கள் ஆகியோரை பாராட்டி ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். தனது வழக்கமான பாணியில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்கள் கங்குலி, தோனி மற்றும் திராவிட் ஆகியவர்களை உதாரணமாக சுட்டிக்காட்டி, நிதி அமைச்சகத்தில் உள்ள சிறந்த பொருளாதார ஆலோசகர்கள் குழு அரசுப் பணிகளை திறம்பட கையாளும் என குறிப்பிட்டுள்ளார்.

பல பழைய விதிமுறைகளை மாற்றி, புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் பணியில் சுப்பிரமணியன் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக கோவிட் பொதுமுடக்கத்துக்கு பிறகு, மத்திய அரசு அமல்படுத்திய பல பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இவர் பக்கபலமாக இருந்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமானவரி குறைப்பு உள்ளிட்ட பல வரலாறு காணா சீர்திருத்தங்கள் சென்ற வருடம் தொடங்கி அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தை ஊக்குவிக்க புதிய யோசனைகளை அமல்படுத்த வேண்டும் என சுப்பிரமணியன் வலியுறுத்தி வந்தார். பணவீக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை புதிய கோணங்களில் பார்த்தவர் இவர். அரிசி மற்றும் பருப்பு போன்ற மூலப்பொருட்களின் விலை மூலம் பணவீக்கத்தை கணிப்பதை விட ஒரு சாப்பாட்டின் விலை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை கணிக்கலாம் என இவர் மத்திய அரசின் “எகனாமிக் சர்வே” அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐஐடி மாற்றம் ஐஐஎம் ஆகிய பிரபல அமைப்புகளில் படித்த சுப்ரமணியன், அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் பெற்றார். பொருளாதார கொள்கைகள் மற்றும் வங்கித்துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஜேபி மார்கன் சேஸ், டாட்டா கன்சல்டன்ஸி சர்வீஸ் மற்றும் ஐசிஐசிஐ நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்ததால் அந்தப் பதவி காலியாக இருந்த போது, மத்திய அரசு கே வி சுப்பிரமணியனை தேர்வு செய்தது. தற்போது அவர் மீண்டும் கல்விப் பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளதால், புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் ஒருவரை மத்திய அரசு நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

– புதுடெல்லியிலிருந்து கணபதி சுப்பிரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.