எல்லா அணிகளுக்கும் இரண்டு புள்ளிகளை தாமாக முன்வந்து வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் ப்ளே ஆஃபுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான போட்டி நேற்றிரவு நடைபெற்று முடிந்திருக்கிறது. ரிசல்ட் எதிர்பார்த்ததுதான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் அந்த அணி நான்காவது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப்புக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் வழக்கம் போல எதிரணிக்கு கேட்ச்சிங் பயிற்சி கொடுத்து 115 ரன்களுக்கு சுருண்டு போனார்கள். கொல்கத்தாவுக்கு டார்கெட் 116.

ரன்ரேட்டை அதிகப்படுத்தி கொள்ள இந்த போட்டியை 10 ஓவருக்குள் கொல்கத்தா முடிக்க நினைக்கும் என நாம் நினைத்தோம். ஆனால், கொல்கத்தா அப்படி நினைக்கவில்லை. 20-வது ஓவர் வரை மேட்ச்சை இழுத்து சிஎஸ்கே பாணியில் வெற்றிகரமாக முடித்திருந்தனர்.

சன் ரைசர்ஸ் இந்த சீசனில் வெற்றிகரமாக 10 வது தோல்வியை முத்தமிட்டது. இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒரு விஷயமும் இல்லை. எல்லா அணிகளும் களத்துக்கு வந்துதான் தோற்கும். ஆனால், சன்ரைசர்ஸ் ஏலம் எடுக்கப்படும் அந்த கூடத்திலும், வீரர்களின் ட்ரேடிங்கிலும், ரீப்ளேஸ்மெண்ட்டிலுமே கோட்டைவிட்டது. சன்ரைசர்ஸின் தோல்வி அங்கேயே முடிவு செய்யப்பட்டுவிட்டது. தேவையான 4 வெளிநாட்டு வீரர்களை எடுப்பதை விட்டுவிட்டு அத்தனை ஸ்டார் வீரர்களையும் அள்ளிப்போட்டிருந்தனர். டேவிட் வார்னரும், கேன் வில்லியம்சனும் ஒரே அணியில் என்பதே முதலில் ஒரே உறையில் இரண்டு கத்தி போன்ற காம்பினேஷன்தான். கடந்த சீசன்களில் பல போட்டிகளில் அணியில் இடமில்லாமல் வில்லியம்சனை டக் அவுட்டில் உட்கார வைத்து கைத்தட்ட விட்டிருந்தார்கள். இந்த சீசனில் டேவிட் வார்னர் கேலரியில் உட்கார்ந்து கொடியசைத்து கொண்டிருக்கிறார். முகமது நபி, முஜிபூர் ரஹ்மானையெல்லாம் கண்ணிலேயே காட்டவில்லை. சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒரு இந்திய பேட்டர் கூட அணியில் கிடையாது.

மிடில் ஆர்டரின் பிரச்னையை தீர்ப்பதற்காக இராப்பகலாக ஸ்கெட்ச் போட்டு கேதார் ஜாதவை எடுத்து வந்தார்கள். அவரை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மிடில் ஆர்டரில் இறங்கும் இளம் வீரர்களை சரியாக வழிநடத்தும் வகையில் ஒரு சீனியர் பேட்ஸ்மேன்கூட அணியில் இல்லை. வீரர்கள் தேர்விலேயே இத்தனை தவறுகளையும் வைத்துக் கொண்டு அந்த அணி வென்றால்தான் ஆச்சர்யமே தவிர, தோற்பதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் வழக்கமாக எப்படி தோற்பார்களோ அப்படியே தோற்றார்கள்.

துளி கூட சுவாரஸ்யமே இல்லாமல் இந்த போட்டி நடந்து முடிந்திருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு அறிமுக வீரர் கவனம் ஈர்த்திருந்தார். ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டதால் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்காவது வரிசையாக வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நிலைக்கு சன்ரைசர்ஸ் வந்துவிட்டது. அந்த வகையில் நேற்று உம்ரான் மாலிக் எனும் வேகப்பந்து வீச்சாளரை ப்ளேயிங் லெவனில் எடுத்திருந்தனர்.

