விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 திரைப்படம் 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படம் வெளியாகி மூன்றாண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அப்படத்தின் சுவாரஸ்யங்கள் குறித்து பார்ப்போம்.

96… நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் ரசிகர்களை காதலில் உருகவைத்த ஒரு திரைப்படம். 1994-ல் தஞ்சாவூரில் பத்தாம் வகுப்பு படிக்கும் கே.ராமச்சந்திரனுக்கும், அதே வகுப்பின் சக மாணவியான ஜானகிதேவிக்கும் இடையில் துளிர்க்கும் மெல்லிய நேசம், காதலாய் வெளிப்படுத்துவதற்குள் காணாமல் போகிவிட, மனதின் அடுக்களில் பசுமையாய் அலைபோடும் அந்த நேசத்தை, 1996-ம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களின் 22 ஆண்டுகளுக்குப் பிறகான ரீயூனில் வைத்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே துளிர்க்கத் தொடங்குவதுதான் ’96’ கதை.

காதலும், பிரிவும் பேரன்பாய் ரசிகர்களை உருகவைத்த ’96’ படம் இன்றுடன் மூன்றாண்டுகளை நிறைவு செய்கிறது. இன்றைய ஜானு – ராம்-ஐ கொண்டாடி வரும் நெட்டிசன்களுக்காக 96 படத்தின் சில சுவாரஸ்யங்கள் இங்கே…

image

  • ’96’ படத்தின் திரைக்கதை முழுவதையும் 20 நாள்களில் பிரேம்குமார் எழுதியுள்ளார். அதுவும் 2015-ல் சென்னை பெருவெள்ளத்தின்போது தனது அபார்ட்மெண்டில் சிக்கியிருந்த சமயத்தில் எழுதியிருக்கிறார்.
  • தனது ‘பள்ளி ரீயூனியன்’ நிகழ்ச்சியின் இன்ஸ்பிரேஷனில் ’96’ திரைப்படத்தை எழுதியிருக்கிறார் இயக்குனர் பிரேம்.
  • இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த ‘பள்ளி ரீயூனியன்’ நிகழ்ச்சியில் இயக்குநர் பிரேம் கலந்துகொள்ளவில்லை. ஆனால், தனது நண்பர்களுடன் நிகழ்ச்சி தொடர்பாக பேசும்போது அங்கு இரண்டு பழைய காதலர்கள் சந்தித்த தருணத்தை கேள்விப்பட, பின்னாளில் அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களின் காதல் கதையை கேட்டே ’96’ படத்தை உருவாக்கியுள்ளார்.
  • முதலில் ராம் – ஜானு சந்திப்பதையும், அதையொட்டிய நிகழ்வுகளையும் ஒரு வாரத்துக்கு மேல் நடக்கவிருப்பதை போல் காண்பிக்கும்படி படத்தின் கதையை அமைத்திருந்துள்ளார் பிரேம். பின்புதான் இதனை ஒரே இரவில் நடக்கும் கதையாக மாற்றியிருக்கிறார்.
  • ராம், ஜானு கதாப்பாத்திரத்தில் நடிக்க படத்தின் கதையை தயார் செய்தபோதே விஜய் சேதுபதி, த்ரிஷாவைதான் தேர்வு செய்திருக்கிறார்.
  • படத்தில் பெரிதும் பேசப்பட்ட ஆடை வடிவமைப்பை மேற்கொண்டது காஸ்டியூம் டிசைனர் சுபஸ்ரீ. இவர் இயக்குநர் பிரேம்குமாரின் நெருங்கிய நண்பர். பிரேம்குமாரின் ரியல் காதலுக்கும் பெரும் உதவியாக இருந்ததும் சுபஸ்ரீதான்.

image

  • இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தாவுக்கு ’96’ மூன்றாவது தமிழ்ப் படம். என்றாலும் அவரின் ‘ஒரு பக்க கதை’ தாமதமானதால் இரண்டாவது படமாக ’96’ அமைந்தது.
  • ‘காதலே காதலே தனிப்பெருந் துணையே’ பாடல் முதலில் படத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், டீசரில் வெளியான இந்தப் பாடல் ஹிட் அடிக்க, அதன்பிறகே மூன்று நிமிட பாடலாக இதனை உருவாக்கி படத்தில் இணைத்துள்ளனர்.
  • படத்தின் நாயகன் விஜய் சேதுபதி ‘வர்ணம்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் பிரேம் குமாருக்கு அறிமுகமாகியுள்ளார்.
  • இந்தப் படத்தின் தாக்கம் காரணமாக பெங்களூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் ’96 – தனிப்பெரும் காதல்’ என்ற ஒரு புத்தகத்தை எழுத, அதனை இயக்குநர் பிரேம்குமாரே வெளியிட்டார்.
  • அஜித் கதாநாயகனாக நடித்த ‘பிரமே புஸ்தகம்’ என்னும் படத்தை இயக்கும்போது மரணமடைந்த இயக்குநர் ஶ்ரீனிவாசன் நினைவாக கொடுக்கப்படும் ‘கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் தேசிய விருது’-ஐ 2001-ற்கு பிறகு வென்ற முதல் தமிழ்ப் படமாக ’96’ அமைந்தது.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.