கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை சக அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கு கடந்த சில நாள்களாக விவாதப்பொருளாக மாறியுள்ளது. இவ்விவகாரத்தில் புகார் அளித்திருந்த பெண் அதிகாரி, கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், “அன்றிரவு விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின்போது, நான் இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். உச்ச நீதிமன்றத்தால் அது தடை செய்யப்பட்ட பரிசோதனை என்பதை பின்பே அறிந்தேன்” என குறிப்பிட்டுள்ளததாக சொல்லப்பட்டது.

இந்த இருவிரல் பரிசோதனை என்பது என்ன, இது ஏன் உச்சநீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் சம்பத்குமாரியிடம் கேட்டோம்.

“பெண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்கு இருவிரல் சோதனை (Two finger virginity Test) என்ற முறை கடந்த வருடங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. இப்பரிசோதனை முறையில் எந்தவித உயிரியல் பரிசோதனைகளும் செய்யப்படாது. மாறாக பெண்ணின் கருப்பைவாய்ப் பகுதியை மருத்துவர்கள் கைகளைக் கொண்டு ஆராய்வர். அதன்முடிவில் Hymen (எ) ஹைமன் (தமிழில் கன்னித்திரை  என சொல்லப்படுகிறது) கிழிந்திருப்பதை வைத்து அப்பெண் பாலியல் வன்முறைக்கு உட்பட்டாரா இல்லையா என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இது முற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டது.

Omnicuris - Largest Online Platform for Doctors

ஒரு பெண்ணின் ஹைமன் கிழிவதை வைத்து, அவர் பாலியல் உறவில் இருந்திருக்கிறாரா இல்லையா என நிர்ணயிப்பதும்கூட மருத்துவத்துக்குட்படாத, அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் தான். ஹைமன் என்பது ஒரு பெண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் கிழியக்கூடும். உதாரணத்துக்கு சைக்கிள் அதிகம் ஓட்டுவது, நன்கு விளையாடுவது அல்லது விபத்து ஏற்படுவது என எப்போது வேண்டுமானாலும் அது நிகழலாம். அதற்கும் பாலியல் உறவு, வன்கொடுமை என எதற்கும் சம்பந்தம் இல்லை. இந்த முறை, பாலின நீதிக்கும் முரணானது. இது பெண்களைப் பாகுபடுத்துவதோடு இழிவுபடுத்தவும் செய்யும் ஒரு வழிமுறை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட முடிவுகளாக இவை இருந்துவந்தத காரணத்தால், இதை நீதிமன்றமும் எதிர்த்தது” என்றார்.

உச்சநீதிமன்றம் இதை எதிர்த்தது, கடந்த 2014ஆம் ஆண்டு. ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இதுதொடர்பான விளக்கத்தை அளித்தது. அவ்விளக்கத்தில், ‘இரு விரல் பரிசோதனை, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுவதாக உள்ளது. அந்தவகையில் இந்த இருவிரல் பரிசோதனை மூலம் பெண்ணின் பாலியல் உறவு குறித்த விஷயங்களை அறியமுடியுமென்பது, கற்பனையான விஷயம்’ என்று கூறியது.

The two-finger test continues to traumatise rape survivors in Pakistan -  Comment - Images

இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை பாலியல் வன்முறைக்கு உட்பட்டோரை விசாரிப்பதற்கு சில வரையறைகளை வகுத்தது. அதில் ‘இருவிரல் பரிசோதனை சட்டவிரோதமானது. மேலும் இப்பரிசோதனை மூலம் உண்மையை கண்டறிய முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டது.

உலக சுகாதார அமைப்பும், கடந்த 2018ஆம் ஆண்டு இதே கருத்தை வெளியிட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்ட கருத்தில், “கன்னித்தன்மை சோதனை என்பது, பெரும்பாலும் ஹைமன் தன்மை அல்லது அது கிழிந்த அளவு, மற்றும் /அல்லது கர்ப்பப்பைவாயில் இரண்டு விரல்களை செலுத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாக வைத்து ஒரு பெண்ணின் பாலியல் செயல்பாட்டு வரலாறை அறிவதென்பது, முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மற்றபடி இதன்மூலம் ஒரு பெண் கர்ப்பப்பைவாய் வழியாக உடலுறவு கொண்டாரா இல்லையா என்பதை நிரூபிக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது.

இதன்மூலம் நாம் அறியவேண்டிய கருத்து, மிக எளிமையானது. அது, ‘பெண்ணின் ஹைமன் தன்மைக்கும் அவரின் பாலியல் உறவுக்கும் தொடர்பு உள்ளதென மருத்துவமோ அறிவியலோ சொல்லவில்லை. குறிப்பாக இருவிரல் பரிசோதனை மூலம், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் நிகழந்ததா என்பதை அறிய முடியாது. இவை அனைத்தையும் மீறி ஒரு பெண்ணை இந்த பரிசோதனைக்கு உட்படுத்துவது, பாலின சமத்துவத்துக்கு எதிரானது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது.’

பாலின சமத்துவம் காத்து, சட்டத்தை மதிப்போமாக.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.