கேன் வில்லியம்சன் நான்காவது ஓவரை உம்ரான் மாலிக்கின் கையில் கொடுக்கும் வரை சன்ரைசர்ஸில் இப்படி ஒரு வீரர் இருக்கிறாரா என்பதே பலருக்கும் தெரியாது. உம்ரான் வீசிய முதல் பந்திலேயே ஷுப்மன் கில் ஒரு பவுண்டரி அடித்தார். எதோ ஒரு அறிமுக பௌலர், கொல்கத்தா இவரை டார்கெட் செய்து ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ள போகிறது என்றே தோன்றியது. ஆனால், அவர் வீசிய மூன்றாவது பந்திலேயே அந்த எண்ணத்தையெல்லாம் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டார்.

Umran Malik

உம்ரான் மாலிக் வீசிய அந்த மூன்றாவது பந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தையுமே ஈர்த்தது. யார் இந்த உம்ரான் மாலிக் எனத் தேட வைத்தது… அந்த பந்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

உம்ரான் மாலிக் வீசிய அந்த பந்தின் வேகம் 150 கி.மீ. அதுதான் ஸ்பெஷல். UAE மைதானங்கள் மெதுவாக இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களும் 110-120 கி.மீ வேகத்துக்குள் வீசவே விருப்பப்படுகின்றனர். அதுதான் பேட்டர்களை தடுமாறவும் செய்கிறது. ஆனால், அத்தனை வேகப்பந்து வீச்சாளர்களும் அப்படி 120-யிலேயே வீசுவதை பார்க்கும் போது ஒரு அயர்ச்சிதான் உண்டானது. என்னதான் பேட்டர்கள் அந்த ஸ்லோயர் ஒன்களுக்கு தடுமாறினாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்பது போல தோன்றியது. வேகப்பந்து வீச்சு என சொல்லி வீசினாலும் அந்த பந்துவீச்சில் ஒரு விறுவிறுப்பே இல்லை. அதனால்தான், டெல்லி அணியின் நோர்க்கியா வீசும் ஓவர்களை பார்ப்பதற்கு அவ்வளவு ஆவலாக இருக்கிறது. தன்னுடைய சுயத்தை இழக்காமல் 150 கி.மீ வேகத்திலேயே வீசிக்கொண்டிருக்கிறார். இடையில் எப்போதாவது ஒரு முறை மட்டுமே பேக் ஆஃப் தி ஹேண்டிலிருந்து 120-130 கி.மீ வேகத்தில் பந்து வந்து விழும். மற்றபடி எல்லாமே ராக்கெட் வேகம்தான்.

நோர்க்கியாவை போன்றேதான் உம்ரான் மாலிக்கும். கையில் எடுத்த மூன்றாவது பந்தே 150 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்தது. கமென்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த டேல் ஸ்டெய்னே ஒரு நொடி அப்படியே உறைந்து போனார். கடந்து இரண்டு சீசன்களில் இந்திய பௌலர் ஒருவர் முதல்முறையாக 150கி.மீ வேகத்தில் வீசியிருக்கிறார்.

அவர் வீசிய நான்கு ஓவர்களில் இரண்டே இரண்டு பந்துகள் மட்டுமே 140 கி.மீ வேகத்துக்கும் கீழாக வீசப்பட்டிருந்தது. மீதி பந்துகள் எல்லாமே 140+தான். இரண்டு டெலிவரிகள் 150+ கி.மீ. இந்த சீசனில் ஃபெர்குசன், நோர்க்கியா இருவருக்கும் பிறகு வேகமாக வீசியிருப்பது உம்ரான் மாலிக்கே.

