ஏர் இந்தியா நிறுவனம் 68 ஆண்டுகளுக்குப்பிறகு டாடா-வின் கைசேரப்போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அரசு அதை மறுத்திருந்தது. இந்நிலையில், டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிய செய்தியை இன்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஏர் இந்தியா விமானம்

கடும் நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசாங்கம் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாகவே கடுமையாக முயற்சி செய்துவந்தது. பல்வேறு விமான நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முயற்சி செய்து வந்தாலும், அதன் கடனைப் பார்த்து பல நிறுவனங்கள் வாங்கத் தயங்கின. காரணம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் நிறுவனம் அதன் கடனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையை விதித்தது அரசு. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.14,718 கோடி இருந்தாலும் இந்த நிறுவனத்துக்கு இருக்கும் கடன் மட்டுமே ரூ.46,262 கோடி ஆகும். இதில் 15,000 கோடி அளவுக்கான கடனை டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தைப் பல விமான நிறுவனங்கள் வாங்க போட்டி போட்டன. இந்த நிறுவனத்தை வாங்க ஆகக் குறைந்த விலையாக ரூ.12,906 கோடியை மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை நடத்திவரும் அஜய் சிங் ரூ.15,000 கோடியைத் தந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வந்திருந்தார். ஆனால், டாடா நிறுவனம் ரூ.18,000 கோடியைத் தந்து வாங்க முன்வந்ததால், அந்த நிறுவனத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

Ratan Tata

Also Read: `1932-ல் டாடா ஏர்லைன்ஸ்.. இப்போது ஏர் இந்தியா’ – மீண்டும் பழைய நிறுவனத்தைத் தன் வசப்படுத்துமா டாடா?!

டாடா நிறுவனம் ஏற்கெனவே இரு விமான நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 84% பங்குகளையும் விஸ்தாரா நிறுவனத்தில் 51% பங்குகளையும் வைத்திருக்கிறது. டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவின் 51% பங்குகளை வைத்திருக்கும் என்றும் ஓராண்டுக்குப் பின்னரே அந்தப் பங்கை டாடா நிறுவனம் வேறு நிறுவனத்துக்கு விற்கலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

விமானப் பயணிகள் சந்தையில் ஏர் இந்தியாவுக்கு ஏற்கெனவே நல்ல சந்தைப் பங்களிப்பு இருக்கும் நிலையில், டாடா நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமாக மாறும்.

“ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதில் டாடா நிறுவனம் பெருமை கொள்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன்.

“இந்த நேரத்தில் ஜே.ஆர்.டி டாடா உயிரோடு இருந்திருந்தால், இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்’’ என்று சொல்லியிருக்கிறார் ரத்தன் டாடா.

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

Also Read: ஏர் இந்தியா: 68 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் `டாடா’வின் கைசேருமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்த ஒரு பிரச்னை இதன் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. டாடாவின் கைக்கு ஏர் இந்தியா செல்வதால், சில ஆண்டுகளில் அது மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.