“சில பொறியியல் கல்லூரிகளைத் திறந்துட்டாங்க. சிலது இன்னமும் திறக்கலை. கவர்ன்மென்ட் இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கிற என் பிள்ளைங்க இன்னமும் வீட்லதான் இருக்காங்க. நாங்களும் ஃபீஸ் கட்டியிருக்கோம்ல? இப்படி சில காலேஜை திறந்துட்டு, சிலதை திறக்காம வைச்சிருக்கிறதுக்கு என்ன காரணம்னு கேட்டுச் சொல்லுங்களேன்” என்று நமக்கு போன் செய்து கேட்டார் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர். காரணங்களைத் தெரிந்துகொள்ள கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியைத் தொடர்பு கொண்டோம்.

Education (Representational Image)

“அவர் சொல்வது உண்மைதான். சில பொறியியல் கல்லூரிகள் திறந்தும், சிலது திறக்காமலும் இருப்பதால், காரணம் தெரியாமல் பல பெற்றோர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அந்தந்த ஏரியாவில் இருக்கின்ற கொரோனா தொற்றின் எண்ணிக்கையைப் பொறுத்து கல்லூரிகளை; திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கிறார்கள். அந்த வகையில் அவருடைய பிள்ளைகள் படிக்கிற பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கலாம்.

அடுத்து, செப்டம்பரிலிருந்து அடிக்கடி தொடர் விடுமுறைகள் வருகின்றன. அதனால், கல்லூரியின் ஹாஸ்டலில் தங்குகிற மாணவர்கள் அடிக்கடி வீட்டுக்குச் சென்று வர நேரும். இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி வரும். இது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கலாம். அதனால், தீபாவளி கழித்துத் திறக்கலாம் என்று சில கல்லூரிகள் முடிவெடுத்திருக்கின்றன.

சில கல்லூரிகளில், தீபாவளி முடிந்ததும் மாடல் எக்ஸாம் வரவிருக்கிறது. அதெல்லாம் முடிந்தபிறகு அடுத்த செமஸ்டருக்கு, அதாவது டிசம்பரில் திறந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

நிறைய கல்லூரிகள் ஆயுத பூஜை விடுமுறை முடிந்ததும் திறக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷ் காந்தி – நெடுஞ்செழியன்

பல்கலைக்கழகத்தின் டைம் டேபிள் மற்றும் சிலபஸ் பொறுத்து, சில கல்லூரிகளில் செமஸ்டர் எக்ஸாம் முடிந்தபிறகு திறந்துகொள்ளலாம் என்றிருக்கிறார்கள். `மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பொருந்தி விட்டார்கள். எக்ஸாம் நேரத்தில் இதை மாற்றினால், அதற்குப் பொருந்துவதற்கு மாணவர்கள் கஷ்டப்படுவார்கள்’ என்பதே இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.

பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, பல கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. முன்புபோல அத்தனை கல்லூரிப் பேருந்துகளையும் இயக்கினால் செலவு அதிகமாகும். பேருந்தின் எண்ணிக்கையைக் குறைத்தாலோ மாணவர்களால் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாது. இந்தத் தயக்கத்தாலும் சில கல்லூரிகள் திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. அதிகமான கல்லூரிப் பேருந்துகள் கொண்ட கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன.

Representational Image

Also Read: பணவீக்கம் எதனால் ஏற்படுகிறது? அதற்கான முக்கியக் காரணம் என்ன? | Doubt of Common Man

இதேபோல, ஹாஸ்டல்களில் அதிகமான அறைகளைக் கொண்ட கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. கொரோனாவுக்கு முன்னால் ஓர் அறைக்கு மூன்று மாணவர்களை அனுமதித்தவர்கள், இப்போது இருவர் என அதைக் குறைத்திருக்கிறார்கள். இந்தளவுக்கு ஹாஸ்டல் வசதியில்லாத கல்லூரிகள், புது அறைகள், புது படுக்கை ஆகியவற்றை ரெடி செய்யும்வரை கல்லூரி திறப்பைத் தள்ளி வைத்திருக்கின்றன.

`டே ஸ்காலர்’ மாணவர்களை மட்டுமே கொண்ட கல்லூரிகள் இயங்க ஆரம்பித்துவிட்டன. சில கல்லூரிகள் `2 கி.மீ முதல் 5 கி.மீ தூரத்தில் இருப்பவர்களை நீங்களாகவே வந்துவிடுங்கள்’ என்கின்றன. தவிர, 5 கி.மீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்து வருகிற மாணவர்கள் மட்டுமே கல்லூரிப் பேருந்தில் வரலாம் என்றிருக்கின்றன. உங்கள் பிள்ளைகள் படிக்கிற பொறியியல் கல்லூரி திறக்கப்படாமல் இருப்பதற்கு மேலே உள்ளவற்றில் ஏதோ ஒரு விஷயம்தான் காரணமாக இருக்க முடியும். சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். தெளிவு கிடைக்கும்” என்றார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.