குறிப்பாக, 9 வது ஓவரில் நிதிஷ் ராணாவுக்கு ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசியிருப்பார். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளிலும் ராணா தடுமாறியிருப்பார். இத்தனைக்கும் அவை சரியான ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகள் அல்ல. கொஞ்சம் இடம் கொடுத்து வீசப்பட்டவைதான். ஆனால், அந்த வேகத்துக்கு இணையாக நிதிஷ் ராணாவால் பேட்டை வீச முடியவில்லை. கடைசி பந்தில் மட்டும்தான் பந்தை பேட்டால் தொட்டார். உம்ரான் இந்த ஓவரில் இரண்டு வைடுகளை வீசிவிட்டார். அது தவிர்க்கப்பட்டிருந்தால் மெய்டன் ஓவராகி இன்னும் வெறித்தனமாக இருந்திருக்கும்.

4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்திருந்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆனாலும், அந்த வேகத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

உம்ரான் மாலிக் ஒவ்வொரு பந்தை வீசும்போதும் அவர் அடைந்த சந்தோஷத்தை விட, கமென்ட்ரியிலிருந்த இர்ஃபான் பதான் அடைந்த சந்தோஷம் அதிகம். ஏனெனில், உம்ரான் மாலிக் சன்ரைசர்ஸுக்கு ஆட மிக முக்கிய காரணமாக இருந்தவர் இர்ஃபான் பதானே.

Umran Malik

21 வயதாகும் உம்ரான் மாலிக் காஷ்மீரை சேர்ந்தவர். ஜம்மு & காஷ்மீர் அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளராக 2018-ம் ஆண்டு இர்ஃபான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கே இருக்கும் இளம் திறமைகளை கண்டறிந்து பட்டை தீட்டுவதை மட்டுமே அவருடைய வேலையாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களுக்கான வெளிச்சத்தை பெற்றுக்கொடுக்கவும் முயன்றார். திறமையான இளம் வீரர்களை காணும்போதெல்லாம் அவர்களின் பெர்ஃபார்மென்ஸ்களை வீடியோ எடுத்து பல பிரபலமான வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அப்படி, உம்ரான் மாலிக்கின் வேகத்தால் ஈர்க்கப்பட்டவர் அவரின் பந்துவீச்சையும் வீடியோ எடுத்து பலருக்கும் அனுப்பியிருக்கிறார். சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனிடமும் உம்ரான் மாலிக் பற்றி பேசியிருக்கிறார். உடனே சன்ரைசர்ஸின் நெட் பௌலராக உம்ரான் மாலிக் அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் வலைப்பயிற்சியில் டேவிட் வார்னருக்கு உம்ரான் மாலிக் பந்துவீசியிருக்கிறார். உம்ரான் வீசிய ஒரு பந்தை கூட வார்னரால் தொட முடியவில்லை. இந்த சம்பவம்தான் உம்ரான் மாலிக்கை அனைவரும் கவனிக்க காரணமாகியிருக்கிறது. நடராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட அவர் குணமாகும் வரை உம்ரான் மாலிக் ரீப்ளேஸ்மென்ட் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக களமிறங்கி உலக கிரிக்கெட்டில் தனது பெயரையும் அழுத்தமாக பதிவு செய்துவிட்டார்.

உம்ரான் மாலிக் மட்டுமில்லை. சன்ரைசர்ஸின் நேற்றைய ப்ளேயிங் லெவனில் மட்டும் இரண்டு காஷ்மீர் வீரர்கள் ஆடியிருக்கின்றனர். இன்னொருவர் அப்துல் சமத். கடந்த சீசனிலேயே சன்ரைசர்ஸுக்கு அறிமுகமாகிவிட்டார். இவரின் ஐபிஎல் அறிமுகத்திற்கும் இர்ஃபான் பதானே காரணமாக இருந்திருக்கிறார். சமத்தும் நேற்று கவனிக்கத்தக்க வகையில் 25 ரன்களை எடுத்திருந்தார். தோனியே திணறும் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்திருந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாதிரியான ஒரு பிராந்தியத்திலிருந்து இளைஞர்கள் விளையாட்டுகளில் ஜொலிக்க வேண்டியது ரொம்பவே முக்கியம். அது காஷ்மீருக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவுக்கு நன்மை தரக்கூடியது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.