நடிகர் ஷாருக்கான் மகனை கைது செய்த விவகாரத்தில் அதிரடி காட்டியவர், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. போதைப்பொருள் மாஃபியாக்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய பாலிவுட் புள்ளிகளுக்கும் சிம்ம சொப்பனமாக ‘மாஸ்’ காட்டி வரும் சமீர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது பாலிவுட்டில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள பலரும் இந்தக் கைது நடவடிக்கையால் உறைந்து போயுள்ளார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பாலிவுட் வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. இவற்றுக்கு முதன்மைக் காரணம், ஆர்யன்கான் கைது விவகாரத்தில் வெகுவாக உச்சரிக்கப்படும் பெயர் சமீர் வான்கடே.

கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் இருந்தே பாலிவுட்டின் கருப்புப் பக்கங்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்போதெல்லாம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடும் பெயரும் சமீர் வான்கடேதான். சமீர் வான்கடே போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மும்பை மண்டல இயக்குநர். கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் நிலவி வரும் போதைக் கலாசாரத்தை ஒழிப்பதில் சமீரும் அவரது குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் குழுதான் சமீபத்தில் மும்பை வட்டாரங்களில் பாலிவுட்டை குறிவைத்து நடத்திய ரெய்டுகளுக்கு முதன்மையான காரணம். சுஷாந்த் வழக்கு தொடர்பாக சமீரின் குழு பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆளுமைகளை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது. இதே சமீர்தான் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் அவரின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். அப்போது இருந்தே லைம் லைட்டில் இருந்தவர், இப்போது ஆர்யன் கான் கைதுக்கு பிறகு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

image

யார் இந்த சமீர் வான்கடே?

40 வயதான சமீர் வான்கடே 2008 பேட்ச், வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி. இவர் தனது முதல் பணியாக, மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக இணைந்தார். 2008 முதல் 2020 வரை, அவர் விமானப் புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் (AIU), தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) இணை ஆணையர் இதோ இப்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் மும்பை மண்டல இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

கடமையில் நேர்மை மிகுந்த அதிகாரியாக ஐஆர்எஸ் வட்டாரத்தில் அறியப்படும் சமீர், வருவாய் அதிகாரியாக இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட விஐபிகள் மீது வரி செலுத்தாததற்காக வழக்குப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றியபோது நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார். காரணம், வெளிநாடுகளில் இருந்து சுங்கவரி செலுத்தாமல், பொருட்களை, வெளிநாட்டு கரன்சியை கொண்டுவரும் விஐபிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்ததுதான். இதற்கு ஓர் உதாரணம்: 2013-ல் பிரபல பாப் பாடகர் மிகா சிங்கை மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளுடன் பிடித்தார் சமீர்.

இதேபோல், ஐசிசி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தவும் செய்தார். தங்கத்தால் ஆன உலக கோப்பைக்கு மும்பை விமான நிலையத்தில் சுங்கக் கட்டணம் செலுத்தப்படாமல் கொண்டுவரப்பட்டதால், அதனை அதிரடியாக தடுத்து நிறுத்தி சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகே விடுவித்தார். சுங்கத்துறையில் பணியாற்றும்போது, ராம் கோபால் வர்மா மற்றும் அனுராக் காஷ்யப் உட்பட பல பிரபலங்கள் விமான நிலையம் மூலம் கொண்டு வந்த பொருட்களுக்கும் சமீர் அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image

என்சிபி-யில் பணி:

சில ஆண்டுகள் முன்புதான் சமீர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இணைத்தார். சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் சமீர் தலைமையிலான குழு, ரூ.17,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும், போதைப்பொருள் சப்ளையர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்துள்ளது இவரின் குழு. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு இவர் பதவியில் இருக்கும்போது சுஷாந்த் வழக்கு இவரிடம் வந்தது.

இந்த வழக்குக்கு பிறகு பாலிவுட்டை சுற்றி இயங்கும் போதைப்பொருள் மாஃபியாவை இலக்காக கொண்டு சமீரின் குழு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக சமீர் மற்றும் அவரின் குழுவினர் கடந்த நவம்பரில் மும்பை கோரேகாவ்னில் போதைப்பொருள் விற்பனையாளர்களால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டனர். ஒரு பிரபல போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்ய அவர் அங்கு சென்றபோது அவரை சுமார் 60 பேர் தாக்கினர். இந்த சம்பவத்துக்கு பிறகு முழு வீச்சில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முயன்று வருகிறார் சமீர்.

பாலிவுட்டை மையம் கொண்டு செயல்பட்டு வரும் சமீருக்கு பாலிவுட் உடன் ஒரு கனெக்‌ஷன் இருக்கிறது. அது, அவரின் மனைவி. பாலிவுட் சினிமாவின் மிக தீவிரமான ரசிகரான சமீர் கரம் பிடித்திருப்பது ஒரு பாலிவுட் நடிகையைத்தான். அஜய் தேவ்கன் நடிப்பில் 2003-ல் வெளியான `கங்காஜல்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான கிராந்தி ரெட்கரை தான் சமீர் மணமுடித்துள்ளார். பாலிவுட் தொழில்துறையின் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றாலும், நேர்மையான அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

இதனால், போதைப்பொருள் மாஃபியாவுடன் தொடர்புள்ள பாலிவுட்டின் ரீல் ஹீரோக்களை பயமுறுத்தும் ஓர் உண்மையான ஹீரோ, வரி ஏய்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மும்பை வட்டாரங்களில் அறியப்படும் நபராகி இருக்கிறார் சமீர்.

– மலையரசு

| தொடர்புடைய செய்திக் கட்டுரை: ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் கைதான முன்முன் தமேச்சா, அர்பாஸ் சேத்தின் பின்புலம்! |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.